Sunday, October 9, 2011

அனைவரும் மனிதர்களே...

"சார், 122 போயிடுச்சுங்களா?"

மண்டையை பிளக்கும் சென்னை வெயில். பகல் ௨ மணியில் இருந்து ஒரு மணி நேரமாக காத்திருந்ததால் கவனக் குறைவாக விட்டு விட்டேனோ என்ற சந்தேகம் கேள்வியை பிறந்தது.

"வந்தா சொல்றேன் சார், நானும் அந்த பஸ்சுக்கு தான் வெயிட் பண்றேன்."

"ரொம்ப நன்றி சார்... நீங்களும் திருவண்ணாமலைக்கா?"

எங்க போறீங்கன்னு கேட்டா கோவிச்சுக்குவாரோ என்று பதட்டம் வேறு...

"இல்ல சார், கீழ்பெண்ணாத்தூர்." 

கோவிச்சுக்காததால் நிம்மதி அடைந்து இதற்கு மேலும் பேச்சு கொடுக்க வேண்டாம் என்று சாலையை எட்டி பார்த்தேன். ஒரே ஆறுதல், வேறு ஊருக்கும் பேருந்துகள் கண்ணில் படவில்லை என்பது தான். ஏன்டா பல்லாவரம் வந்தோம் என்று ஆனது. நேரம் மிச்சமாகும் என்று வந்தது வெயிலில் வறு படத்தானோ என்று என் மேல் எனக்கே கோபம் வந்தது.

கந்தலாகிய ஒரு பாட்டி, ஒட்டிய விழிகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தார்கள். மாதக் கடைசியில் தர்மம் செய்யும் எண்ணம் மேல்பையில் எட்டி பார்த்து இல்லையே என்று ஆதங்கப் பட்டது. இல்லை என்று சொல்ல வாய் எழாததால் சற்று நகர்ந்து முன்னேறி சென்றேன். மீண்டும் சாலையை எட்டி பார்த்தேன். ஒரு வேளை, கடிகாரம் ஓடவில்லையோ? காத்திருத்தலின் வழிக்கு சந்தேகக் கேள்விகள் ஆறுதல் தர முயற்சித்தன. பதிலுக்கு சுற்றும் முற்றும் பார்த்தேன். அருகில் இருந்தவரிடம்,

"சார், டைம் என்ன சார்?"

"மூனே கால் சார்", காத்திருத்தலின் வலி அவருக்கும் இருப்பது அவர் பதிலில் தெரிந்தது.

"ரொம்ப நன்றிங்க."

கிடைத்த பதில் மேலும் வலியை ஏற்படுத்தியது. எப்படியோ 4 .30 மணிக்கு பேருந்து ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தது. நான் முன் படிக்கட்டில் ஏறினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். இருக்கைகள் நிரம்பி இருந்தன.

நடத்துனர் அருகில் வந்தார்.

"எங்க சார் போகனும்?"

"திருவண்ணாமலை டிப்போ ஒன்னு கொடுங்க சார்."

காசை வாங்கி, சீட்டை கிழித்து கொடுத்து, பின்பு சில்லறை கொடுத்தார்.

"என்ன சார் லேட்?"

"அதை ஏன் சார் கேக்கறீங்க. பிரதமர் வாஜ்பாய் வராராம். அதுக்கு பந்தோ பஸ்துன்னு சொல்லி அவர் வர்ற பாதையெல்லாம் அடைச்சுட்டு ஒரே அமர்க்களம். அப்புறம் flight லேட்டா வருதுன்னு தெரிஞ்சு இப்ப தான் விட்டானுங்க. திரிசூலம் தாண்டற வரைக்கும் டென்ஷனா தான் இருந்துச்சு. அதான் லேட் சார். சீட்டு எல்லாம் புல் சார். நீங்க வேண்ணா என்ஜின் மேல உக்காந்துக்குங்க."

"ரொம்ப நன்றி சார்"

ஓட்டுனர் ஏனோ பரபரப்பை இருந்தார். நேரத்துக்கு வண்டி போய் சேரலேன்னா மெமோ கொடுப்பாங்களோ? எத்தனையோ கேள்விகள் எழுந்தாலும் அதை மனதின் சுவரில் ஆணி அடித்து மாட்டி விட்டு, பதிலை அறிந்துக் கொள்ளாமலே அநாதையாக்கி விடுகிறேன். அப்படி பட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று.

பேருந்து தாம்பரம் தாண்டியதும், ஓட்டுனர் தன் திறமை அனைத்தும் காட்டி படு வேகமாய் ஓட்ட ஆரம்பித்தார். வேட்டைக்கு கிளம்பும் சிறுத்தை போல சீறி பரந்த பேருந்து லாவகமாக சாலைகளில் சென்று கொண்டிருந்த அனைத்து வாகனங்களையும் முந்தி கொண்டு விரைந்தது. பேருந்தில் இனி ஓட்டுனர் அருகே அமரவே கூடாது என்று சபதம் ஏற்கும் அளவிற்கு சூறாவளியாய் பறந்தது பேருந்து. வேகமாணியை உற்று பார்த்தேன், முள் பூஜ்யத்திலேயே படுத்துக் கொண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தது.

மதுராந்தகத்தில் வேண்டா வெறுப்பாய் நிறுத்தினார் ஓட்டுனர்.

"வழி சீட்டெல்லாம் ஏத்தாதேன்னு சொன்னா கேக்குறானா?"

ஓட்டுனர் வசை பாடிவிட்டு, கடிகாரத்தை பார்த்தார். பரபரப்பாய், ஒலிப்பான் மீது விரல்களை நடனமாட வைத்தார்.

"இவன் எவன்டா? இன்னிக்கு இப்படி பறக்கிறான்", என்று முனுமுனுத்து விட்டு " இருப்பா, டிக்கெட் ஏறுதில்ல" என்று உரத்து குரல் கொடுத்தார்.

நான் காலியான இருவர் இருக்கையில் அமர்ந்தேன். என் பின் இருக்கையில் ஒருவர் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். தம்பதியினர் ஏறி இடம் இருக்கா என்று நோட்டம் விட்டு விட்டு என்னிடம் வந்தார்...

" சார், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி பின்னாடி உக்காந்துக்குறீங்களா?"

என் உள்ளே ஒளிந்து கொண்டிருந்த குழந்தை மனசு ஜன்னலோர இருக்கையை விடாதாடா என்று அடம் பிடித்தது. நான் பின்னால் உட்கார்ந்து இருந்தவரை பார்த்தேன். நன்றாக அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார். வேண்டா வெறுப்பாய் எழுந்து பின்னால் அமர்ந்தேன்.

திண்டிவனத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் முன்பு ஒரு கனரக சரக்கு ஊர்தியை பேருந்து இடது பக்கம் முன்னேற, சரக்கு ஊர்தியின் ஓட்டுனர் சற்று பேருந்து பக்கமாய் வண்டியை ஒதுக்க, பேருந்துக்குள்  மயான அமைதி ஆனது. பேருந்து ஓட்டுனர் பலமாய் முயற்சித்து சாலையை விட்டு இறங்கி, சாலை ஓர மரத்தில் இடிப்பது போல் சென்று, சற்றே மயிரிழையில் பத்திரமாய் மீண்டும் வாகனத்தை கொண்டு வந்தார். மயான அமைதி கலைந்தது...

"பார்த்து ஓட்டுப்பா"
"என்ன அவசரம்?"
"நாங்க எல்லாம் குழந்தை குட்டிக் காரங்கப்பா"
"வேகமாய் போய் என்னத்த கிழிக்கப் போற"
"சாவு கிராக்கி. ஒரு நிமிஷத்துல எல்லாரையும் கொண்ணிருப்பியே!

ஆளாளுக்கு சத்தத்தால் உறுமி அடித்தனர். ஓட்டுனர் முகம் வெளிறி போய் இருந்தது. மரணத்தை மிக அருகில் பார்த்தது எங்களை விட அவர் தான் என்பது அவர் முகத்தில் தெரிந்தது. வண்டியை ஓரம் கட்டி, தண்ணீர் குடித்தார். பின் பயணத்தை தொடங்கினோம்.

சிறுத்தை வேகம் இப்பொழுது எங்கே போனது என்று தெரியவில்லை. இதுவரை பேருந்து ஓட்டியவரா இவர் என்று சந்தேகப் படும் அளவுக்கு மெதுவாய் ஓட்டினார். செஞ்சி தாண்டுவதர்க்கும் பயணிகளின் பொறுமை காணாமல் போவதற்கும் சரியாய் இருந்தது. காணாமல் போன பொறுமை கீழ்பெண்ணாத்தூர் வந்ததும் தொலைந்தே போனது.

"ஏம்பா, பஸ் ஓட்டுறியா? கட்ட வண்டி ஓட்டுறியா?"

"அதானே இப்படி ஓட்டுனா எப்ப போய் சேர்றது?" 

"சீக்கிரம் போப்பா"

முன்னுக்கு பின் முரணாய் எழுந்த கூக்குரல்கள் ஓட்டுனர் சற்று நிமிர்ந்தார். அவருக்கும் நேரமாகி விட்டது என்பதை அவர் முகம் காட்டியது. மிதமான வேகத்தில் வண்டியை எடுத்தார். திருவண்ணாமலை பணிமனைக்கு வந்து சேரும் பொழுது மணி எட்டு ஆனது. பயணிகளை கேட் அருகே இறக்கி விட்டனர். அனாதையாய் விட்ட கேள்விக்கு பதில் கேட்போம் என்று எண்ணம் எழுந்தது. சற்றே காத்திருப்போமே என்று வாசலில் காத்திருந்தேன். எனக்கு எதிரே ஒரு சிறுவனும் ஒரு பெண்மணியும் காத்திருந்தனர். அந்த சிறுவனின் கையில் ஒரு கோப்பை இருந்தது. அவன் முகத்தில் ஏக்கம், துக்கம், மகிழ்ச்சி என்று அனைத்து உணர்ச்சிகளின் கலவையாய் நின்றான். மீண்டும் ஒரு கேள்வி எழுந்து அநாதையானது.

உள்ளே இருந்து பேருந்து ஓட்டுனர் மெதுவாய் நடந்து வந்தார். நான் அவரை நோக்கி செல்லும் முன் அந்த சிறுவன் பாய்ந்து ஓடினான்.

"அப்பா"

"சொல்லுடா"

"என்னப்பா, இன்னிக்கு ஸ்கூல் ல ஆன்னுவல் டே பங்க்ஷன், நீங்க வரணும்னு சொல்லியிருந்தேனே. கண்டிப்பாய் வரேன்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே.."

"மன்னிச்சுடுப்பா. லேட்டாயிடுச்சு."

அந்த குடும்பம் தன் பையனின் வெற்றி குறித்து பேசிக் கொண்டு சந்தோஷமாய் கிளம்பினர். பதில் கிடைத்த சந்தோஷத்தில் நானும்...

14 comments:

அப்பு said...

ஜீவா, மகிழ்ச்சி - இன்னொமொரு வலைப் பூ. நான் இப்போதுதான் பார்க்கிறேன்.
பயணம் எல்லாருக்கும் வாய்க்கும். இதுபோன்ற பல கேள்விகள் கொண்ட பயணங்களும் உண்டு. ஆனால் எல்லாரும் இதுபோல அவைகளை எழுதிவிடுவதில்லை.
அருமையாய் - இருக்கிறது இந்த எழுத்து நடை.
தொடருங்கள்.

குடந்தை அன்புமணி said...

நல்ல பயண அனுபவம்... இதுபோல் எனக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் நேர்ந்திருக்கும்...தொடருங்கள்...

suryajeeva said...

@ அப்பு - நன்றி.

@ குடந்தை அன்புமணி - நன்றி

வம்சி சிறுகதை போட்டிக்கு ஏன் முயற்சி செய்யக் கூடாது என்ற நினைவில் உதித்த விளைவு..

கோகுல் said...

ஆஹா!தோழரே!சொல்லவே இல்ல மூணாவது பதிவு ஆகிடுச்சே!

சொல்லாடல்கள் அருமை!தொடருங்க!
word verification நீக்கலாமே?

ஷைலஜா said...

இயல்பான நடை..வாழ்த்துகள்!

suryajeeva said...

கோகுல் சார், சும்மா விளையாடிகிட்டு இருக்கேன்... சீரியசா நினைச்சுக்காதீங்க...
ஷைலஜா மேடம்.. நன்றி மேடம்

kobiraj said...

அருமையாய் - இருக்கிறது
தொடருங்கள்.

Mohamed Faaique said...

அருமையாக எழுதி இருக்கீங்க சார். நம்ம அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி இவ்வளவு விடயம் இருக்கு.. நாமதான் கவனிப்பதில்லை

suryajeeva said...

@ kobiraj - thanks

@ Mohammed Faaique - thanks

விச்சு said...

கூடவே பயணம் செய்தது போன்ற உணர்வு...

suryajeeva said...

அனைவரும் சேர்ந்து தான் பயணிக்கிறோம் விச்சு, உங்கள் பார்வையில் நான் பார்ப்பதில்லை, என் பார்வையில் நீங்க பார்ப்பதில்லை.. இருவரையும் பார்க்க வைப்பதே படைப்பு

சீனுவாசன்.கு said...

விபத்துக்கு வேகம் மட்டும் காரணமில்லை!நல்ல முயற்சி!வெற்றி பெற வாழ்த்துக்கள்!

சித்திரவீதிக்காரன் said...

தீபாவளி போன்ற நாட்களில் கூட வீட்டில் கொண்டாட முடியாத ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. இக்கதையில் வருவது போல தன் தந்தையின் வருகைக்காக ஒரு குடும்பம் காத்துக்கொண்டேயிருக்கிறது. பயணத்தில் உடன் வந்தது போன்ற நெகிழ்வை தந்தது. அருமையான கதை. வாழ்த்துகள்.

mehrun niza said...

கோபாலகிருஷ்ணா சார் அறிமுகம் பார்த்து வந்தேன். அருமையான கதை படிக்க கிடைத்தது வாழ்த்துக்கள்

Post a Comment