Monday, October 10, 2011

தண்டனை

பனிப் புகையில், அடர்ந்த மரங்களுக்கிடையில் சூரியன் ஒளி வீசி விளையாடிக் கொண்டிருந்தான். சாலையில் இருபுறம் உள்ள மரங்கள் ஒன்றோடு ஒன்றாய் கை கோர்த்து அலங்கார வளைவாய் வரவேற்பு கொடுத்துக் கொண்டிருந்தன. புதிதாய் போடப் பட்ட சாலை, வியர்வை வழியும் கருத்த உழைப்பாளியின் தேகம் போல் பறந்து கிடந்தது. 1996 க்கு பிறகு இந்த சாலையில் 15 வருடங்கள் கழித்து வந்து கொண்டிருந்தாலும், சுற்றுப் புரத்தை நோட்டம் விடவோ, இரசித்து பார்க்கும் மன நிலையில் நான் இல்லை. என் மனம் முழுவதும் பால்வார்த்து வென்றான் என்னும் ஊர் ஆக்கிரமித்திருந்தது.

திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு அடிக்கடி சென்று வந்த காலங்கள் என் கல்லூரி வாழ்வை சார்ந்தவை. கல்லூரிக் காலம் கழிந்து வேளை நிமித்தமாக காஞ்சிபுரத்தில் சேர்ந்து காலம் neutrino வேகத்தில் கடந்து விட்டது. இந்த கால வெள்ளத்தில் என்ன என்ன மாறியிருக்கும்? எது மாறியிருந்தாலும் பால்வார்த்து வேன்றானில் ஏதாவது மாறியிருக்குமா? இல்லை அப்படியே தான் இருக்கும் என்று என் மனம் என்னை நம்பச் சொல்லியது.

என் தொழிற்சங்க நடவடிக்கைகளை கண்டு என்னைப் பழி வாங்க காஷ்மீருக்கு பணி மாற்றம் செய்தனர். எங்கள் சங்கத்தின் தலையீட்டால் அது வேலூருக்கு என்று இடம் மாறியது. என் சங்கத்திற்கு வெற்றி; என் நிறுவனத்திற்கும் வெற்றி. எனக்கோ ஆர்வம். அந்த ஆர்வத்தில் சேர்ந்த முதல் வாரத்திலேயே வேலூரில் இருந்து எனது இரு சக்கர வாகனத்தில் திருவண்ணாமலைக்கு கிளம்பி விட்டேன்.

பால்வார்த்து வென்றான்.
சந்தவாசளுக்கும் போளுருக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
இந்த கிராமத்தை தாண்டி அரை கிலோ மீட்டர் சென்றவுடன் ஒரு பார்வைக் குறைவான வளைவு, மலையின் அடிவாரத்தில் இருக்கும். இந்த இடத்தில் தொடர்வண்டியின் இருப்பு பாதை சாலையை கடந்து செல்லும். மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் ரயில்வே கேட் போடப்பட்டு இருக்கும். இதை கண்காணிக்கும் காப்பாளரின் அறை தான் என் மனதில் சொக்கப் பணை போல் கனன்றுக் கொண்டிருந்தது. காட்டில் தனியாக கருங்கல்லால் கட்டப்பட்டு, எதோ இனம்புரியாத சந்தோஷத்தை அளித்திருந்தது. அப்பொழுதெல்லாம் ஏனோ என் மனதில் அங்கு அமர்ந்திருந்த காப்பாளரை என்றுமே நினைத்ததில்லை.

கால வெள்ளம் கந்தர்வன், வைரமுத்து, மேலாண்மை பொன்னுச்சாமி, சின்னப்ப பாரதி, தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் எழுத்துக்கள் என்னை கூழாங்கல்லாய் செதுக்கியிருந்தது. அழகியல் தவிர்த்து மனிதம் பார்க்க கற்பித்து இருந்தது.

பச்சை வண்ண வரப்புகள் கட்டம் கட்டிய மஞ்சள் நிற நெல்மணி பயிர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் மண்ணை நேசிக்கும் விவசாயியின் செந்நீரை அம்பலப் படுத்தியது.

தீபாவளி பட்டாசுகள் வானத்தில் கவிதை எழுதி முடிக்கும் பொழுது, அதனுள் சிந்திக் கிடந்த குழந்தைகளின் வியர்வை முத்துக்கள் தூறலாய் விழுவது மனதில் சம்மட்டியாய் இறங்குகிறது..

நடு இரவில் தூரத்து சோடியம் விளக்கு வெளிச்சத்தில் தனியாக நடந்து செல்லும் அமைதியில் சொந்தக் காசில் பெட்ரோல் போட்டு ரோந்துக்கு செல்லும் காவலர் லஞ்சம் வாங்குவது தவறில்லை என்று மனம் தீர்ப்பு எழுதுகிறது...

இன்னும் எவ்வளவோ
யோசிக்க யோசிக்க கவிதையாய் வார்த்தைகள்...

என் இருசக்கர வாகனம் 45 க்கும் 50 க்கும் என்னை போலவே குழப்பத்துடன் நிதானமாய் பயணித்துக் கொண்டிருந்தது. பேசலாமா? வேண்டாமா? தவறாக ஏதும் நினைத்துக் கொள்வாரா? நட்புடன் பழகுவாரா? போடா என்று சொல்லி விடுவாரா? என்று எழுந்து நின்ற கேள்விகளை சமாதானம் செய்து உட்கார வைத்தேன்.

நிறைய மாற்றங்கள். கருங்கல் அறை இடிக்கப் பட்டு நவீனமாய் அறையை கட்டியிருந்தார்கள், சில குரங்குகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தன. மிதிவண்டியில் இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். குரங்குகள் காலி இளநீர் மட்டையை ஆராய்ச்சி செய்துக் கொண்டும், இன்னும் சில மட்டைகளை எதிர்பார்த்து இயங்கிக் கொண்டிருந்தன. ஒரு மகிழுந்தில் வந்த குடும்பம் இளநீரை சுவைத்துக் கொண்டிருந்தார்கள். இளநீர் வியாபாரியின் சுறுசுறுப்பு, இளநீரை சீவும் பொழுது தெறிக்கும் நீரில் தெரிந்தது.

காப்பாளர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். தொலைபேசி அந்த ரம்மியமான சூழலை இரக்கமே இல்லாமல் கத்திக் கெடுத்தது. அவர் எழுந்து சென்று பேசிவிட்டு கேட்டை இறக்கி விட்டார்.

நான் மெதுவாக அவர் அருகே சென்றேன். அவர் என்னை பார்த்தார். அந்த கண்களில் ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

"என்ன சார்?"

அவர் கண்களில் வியப்பில் முங்கிய கேள்வி.

"ஒண்ணுமில்லை சார், உங்க கிட்ட கொஞ்சம் பேசலாம்னு..." என்று இழுத்தேன்..

"சொல்லுங்க சார்"

"எப்படிங்க உங்களால இப்படித் தனியா உக்காந்து கிட்டு இருக்க முடியுது?"

"பொழப்பே அதான சார்," என்று கூறிவிட்டு என்னை பார்ப்பதை தவிர்த்தார். இளநீர் அருந்தும் குழந்தைகளை பார்த்து விட்டு மீண்டும் என்னை நோக்கினார். ஏக்கம் கலந்த அந்த பார்வையில் பழைய கேலித் தொனி வந்து உட்கார்ந்துக் கொண்டது. அவரே தொடர்ந்தார்.

"என் சம்சாரம் கூட என்ன இப்படி கேட்டதில்ல சார்? கஷ்டமாத் தான் இருந்தது. சேர்ந்த புதுசுல ரேடியோ கொண்டாந்துடுவேன். இயந்திரம் மாதிரி இப்படியே வாழ்ந்தது போவ போவ கஷ்டமாயிடுச்சு. அப்புறமா இயற்கையை கவனிக்க ஆரம்பிச்சதிலிருந்து மனுஷனா வாழ முடியுது சார்."

"இயற்கை எப்படிங்க உதவி பண்ணுது."

"சார்... நேத்து பாத்தா சூரியனை அதே மாதிரி இன்னைக்கும் பாக்க முடியுமா? அதோ உக்காந்திருக்கே ஒரு குருவி அது நாள் பூரா அங்கேயே உக்காந்திருக்குமா? நாளைக்கும் இதே நேரத்தில வருமா? தெரியாதே! இளநீர்காரன் தினம் ஒரே மாதிரியா இருக்கான். நல்ல வியாபாரம்னா நக்கலா பேசுவான். வியாபாரம் ஆகலேன்னா எரிஞ்சு விழுவான். இயற்கையை அங்குலம் அங்குலமா ரசிச்சு பாருங்க சார். இயந்திரத்தனமான வாழ்க்கை தொலைஞ்சு போயிடும் சார்."

"சரியா சொன்னீங்க. ஆனா உங்கள மாதிரி இல்லாம வாழ்க்கையை இயந்திரமா மாத்திகிட்ட எத்தனையோ பேர் சிடுசிடுன்னு எரிஞ்சு விழறதை பல தடவை பார்த்திருக்கேன்."

"இன்னும் கொஞ்ச நேரத்தில ஒரு பஸ் வரும். அந்த டிரைவரோட நடவடிக்கையை பாருங்க. எனக்கு இவனுங்களை பாத்தா கோபம் வரதில்ல சார். பரிதாபம் தான் வரும். வாழத்தெரியலடா  உங்களுக்கு அப்படின்னு நினைச்சுக்குவேன்."

எனக்கு சிரிப்பு வந்தது. அவரும் சிரித்தபடியே தொடர்ந்தார்...

"என்னை விடுங்க சார். நிறைய இடத்தில ரயில் போக்குவரத்து அதிகம் இல்லாத தடத்தில எல்லாம் கேட் போட்டு வேலையே இல்லாம இருக்கிறவங்க நிறைய பேர் சார். வேளை செய்றது கஷ்டம் இல்ல சார். வேலையே செய்யாம வேளை செய்றது ரொம்ப கஷ்டம் சார்."

இந்த தடவை சத்தமாகவே சிரித்து விட்டேன்.

"ரொம்ப படிப்பீங்களோ. கலக்குறீங்க"

"அதெல்லாம் ஒரு காலம் சார். இப்ப எல்லாம் இந்த வாலிபர் சங்க பசங்க வருவாங்க. அதோ பாருங்க மலை மேல பாறையில சுண்ணாம்புல எழுதி இருக்குல்ல அது அவனுங்க வேளை தான். அவங்க ஏதாவது புக்க வித்துட்டு போவானுங்க. இப்ப எல்லாம் அவங்க புக்குங்களை தான் படிக்கிறேன். சமயத்தில நினைச்சுக்குவேன். நம்மள விட பனியில நிக்கிற மிலிடரி ஆளுங்க, பயங்கரமான கட்டுல கொசு பூச்சி தொல்லைக்கு நடுவில வாழுற பாரஸ்ட் ஆபீசருங்க, செல் போன் டவர் அமைக்கப் போற தொழிலாளிங்க இப்படி நிறைய பேர் கஷ்டப் பட்டு கிட்டு தான் இருக்காங்க. அவங்களை விட நாம மேல்னு நினைச்சுக்குவேன்."

"அவங்களுக்காவது பேச்சுத் துணைக்கு ஆள் இருக்கு. உங்களை மாதிரி உள்ளவங்களுக்கு?"

"ஏன் சார் நீங்க வேற? நிம்மதியா இருக்கலாமேன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டு இருந்தா, கேடுத்துடுவீங்க போலிருக்கே!"

அவர் கேலியாக குறிப்பிட்டாலும் உண்மை தானே என்று மனசு என்னை திட்டியது. அவரே தொடர்ந்தார்.

"சார், தற்கொலை செஞ்சுகிட்டா என்ன கிடைக்கும்?"

"உயிர் பிழைச்சா தற்கொலை முயர்ச்சின்னு தண்டனை. செத்து போயிட்டா ஒரு நிமிஷம் வலி."

"போங்க சார், நான் சொல்லட்டுமா! தற்கொலை செஞ்சுகிட்டா உங்க குடும்பத்துக்கு லட்சம் லட்சமா பணம் வரும். புகழ் வரும். வருஷா வருஷம் கண்ணீர் அஞ்சலி. வாரிசுக்கு அரசாங்க வேளை. என்னை மாதிரி ஒரு தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையை விட கொடுமையான தண்டனை."

"புரியலீங்க"

"சார், காஞ்சிபுரம் அரக்கோணம் ரோட்டுல போயிருக்கீங்களா?"

"அடிக்கடி போயிருக்கேன்."

"அகரம்னு ஒரு கிராமம் இருக்கு, தெரியுங்களா?"

"தெரியுமே. அங்க ஒரு கோயில் கூட இருக்கே. அதானே?"

"கரெக்ட் சார். ஏழு  வருஷம் முன்னாடி ஒரு பதினாறு பேர் வேன்ல போய் ரெயில்ல மாட்டி செத்தாங்களே, நினைவு இருக்கா?"

"ஞாபகம் இருக்காவா? அன்னிக்கு நான் அங்க தானே இருந்தேன். அது மட்டுமா அந்த சம்பவம் நடந்த ஒரு மாசம் முன்னாடி தான் ஷேர் ஆட்டோ ல போய் பதினாலு பேர் செத்து போயிருந்தாங்க."

"சரியா சொன்னீங்க சார். இப்ப சொல்லுங்க, தற்கொலைக்கு நான் சொன்னது எல்லாம் கிடைச்சுதா?"

"சத்தியமா புரியலீங்க"

"விவரமாவே சொல்றேன் சார். அங்க ட்ராக் எப்படி போகும்?"

"ரோட்டை ஒட்டியே போகும்"

"கரெக்ட் சார். நீங்க ரோட்டில போனீங்கன்னா, உங்க கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முன்னாடியும் பின்னாடியும் ட்ரெயின் வந்தா தெரியும். அப்படி இருக்கும் போது கொழுப்பு எடுத்து போய் ட்ரைன பாத்துகிட்டே போய் ட் ரெயினுக்கு நடுவில விட்டுட்டு செத்து போய் கொன்னுட்டாங்க கொன்னுட்டாங்கன்னு சொன்னா என்ன சார் நியாயம். தெரிஞ்சே செத்து போனதுக்கு அரசாங்கத்துல என்ன கொடுத்தாங்கன்னு தெரியும் இல்ல சார்"

குழப்பத்தில் இருந்த நான், திகைப்பில் ஆழ்ந்தேன். எவ்வளவு பெரிய உண்மை, சாவோம் என்று தெரிந்தே தலையை கொடுத்தால் அதை தற்கொலை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.

கேட் அருகில் இருந்து கடினமான குரல் ஒலித்தது. "புறம்போக்கு, அதுக்குள்ளே கேட் போட்டுட்டியா?"

"நான் சொல்லல சார். இயந்திர வாழ்க்கை வாழ்றவன்னு, வந்துட்டான். இனிமே சுப்ரபாதம் தான்."

தூரத்தில் தொடர்வண்டியின் சத்தம் கேட்டது. வேகமாய் போனாலும் விவேகம் இல்லாமல் செல்லும் தொடர்வண்டி சரக்குகளை ஏற்றி கொண்டு எக்காளத்துடன் கடந்து சென்றது. காவலர் கடமையில் மூழ்கினார்.

"கஸ்மாலம். அதான் பூடுச்சில்ல. கேட்டை தூக்கறது."

ஓட்டுனரின் குரல், அதே போல் எரிச்சலுடன் இருந்த பயணிகளையும் தூண்டி விட்டு சல சலப்பை ஏற்படுத்தியது.

காவலர் தொலைபேசியில் பேசிவிட்டு கதவைத் திறந்தார். பொறுமை மறந்த வாகனங்கள் கத்தி காதை கிழித்து முன்னேறி கண்காணாமல் சென்று மறைந்தது.

காவலர் மெதுவாய் நெருங்கி வந்தார்.

"என்ன சார். இன்னும் என்ன யோசனை?"

"இல்ல. தற்கொலைக்கு.. தண்டனை... யாரோ... ஒரு தொழிலாளிக்குன்னு..."

எப்படி சொல்வது என்று தெரியாமல் மொழி விழி பிதுங்க, உதவிக்கு அவரே வந்தார்...

"அதுவா சார். செத்தவன் ஒரு நொடி தான் சார் வேதனை பட்டிருப்பான். அங்க ஆளில்லா ரயில்வே கேட் இருந்ததினால தான் இந்த மாதிரி விபத்து ஆச்சுன்னு சொல்லி, என்னை மாதிரி ஒரு தொழிலாளியை பேச்சுத்துணைக்கு ஆளில்லாத போட்டால் காட்டில் இந்த மாதிரி ஒரு ரூம் கட்டி சிறை வச்சிருக்காங்க."

பிற்சேர்க்கை: இது நடந்த சம்பவங்களை வைத்து எழுதப் பட்ட கற்பனை கதை.

2 comments:

Post a Comment