Tuesday, March 10, 2015

மனிதனை தேடி

"சார் வணக்கம் சார்"
"வாங்க ராஜகோபால். உக்காருங்க!"
"என்ன சார் விஷயம்."
"ஒண்ணுமில்ல உங்களை நம்ம உத்திரமேரூர் வங்கி கிளைக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்காங்க. இந்தாங்க ஆர்டர் காபி"

காலுக்கு அடியில் இருந்த கம்பளத்தை யாரோ உருவி விட்டது போல் சடாரென்று நெற்றி பொட்டில் அடித்தது போல் சொல்ல என் மேலாளரை போல் யாராலும் முடியாது. அந்த ஒரு கணத்தில் ஓடிய எண்ணங்கள் எத்தனை என்பது நிதானமாக உட்கார்ந்து யோசித்தாலும் விடை கிடைக்காத கேள்வியாகவே உள்ளது. 

அணைத்து கேள்விகளையும் புறம் தள்ளி விட்டு முக்கியமான சில கேள்விகளை மட்டும் மனதில் கொண்டு வந்தேன். உத்திரமேரூரில் எனக்கு தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்களா? மேன்ஷன் போன்று ரூம்கள் கிடைக்குமா இல்லை வீடு போல் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா? குடும்பத்தை அழைத்து செல்வது எப்பொழுது? என்று பணியில் சேர வேண்டிய நாள்?

ஆர்டர் காபியை பிரித்து பார்த்தேன். சரியாக ஒரு வாரம் டைம் கொடுத்திருந்தார்கள்.

நேராக வீட்டுக்கு சென்றேன், மனைவியிடம் விஷயத்தை சொன்னேன். என் மனதில் ஓடிய அணைத்து கேள்விகளையும் அவள் சட சட என்று கேட்க ஆரம்பித்தால். அனைத்துக்கும் தெரியாது என்று ஒரே பதிலை சொல்லிவிட்டு கணினியை உயிர்ப்பித்து இணையத்தில் நுழைந்தேன், உத்திரமேரூர் குறித்து படிக்க படிக்க உடனே கிளம்பு என்று ஆவல் கிளம்பியது. வழக்கமாய் சீரியல் பார்ப்பவள் இன்று அதையும் ஒதுக்கி விட்டு ஓரமாய் அமர்ந்து ஓடாத டிவியை பார்த்துக் கொண்டிருந்தாள். 

உத்திரமேரூர் சென்று நிலைமையை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு இரண்டு நாள் தாங்கும் எண்ணத்தில் கிளம்பினேன். 

உத்திரமேரூர் பேருந்து நிலையம் வந்தடையும் பொழுது மாலை பொழுதாகி இருந்தது. முதலில் என் வங்கி கிளைக்கு சென்றேன். அனைவரும் வீட்டுக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தனர். மேலாளரை பார்த்து ஆர்டர் காபியை காட்டினேன். என்னை மேலும் கீழும் பார்த்தார். என்ன பிரச்சினையா இருக்கும் என்று அவர் யோசிப்பது எனக்கு தெரிந்தது. எதுவும் பேசாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.

என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள் என்று சொல்லி விட்டு அவர் வேலையை பார்க்க ஆரம்பித்தார். 

மெதுவாக வங்கியை விட்டு வெளியே வந்தேன். வாடகைக்கு ஏதாவது வீடு கிடைக்குமா என்று பாப்போம் என்று ஊரை சுற்ற ஆரம்பித்தேன். ஒரு தெருவின் முனையில் ஆக்சிஸ் வங்கியின் ATM இருந்தது. அதன் வாசலில் இருந்த செக்யூரிட்டியை பார்த்தவுடன் உள்ளுக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி.

"அண்ணே எப்படி இருக்கீங்க"

"நல்லா இருக்கேன் தம்பி. நீங்க யாருன்னு நினைவில் வரலியே தம்பி" என்றார்.

என் வங்கி கிளையில் அவர் செக்யூரிடியாய் வேலை செய்தததை நினைவு படுத்தினேன். அவர் அங்கிருந்த மூன்று மாதங்களும் அவருக்கு மனசார ஒரு சின்ன வணக்கம் கூட வைக்கவில்லையே என்று மனசை நொந்து கொண்டேன். வங்கி அதிகாரி என்ற திமிர் சக தொழிலாளியாக இருந்தாலும் வேலை தன்மையை வைத்து ஏற்றுத் தாழ்வு பார்க்கும் மன நிலைக்கு என்னை தள்ளி விட்டிருந்தது உறுத்தியது. 

"அப்படியா சார்"

தம்பி என்று விளித்தவர் இப்பொழுது சார் என்று கூறி என்னை மேலும் இம்சை படுத்தினார்.

"அண்ணே, தம்பின்னே கூப்பிடுங்க. இங்க எப்பண்ணே வந்தீங்க? எனக்கு இங்க தான் இடமாற்றம் செஞ்சிருக்காங்க. இன்னும் ரெண்டு மூணு வருஷம் இங்க தான் நானும் இருக்க போறேன், அதான் வாடகைக்கு வீடு தேடி இந்த தெருவுக்குள் புகுந்தேன். உங்களை பார்த்த உடன் சந்தோஷமா இருக்குண்ணே "

"இந்த தெருவில் எந்த வீடும் வாடகைக்கு இல்ல சார்.... தம்பி... வேணும்னா வெள்ளை செட்டி தெருவில் எதோ ஒரு வீடு பார்த்த நினைவு. ராத்திரிக்கு இங்க தங்க வேணாம் தம்பி. நீங்க காஞ்சிபுரம் போய் ஒரு லாட்ஜில் தங்கிட்டு காலையில் வாங்க ரெண்டு பெரும் சேர்ந்து வீடு தேடுவோம்" என்றார்.

"சரிண்ணே", என்று கூறி விட்டு விடை பெற்றுக் கொண்டு அவர் அறிவுரைப் படி காஞ்சிபுரம் சென்றேன்.

காஞ்சிபுரம் சென்று சேர்ந்த பிறகும் எண்ணம் முழுவதும் அவர் நினைவாகவே இருந்தது. அவர் பெயர் என்ன என்று கூட கேட்க மறந்து விட்டேனே. ச்சே என்று என்னை நானே நொந்து கொண்டேன். இரவு சாப்பாடு முடித்து விட்டு என் அறைக்கு திரும்பும் நேரம் என் சக ஊழியரான என் நண்பன் ஒருவன் என் அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

"ஓய், எப்படிடா இருக்கு புது ஊரு?"

"சூப்பர் டா. இப்படி ஒரு ஊருக்கு வருவோம்னு நினைச்சு கூட பாக்கல. எதோ ஒரு நவீன சோழர் ராஜாங்கதுக்குள்ள நுழைஞ்சா மாதிரி இருக்கு. பழமையும் புதுமையும் சேர்ந்தே இருக்குது."

"வேற என்ன விசேஷம்"

"ஆங்.. நம்ம வங்கியில் ஒரு செக்யூரிட்டி ஒருத்தர் மூணு மாசம் மட்டும் வேலை செஞ்சாரே ஞாபகம் இருக்கா. ஹைட்டா திடுமலா பெப்பர் சால்ட் தலைமுடி மற்றும் முறுக்கு மீசையோட." 

"நம்ம திவாகர் சாரா?"

"அவர் பேரு திவாகரா அது கூட தெரியாது ஓய்"

"சொல்லு அவருக்கென்ன?"

"ஒன்னும் இல்ல இங்க ஆக்சிஸ் பேங்க் வாசலில் அவரை பார்த்தேன். நாளைக்கு அவர் தான் எனக்கு வீடு பார்க்க உதவி பண்றேன்னு சொல்லி இருந்தார்.."

"நல்ல மனுஷண்டா. வாழ்க்கையை அனுபவிசுகிட்டு இருக்கார். ஒரு ஊர்ல மூணு மாசம் தான் இருப்பார். நைட்ல செக்யூரிட்டி வேலை செய்வார். பகல்ல ஊர் சுத்தி பார்ப்பார். என்னென்ன பாக்க முடியுமோ எல்லாத்தையும் பாத்துடுவார். பசங்க மனைவிக்கு மூணு மாசத்துக்கு ஒரு தடவை சம்பாதிச்ச பணத்துல எவ்வளவு சேமிக்க முடியுமோ அதை சேமிச்சு அனுப்பி வைத்திடுவார். இன்ட்ரஸ்டிங் ஆசாமி பா."

இவ்வளவு விஷயம் இருக்கா. இது எல்லாம் தெரிஞ்சுக்காம எப்படி இருந்தோம் என்று இரவு நெடு நேரம் உறக்கம் இல்லாமல் புரண்டு படுத்தேனா இல்லை புது இடம் என்பதால் உறக்கம் வரவில்லையா என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. எப்பொழுது விடியும் எப்பொழுது திவாகர் ஐயாவை பார்ப்போம் என்று யோசித்து கொண்டிருந்தேன்.

4 comments:

RAMA RAVI (RAMVI) said...

அருமை. மனிதர்களை மதிக்க வேண்டும் என்பதினை உணர்த்துகிறது.

suryajeeva said...

எழுத நினைக்கும் கதை வேறு ஆனால் எழுத்தில் வரும் கதை வேறாகவே இருக்கிறது.. இது எனது இரண்டாவது முயற்சி... இதிலும் தோல்வியே.. உங்கள் வருகைக்கு நன்றி மேடம்

G.M Balasubramaniam said...

எழுத நினைத்தது வேறு.ஆனால் எழுத்தில் வரும் கதை வேறாகவே இருக்கிறது. படிக்கும்போதே புரிந்து கொள்ள முடிந்தது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். சொல்ல நினைபதைக் கட்டுக் கோப்பாக எழுதுங்கள். சரியாக வரும் வரை. முதலில் நீங்கள் திருப்தி அடைய வேண்டும். வாழ்த்துக்கள்.

suryajeeva said...

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி ஐயா... கனவில் இருக்கும் கதை எழுத்தில் வரும் வரை எத்தனை கதைகளை பிரசவிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை...

Post a Comment