Wednesday, October 19, 2011

மிச்சம்...

22:09:2011
05:31
நான் கண்விழித்து பார்ப்பதற்கும், என் அலைபேசி என்னை எழுப்ப குரல் எழுப்புவதற்கும் சரியாக இருந்தது. நிசப்த அமைதியை கிழிக்க இருந்த சத்தத்தை கொலை செய்து அமைதியை காப்பாற்றினேன். வழக்கமாய் ஆறரை மணிக்கு வேலைக்கு செல்ல முயல்பவன் இன்று ஆறு மணிக்குள் கிளம்ப தயாராகி விட்டேன். விடியலின் மெல்ல நீல நிற ஒளியில் உறங்கிக் கொண்டிருந்த மகனை பார்த்தபடி சத்தம் போடாமல் கிளம்பி கொண்டிருந்தேன். என் கால்சட்டையை போட்டுக் கொண்டு, இடுப்பு பட்டை அணியும் பொழுது மிகவும் மெல்லிய பட் என்ற சத்தம் எழுந்தது.

என்னையும் அறியாமல் ச்சே என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லி விட்டேன்..

"அப்பா", என்றான் என் மகன்.

"என்னப்பா?" என்றேன் அவனருகில் குனிந்து.

"நாளைக்கு என் பிறந்த நாள்பா. இது வரைக்கும் என் பிரண்ட்சுக்கு எந்த சாக்லேட்டும் கொடுத்ததில்லப்பா. நாளைக்காவது நான் தரமுடியுமாப்பா?"

"பார்க்கலாம் பா"

"அப்படின்னா முடியாதுன்னு தானே அர்த்தம்."

நான் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்தேன். வழக்கமாய் காலாண்டு தேர்வு விடுமுறையில் வரும் அவன் பிறந்த நாள் சமச்சீர் கல்வி பிரச்சினையால் பள்ளி கூட நாளாகி போனதால் இந்த வருடம் இது எனக்கு புதிய தலைவலி.

காஞ்சிபுரத்தில் பரணி மருந்து கடை எதிரே உள்ள பிரபல உணவகத்தில் பரிமாறுபவர் வேலை. கிடைக்கும் சம்பளம் வாழ்க்கைக்கே சரியாக இருந்தது. டிப்ஸ் கொடுப்பது அந்த உணவகத்தில் தடை செய்யப் பட்டிருந்ததால் சில எதிர்பாரா செலவுகள் சேமிப்பில் தான் கை வைக்கும். இந்த மாதம் விடுமுறை நாளாக இருக்கும் என்று கணக்கு போட்டு செலவு செய்து விட்டதால் சங்கடத்தில் சிக்கி கொண்டேன் நான்.

மஞ்சள் நீர் கால்வாயை தாண்டி செல்கையில் அதன் நாற்றம் என் மூக்கை துளைக்காத அளவு என் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. புட்டு விற்கும் கடைக்காரன் வியாபாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தது. கோவிலுக்கும் ஓட்டலுக்கும் நடுவே உள்ள மூத்திர சந்தில் மிதிவண்டியை நிறுத்தினேன். ஈக்களுடனும்  நாய்களுடனும் போட்டி போட்டுக் கொண்டு குப்பை தொட்டியை ஆராய்ந்து கொண்டிருந்தான் மணி.

"என்ன மணி? எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேம்பா! நீ எப்படி கீற?"

"ம், வழக்கம் போல மூணு மணிக்கு வந்து சாப்பாட்டு போட்டலம் வாங்கிட்டு போயிடு. நேத்து மாதிரி மறந்துடாத"

வேலைக்கு சேர்ந்த புதிதில் நானும் மணியை அவ்வளவா கண்டு கொண்டதில்லை. ஒரு நாள் எதேச்சையா பேச்சுக் கொடுத்த பொழுது தான் தெரிந்தது, அவன் கதை.

"ஏம்பா, இதெல்லாம் ஒரு புழப்பா? ஒழுங்க ஒழைச்சு சாப்பிடலாமில்ல"

"நானா சார் வேணான்றேன். திருட்டு பயல்னு யாரும் வேலைக்கு சேக்க மாட்டேங்கிறாங்க"

"திருட வேற செஞ்சியா?"

"வழக்கமா எல்லா திருடனும் ஆரம்பிக்கிற மாதிரி தான். என் பொஞ்சாதிக்கு காச நோய் வந்து, ஜி எச்சுல மருந்து கிடைக்காம மருந்து கடையில மருந்து வாங்க கல்லாவில் கை வைக்கிற மாதிரி ஆயிடுச்சு.. அதுக்கப்புறம் எங்கயும் கை வைக்கல இருந்தாலும் திருடன்னு பேர் வந்துடுச்சு. புள்ள குட்டிங்கள காப்பாத்தணும் இல்லையா,"

மனம் கனத்தது.

"உன் பேர் என்னப்பா?"

"மணிகண்டன் சார், மணின்னு கூப்பிடுவாங்க"

அன்றிலிருந்து இன்று வரை உணவகத்தில் எனக்கு தரும் மதிய உணவை பொட்டலமாக கட்டி அவனிடம் கொடுத்து விடுவேன். காலையில் இருந்து சாப்பாட்டை பார்த்து பார்த்து சாப்பிடும் ஆசையே போய் விட்டதும் ஒரு காரணம். வித்தியாசமா காலையில் எதிர் கடையில் கிடைக்கும் புட்டு மாதிரி சாப்பிடலாம்னா மேல் சட்டை பை அனுமதிப்பதில்லை.

உணவகத்தில் நுழையும் பொழுது காலை 6:30 மணி. முதலாளி கல்லா அருகே அமர்ந்து கொண்டு தரையை கழுவி விடுபவர்களை விரட்டிக் கொண்டிருந்தார்.  

"என்னடா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட?"

"சீக்கிரம் எழுந்துட்டேன் முதலாளி. வீட்டுல இருக்க பிடிக்கல அதான் முன்னாடியே வந்துட்டன்"

"சரி சரி போய் வேலைய பாரு"

"முதலாளி" என்று இழுத்தேன்.

என்ன என்பது போல் பார்வையிலேயே கேட்டார்..

"ஒரு நூறு ரூபா அட்வான்ஸ் கொடுத்தா நல்லா இருக்கும் முதலாளி. நாளைக்கு என் பையன் பிறந்த நாள். ஸ்கூல்ல மிட்டாய் கொடுக்கணுமாம்"

"நீ ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியிருக்க. ராத்திரி பாக்கலாம்."

அவர் சொல்லிய பதில் என்னை குழப்பத்தில் தான் தள்ளியது. இருந்தாலும் சுதாரித்து கடமை என்ற சீருடை அணிந்து பம்பரமாகி போனேன்.

யார் யாரோ செய்த தவறுக்கெல்லாம் திட்டுக்களை வாங்கிக் கொண்டு, சுரணையற்ற ஜடமாய் மாறிப் போனேன்.

நடு நடுவே நண்பர்களிடம் கேட்ட பணம் மாதக் கடைசி என்று ஒவ்வொரு முறையும் கன்னத்தில் அறைந்தது.

இரவு நெருங்க நெருங்க ஆட்கள் குறைய குறைய என் மனம் முழுவதும் என் மகன் தான் ஆக்கிரமித்திருந்தான். அவன் நண்பர்களுக்கு கொடுக்கும் இனிப்பு இருக்கட்டும். இன்று செய்த ஏதேனும் இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்று மிச்சம் இருந்தால் அதை கொண்டு போய் கொடுத்தால் கொஞ்சம் சமாதானம் ஆகுவானே என்ற எண்ணம் தலை தூக்கியது.

அடுக்களைக்குள் புகுந்தேன்.

"மாஸ்டர், இன்னிக்கி போட்ட ஸ்வீட் ஏதாச்சும் மிச்சம் இருக்கா?"

"ரெண்டு குளோப் ஜாமுன் இருக்குப்பா"

"ரைட் அதை அப்படியே எடுத்து தனியா வச்சிடு. முதலாளி கிட்ட கேட்டுகிட்டு எடுத்துகிட்டு போறேன்."

" பையனுக்கா. ரைட் ரைட்..."

"தேங்க்ஸ் மாஸ்டர்"
என்று கூறிவிட்டு அப்பாடா என்று உணவகத்துள் வந்தேன். எனக்கு ஒதுக்கப் பட்ட மேஜையில் ஒரு இளம் தம்பதியர் வந்து அமர்ந்தனர்.

குடிக்க நீர் வைத்து விட்டு உணவு பட்டியலட்டையை கொடுத்தேன். 
அட்டையை படித்து விட்டு,

"எனக்கு ஒரு காப்பி"

"அவங்களுக்கு ஒரு செட் குளோப் ஜாமுன்"

எதுவும் பேசாமல் அமைதியாக வந்தேன். மாஸ்டரிடம் ஒரு காபி போட சொல்லி விட்டு யோசித்தேன். பாசமா கடமையா என்ற பட்டிமன்றத்தில் வென்றது என்னவோ கடமை தான். மெதுவாக எனக்கு ஒதுக்கிய குலோப் ஜாமுனை தட்டில் வைத்து குளம்பி குவளையை எடுத்து கொள்ளும் பொழுது  மாஸ்டரின் பரிதாப பார்வையை தவிர்த்தேன். தம்பதியரிடம் கொடுத்தேன். அறை மணி நேரம் அந்த குலோப் ஜாமுனை மெதுவாக சின்ன சின்ன அளவாக கரண்டியில் வெட்டிய படி இருந்த அந்த பெண்மணி கடைசியில் சாப்பிட்டது ரெண்டே வாய் தான். பிடிக்கல என்று சொல்லியது மட்டும் காதில் விழுந்தது. இருவரும் எழுந்து பணம் கொடுத்து விட்டு சென்றனர்.

மேஜை மேல் அனாதையாக காலி கோப்பையும் வெட்டப்பட்ட குளோப் ஜாமுனும் கிடந்தது. 

ஒரு கணம் மகனின் ஏக்கப் பார்வை நினைவுக்கு வந்தாலும், அதன் பிறகு என் நினைவில் இருந்தவன் மணிகண்டன் தான்.

9 comments:

ராக்கெட் ராஜா said...

touching sir nice i like it

ஆமினா said...

மனதை தொட்டது. தனக்கு இல்லையென்றாலும் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை இறுதியில் மனிகண்டனை நினைவு கூறும் வரையில் ரொம்பவே டச்சிங்கா இருந்துச்சு சகோ

//பரிமாறுபவர் வேளை//
பரிமாறுபவர் வேலை :-)

Anonymous said...

ரொம்ப பிடித்தது நண்பரே...நானும் திருடப் போகிறாரோ என்று நினைத்தேன்...

Mohamed Faaique said...

///யார் யாரோ செய்த தவறுக்கெல்லாம் திட்டுக்களை வாங்கிக் கொண்டு, சுரணையற்ற ஜடமாய் மாறிப் போனேன்.///

இதுதான் எல்லோர் நிலமையும்.. கொடுமை சார்..

கதை அருமையாக இருந்தது... மனசு கனக்கிறது..

suryajeeva said...

@ ராக்கெட் ராஜா - நன்றி

@ ஆமினா - தவறை சரி செய்து விட்டேன் தோழி

@ ரெவெரி - இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா கதையில...

@ Mohammed Faaique- நன்றி

ராஜா MVS said...

கதை மிக அருமை நண்பா... இன்றுதான் படிக்கமுடிந்தது... நண்பா...

சித்திரவீதிக்காரன் said...

வறுமையிலும் அவரது நேர்மை என்னை வணங்கச்செய்கிறது. கதை நன்றாக உள்ளது.நன்றி.

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

மணியின் நிலைமை கொடுமை தான்... கண்டிப்பாக உங்களுக்கு அந்த காணொளி நேற்று பார்த்த பொழுது உங்கள் மனது கனக்க செய்திருக்கும்...

பிள்ளைக்கு ஒரு வருடத்திருக்கு ஒரு முறை வரும் பிறந்த நாளுக்கு ஒரு ஸ்விட் வாங்கிகூட கொடுக்க முடியாத நிலை.. இது போல எத்தனை பேருக்கோ இந்த நிலைமை... மனதை வலிக்க செய்ய வைத்த கதை...

மணி திருடியவன் அல்ல... கதையின் நாயகன் தான் திருடியவன்...இந்த கதையை படிப்பவரின் மனதை திருடியவன்... மிக அருமையான கேரக்டர்...

இந்த வறுமையை நினைக்கும்பொழுது நான் வாய்ப்பிற்க்காக பட்டினி கிடந்து வறட்டு கவுரவத்துடன் வீட்டிலோ, நண்பர்களிடமோ கையேந்தாமல் அலைந்த நாட்கள் ஞாபகத்திற்கு வருகிறது... அதெல்லாம் அனுபவித்தவர்களுக்கே இந்த வலியை உணர முடியும்.... கதை மிகவும் பாதித்தது சகோ.... மிக அருமையாக வாசிக்க தூண்டும் விதமாக எழுத்து நடையை கொண்டு சென்றமைக்கு பாராட்டுக்கள் சகோ!

Post a Comment