Wednesday, November 2, 2011

இதுவும் கடந்து போகும்

டிங் டாங்...
இந்த சத்தத்தை கேட்பதற்காகவே நான் ரயில் நிலையம் சென்ற காலங்கள் உண்டு... ஆனால் இன்று அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை.. ஹைதராபாத்தில் வேலை முடிந்து தீபாவளி விடுமுறைக்கு, வேலூரில் இருக்கும் குடும்பத்தை பார்க்க கிளம்பி விட்டேன்..

காச்சிகுடா ரயில் நிலையத்தில் எட்டு மணிக்கு கிளம்பும் தொடர் வண்டியை பிடிக்க டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.. தொடர் வண்டி புறப்பட 15 நிமிடம் இருந்தது. எனக்கு முன்னாள் 5 நபர்கள் இருந்தனர். நேரத்துக்குள் பயண சீட்டை வாங்கி விடுவேனா என்ற கவலை, எதையும் ரசிக்கும் மனநிலையில் என்னை வைக்கவில்லை... எனக்கு தெரிந்த அறை குறை தெலுங்கில் ஏதாவது கேட்கப் போய் வேறு ஏதாவது புரிந்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம், என்னை மௌனமாய் வரிசையில் நொண்டி அடிக்க வைத்தது... எட்டடிக்க ஐந்து நிமிடம் இருந்த பொழுது என் முறை வந்தது..

"ஒக்கட்டி சித்தூர்," என்றேன் காசை நீட்டியபடி..

பொது வகுப்பு பயணங்களை மிகவும் ரசித்த காலம் அது. பெரும்பாலும் முன்பதிவு செய்வதை தவிர்த்து விடுவேன்.. பெரும்பாலும் கூட்டத்தில் சிக்கி கொள்ள நேர்ந்தாலும், படிக்கட்டு பயணங்கள் வாழ்வை இனிமையாக்கி விடும். பக்கத்தில் இருக்கும் மனிதர்கள் தானாகவே ஏதாவது பேசியபடி, பல்வேறு மக்களின் மன நிலையை, வாழ்வு நிலையை கூறி செல்வது பொது வகுப்புகளில் மட்டுமே என்பது என் எண்ணம்...

பயண சீட்டையும், மீதி காசையும் வாங்கி கொண்டு படிக்கட்டுக்களை தாவி ஏறினேன். சிறு வயதில் விளையாடிய கால் பந்தாட்டம், கூட்டத்திற்கு நடுவே வேகமாக ஓட கை கொடுத்தது. நான் கடைசி படிக்கட்டில் இருந்து இறங்கி தளத்தை அடையவும், தொடர்வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.. முதுகில் தொங்கிய பேக்பேக் கொஞ்சம் ஓட்டத்தை தடை செய்தாலும், இன்றைய பயணத்துக்கு இந்த பையை தேர்ந்தெடுத்ததை என்னை நானே பாராட்டியபடி நகரும் வண்டிக்கு அருகே ஓட ஆரம்பித்தேன். கூட்டம் படிக்கட்டில் நிரம்பி வழிந்தது.

ஒரு கையால் கைபிடியை பிடித்தேன், மறுகையால் கழிவறை சாளரக் கம்பியை பிடித்தேன்... தொடர்வண்டியும் நானும் ஒரே சீராக ஓட ஆரம்பித்தோம்..

"எக்கு எக்கு", என்று கூறி என் முதுகில் உள்ள பையை பிடித்து தூக்கி உதவி புரிந்தான் தொங்கி கொண்டிருந்த சக மனிதன்.

"தேங்க்ஸ்", என்றேன் வண்டியில் ஏறிவிட்ட சந்தோஷத்தில்.

"தமிலா", என்றான்.

"அவுனண்டி", என்றேன்.

அதன் பிறகு தொங்கி கொண்டே பயணம். எனக்கு உதவியவன் அவன் ஊர் கதையா கூறிக் கொண்டே வந்தான். எனக்கு தெரிந்த அரை குறை தெலுங்கு என்றாலும் புரிந்து கொள்ள முடிந்தது. நடு நடுவில் நிற்கும் சிக்னலில் இறங்கி, அத்துவான காட்டில் காண சதுரமாய்  கொட்டி வைக்கப் பட்டிருந்த ஜல்லி கற்களின் குவியல் மீது படுத்தபடி, எதிரில் வரும் தொடர்வண்டியை எதிர்பார்த்து காத்திருக்கும் சமயத்தில் விண்மீன்களை ரசித்தபடி, சிக்னல் கிடைத்த பின் மெதுவாய் நகரும் தொடர்வண்டியை மீண்டும் ஓடி எக்கி ஏறி இடம் பிடிப்பது குளிர்சாதன பெட்டியில் இருப்பவர்களுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

கூடூர் வந்ததும்  பாதி கூட்டம் இறங்கியது, உள்ளே சென்று சாளரம் ஓரமாக உட்கார இடம் கிடைக்காமல் கிடைத்த இடத்தில் அமர்ந்தேன். என் எதிர் இருக்கையில் ஒரு சிறுமியும் அவள் தாயும் சாளரம் ஓரமாக அமர்ந்திருந்தனர்.

அங்கங்கே ஒட்டு போட்ட துணிமணியும் பரட்டை தலையும் ஒளி இழந்த கண்களும் இவர்கள் ஏழைகள் என்று பறை சாட்டியது. அந்த சிறுமிக்கு சரியான பசி என்பது அவள் கண்களே உணர்த்தியது. அந்த சிறுமி அவள் அம்மா முகத்தை ஏறிட்டு நோக்கும் பொழுதெல்லாம் குடிக்க நீர் கொடுத்தால். அந்த சிறுமியின் பசிக்கு பொது குழாய் நீர் போதவில்லை என்பது அந்த பெண்ணின் ஏக்கப் பார்வை உணர்த்தியது.

"தீஸ்கோண்டி", என்று என்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை நீட்டினேன்..
அந்த பசியிலும் அந்த சிறுமி அவள் தாயின் உத்தரவை நோக்கி அவள் முகம் பார்த்தாள். அந்த தாயின் தர்மசங்கடம் அவள் நெளிவில் தெரிந்தது. ஏழ்மையிலும் இன்னும் தன்மானத்தை அடகு வைக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லியது நிலைமை. எனக்கு தெரிந்த ஓட்டை தெலுங்கில் ஏதேதோ பேசி அந்த சிறுமியிடம் பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்தேன்.
மேலே பெட்டி வைக்கும் இடம் காலியாக இருந்ததால் அதில் ஏறி படுத்துக் கொண்டேன்.

எழுந்து பார்த்த பொழுது திருப்பதி நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது.. நான் ரசிக்கும் டிங் டாங் காலையில் அருமையாக இருந்தது. காலையில் நிலையத்தை கழிவி விடுவதால் மனித கழிவுகளின் வாடை தூக்கத்தை துரத்தி அடித்தது. நான் கீழே இறங்காமல் அப்படியே படுத்து கொண்டு இருந்தேன். அனைவரும் இறங்கி விட, நானும் அந்த சிறுமியும் அவள் அம்மாவும் மட்டும் இருந்தோம். அந்த சிறுமியின் தாய் என்னை பார்த்தாள். என்னைக் கூப்பிட்டு அந்த சிறுமியை பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு பசியாற்ற நீர் பிடிக்க சென்றாள்.

தொடர்வண்டி புறப்படும் சமயத்தில் நான்கு நபர் கொண்ட குடும்பம் வண்டியில் ஏறினார்கள். ஒரு வயதானவர், ஒரு ஆடவர், ஒரு பெண்மணி, ஒரு ஐந்து வயது சிறுவன். அவர்களின் உடலில் துணியாகவும், நகையாகவும் பணம் வழிந்து ஒழுகியது. அந்த சிறுவனுக்கு ஐந்து வயதா இல்லை ஏழு வயதா என்று தீர்மானிக்க முடியாத அளவு உடல் வாகு.

அது வரை இருந்த ஒரு அமைதி, அவர்கள் ஏறியதால் சிரிப்பு ஒலியிடம்  வெட்கப் பட்டு ஒளிந்து கொண்டது. அந்த சிறுவனின் ஒவ்வொரு சேட்டைக்கும் அவர்கள் சிரித்தனர். தொடர் வண்டி கிளம்பியதும், அவர்களின் பைகளில் வெறும் தின் பண்டங்கள் தான் வைத்திருப்பார்களோ என்று சிந்திக்கும் அளவுக்கு பிரித்து பிரித்து சாப்பிட்டு கொண்டே வந்தனர். அந்த சிறுவன் மட்டும் எதையும் தின்னாமல் கடந்து செல்லும் ஒவ்வொரு மரங்களையும் புதிதாய் வாங்கிய பொம்மை துப்பாக்கியால் சுட்டு கொண்டே வந்தான்.

நான் கீழே இறங்கி காலை கடன்களை முடித்து விட்டு, வாசலருகே நின்றேன். ஜில்லென்ற பனிக் காற்றை கிழித்து கொண்டு சூரிய ஒளி என் உடலில் ஒரு விதமாக விறு விறுப்பு ஊட்டியதை ரசித்தபடி வந்தேன். அந்த நேரத்தில் ஒருவன் சிகரெட் பிடிக்க என் அருகே வந்து தீப்பெட்டியை உரசினான்.

நான் உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தேன். பசியால் அந்த சிறுமி இரவு முழுக்க உறங்கவில்லையோ என்று தோன்றியது. ஒரு பிஸ்கட் பாக்கெட்டை அந்த சிறுவனிடம் நீட்டினான், சிறுவனின் அம்மா.. அந்த சிறுவன் அந்த பிஸ்கட் பக்கெட்டை தட்டி விட்டு அவர்களையும் துப்பாக்கியால் சுட்டான்.
நான் சிறுமியை பார்த்தேன். அவள் பார்வை சிதறிக் கிடந்த பிஸ்கட்டின் மீது இருந்தது. எப்ப சித்தூர் வரும் என்று என் மனம் அழ ஆரம்பித்தது...


தோழர் ஆதி கூறிய one lineஇது.. அவருக்கே இந்த கதை சொந்தம்.. வார்த்தைகளில் கோர்த்தது மட்டும் நான்...

18 comments:

ஸ்ரீராம். said...

ஒத்த வயதுடைய இரு குழந்தைகளுக்கிடையே தான் எவ்வளவு வித்தியாசம்? பொது இடங்களில் இந்த மாதிரி தர்மசங்கடங்கள் ஏராளம்.

veedu said...

கொடியது...இளமையில் வறுமை...

வெளங்காதவன் said...

:-)
:-(

Anonymous said...

எப்ப சித்தூர் வரும் என்று என் மனம் அழ ஆரம்பித்தது//

கூடவே எங்களதும்...

பிடித்தது...

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ.சூர்யா ஜீவா...
மனதை அள்ளிய ஆக்கம்,
வருடிய வார்த்தைகள்,
கோர்த்த விதம் அருமை,
அசத்தல் நடை,
இறுதியில்...நெத்தியடி கருத்து.
நன்றி சகோ.

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

அப்புறம் சகோ.சூர்யாஜீவா,
நான் சொல்ல நினைத்ததை அப்படியே
நச்சுன்னு சொல்லி இருக்கீங்க.

தங்களின் அந்த பின்னூட்டத்தை அப்படியே அங்கிருந்து காபி பேஸ்ட் பண்ணி என் கூகுள் பிளஸ் பக்கத்தில் ஷேர் பண்ணி இருக்கேன். தங்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்ற நம்பிக்கையில். நன்றி சகோ.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
புகைவண்டிப் பயணத்திலும் மனிதாபிமானமற்ற உள்ளங்கள் உள்ளனவே எனும் உண்மையினை இப் பதிவு சொல்லி நிற்கிறது.

பிறர் பார்த்திருக்க கொடுக்காது,
தாம் உண்டு மகிழ்வது கொடுமையல்லவா..

பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை, கண்ணுற்ற காட்சிகளை அழகுறத் தொகுத்திருக்கிறீங்க.

இராஜராஜேஸ்வரி said...

வார்த்தைகளில் கோர்த்தது அருமை.

பாராட்டுக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

கதை அருமை அண்ணே

ஆரூர் முனா செந்திலு said...

அதாவது நீங்கள் அவ்வளவாக அறியப்படாத ஒரு பெரிய எழுத்தாளர் அய்யா. மிகச்சிறந்த ஆக்கம். மனசு வலித்தது. நானும் ஐதராபாத்தில் இருந்து அடிக்கடி பொதுப் பெட்டியில் பயணம் பண்ணியவன் தான். நான் முன்னர் வேலை பார்த்த கம்பெனியின் தலைமை அலுவலகம் அங்கு இருந்ததால் அடிக்கடி வருவேன். நன்றி.

ராஜா MVS said...

கதை மிக அருமை... நண்பா...

படித்து முடிக்கையில் மனம் வலிக்கிறது...
இப்படிப்பட்ட குழந்தைகளை பார்த்திருக்கிறேன் பல இடங்களில்....

கணேஷ் said...

கதையை அருமையாக வார்த்தைகளால் வடிவமைத்து இருக்கிறீர்கள. அதுவும் சிக்னலுக்காக ரயில் நிற்கும் போது கிடைக்கும் அனுபவம் ஏ.சி. கோச்சில் வருமா என்று கேட்கும் வரிகள் இருக்கின்றனவே... நல்ல ரசனை! இதயம் தொட்ட கதை!

RAMVI said...

இது கதையா உங்க அனுபவமான்னு தெரியவில்லை.இருந்தாலும் சோகமான முடிவு,மனதை கனக்கச்செய்தது.

fathinnachiyar said...

பிடித்திருக்கிறது

jayaram thinagarapandian said...

கதை அருமை ..

பால் குடிக்கும் பிள்ளையார்
பாலுக்கு அழும் குழந்தை
இது தான் இந்தியா

Ramani said...

மனம் கவர்ந்த பதிவு
கருவும் சொல்லிச் சென்ற விதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல சரளமான மொழி நடை. வாழ்த்துகள்.

Post a Comment