Sunday, March 8, 2015

எதிர் வீடு

"எதிர் வீட்டுக்கு புதுசா யாராவது குடி வராங்களா மா?"

"தெரியலடா... அங்க யார் வந்தா உனக்கு என்ன?"

சமையல் அறையில் அவசர அவசரமாய் டிபன் செய்து கொண்டு இருந்த அம்மாவிடம் கேட்டது தப்பு தான் என்று தோன்றியது. அப்பாவிடம் கேட்கலாமா என்று மனதில் தோன்றினாலும் முதலில் அவர் என்ன மன நிலையில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்வது தான் நல்லது என்று தோன்றியது.

படுக்கை அறைக்குள் எட்டி பார்த்தேன். அப்பா புதிய தலைமுறையில் புது புது அர்த்தங்கள் பார்த்து கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் கேட்டால் எந்த பதிலும் வராது என்று தெரியும். அதனால் பல் தேய்த்து கொண்டே முன்வாசலுக்கு வந்தேன்.

நினைவு தெரிந்த நாளாய் அந்த வீடு பூட்டப் பட்டே இருக்கின்றது, ஒரு பழைய தகரத்தில் வீடு வாடகைக்கு என்று எழுதப் பட்டு அந்த வீட்டு கேட்டில் தொங்க விடப் பட்டு இருக்கும். நல்ல விசாலமான தோட்டம். கொய்யா மற்றும் சப்போட்டா மரங்களின் இருப்பு என்னை போன்ற சிறுவர்களை அந்த வீட்டு தோட்டத்தில் விடுமுறை தினங்களின் புகலிடமாக்கியது. அந்த வீட்டிற்கு என்னை போன்ற சிறுவர்கள் வரக் கூடாது என்பதற்காக கிளப்பி விடப் பட்ட கதைகள் ஏராளம். முதலில் பூச்சி போட்டு என்று ஆரம்பித்து பாம்பு இருக்கு என்று வளர்ந்து இப்பொழுது பேய் பிசாசு இருக்கிறது என்று பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது. 

எது எப்படி இருந்தாலும் எங்களுக்கு அந்த தோட்டத்தில் விடுமுறை தினத்தில் கழிக்கவில்லை என்றால் பொழுது போகாது. 

இன்றோ அந்த பழைய தகர பலகையை காணவில்லை. யாரோ ஒரு வேலைக்கார பெண்மணி வீட்டு முற்றத்தை பெருக்கி கொண்டு இருக்கிறார். சரி அவர்களிடமே கேட்டு விடுவோம் என்று தைரியமாக சென்று கேட்டை திறந்தேன்.

கேட் திறக்கும் சத்தம் கேட்டு அந்த வேலைக்கார பெண்மணி திரும்பி பார்த்தார். 

"அக்கா யாராவது குடி வராங்களா?" வாயில் பேஸ்ட் ஒழுக,

"தெரியலியேப்பா, ஹவுஸ் ஓனர் வீட்டை சுத்தம் செஞ்சு வைக்க சொன்னார். அவ்வளவு தான் எனக்கு தெரியும்" என்று சொல்லி விட்டு தன வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

எனக்கும் பள்ளிக்கு நேரமாகியதால் நானும் வீட்டுக்கு சென்று கிளம்பி பள்ளிக்கு சென்று விட்டேன். பள்ளிக்கு சென்றும் பிரயோஜனம் இல்லை, மனம் பூரா எதிர் வீடு தான் குடி கொண்டு இருந்தது.

புதுசா வரவங்க நம்மள அங்க விளையாட விடுவாங்களா இல்ல திட்டி அனுப்பிடுவாங்களா? அந்த வீட்டுல நம்மள மாதிரி பசங்க யாராவது இல்லாமலா போயிடுவாங்க? புதுசா வர பசங்களை பிரண்ட் புடிச்சுக்க வேண்டியது தான். ஒரு வேலை பொம்பள புள்ள யாராவது வந்துட்டா. அது இன்னும் பெரிய சிக்கல் ஆகிடுமே. வேறு எந்த விஷயமும் என் மூளையில் நுழையாமல் இந்த கேள்விகளே நாள் பூராக ஆக்கிரமித்து கொண்டிருந்தது. 

பள்ளி முடிந்தவுடன் முதல் வேலையாக எதிர்வீட்டை நோட்டம் விட்டேன். யாரும் வந்தது போலவே சுவடு இல்லாததால் வீட்டுக்குள் நுழைந்தேன். 

"அம்மா எதிர்வீட்டுக்கு குடி வந்துட்டாங்களா?"

"தெரியலடா. முதல்ல வீட்டு பாடம் செய்ற வேலையைப் பாரு."

" வீட்டு பாடம் எதுவும் கொடுக்கல மா."

"சரி டீ  குடிச்சுட்டு ஏதாவது படி"

வேலையில் இருந்து அப்பா வரதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. அவருக்கு இந்நேரம் தெரிஞ்சு இருக்கும் என்று முடிவு செய்து கொண்டு விடை கிடைத்து விட்டதாகவே எண்ணி கொண்டு படிக்க உட்கார்ந்து விட்டேன். அப்பா உள்ளே வந்ததும் தான் நேரம் போனதே தெரிந்தது. இரவு நெருங்கி விட்டதால் ஒவ்வொரு வீட்டிலும் விளக்கு போடா ஆரம்பித்து விட்டார்கள். எதிர் வீட்டிலும் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. 

யாரும் இதுவரை கூறாத பதில் தானாக தெரிந்தது. குடி வந்து விட்டார்கள். 

அப்பா வெளியே வந்தார்.

"என்னடா எதிர் வீட்டு வெறிச்சு பார்த்து கிட்டு இருக்க?"

"இல்லப்பா எதிர் வீட்டுக்கு குடி வந்துட்டாங்கல்லான்னு பார்த்துகிட்டு இருக்கேன்."

"அதானே. இனிமேல் உங்களால அங்க போய் ஆட்டம் போடா முடியாதுன்னு நினைப்பா இருக்கா?" 

"ஏன் முடியாது. அந்த வீட்டு பையனை பிரெண்டு புடிசுகிட்டா நல்லா விளையாடுவோம். ஆங்." என்று என் யோசனையில் ஒன்றை பதிலாக சொல்லியதும். அப்பா பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்தார்.

"அடேய், கூறு கெட்டவனே. உனக்கு அம்மாம் ஆசை இருக்கா? வந்திருக்கிரவரு மிலிடரி தாத்தாவாம். பாத்து துப்பாக்கி எடுத்து சுட்டு கிட்டு வைக்க போறார்." என்று சொல்லி விட்டு கடை தெருவுக்கு சென்று விட்டார்.

என்னது மிலிடரி தாத்தாவா? துப்பாக்கி வைத்து இருப்பாரா? சின்ன பிஸ்டலா இல்லை நீட்டு ரைபலா என்று எண்ணம் ஓட ஆரம்பித்தது. பூச்சி பொட்டு பாம்பு பேய்க்கு வராத பயம் துப்பாக்கி என்றதும் தொடை நடுங்கியது. மிரட்சியுடன் வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்தேன். முழு ஆண்டு தேர்வுகள் ஆரம்பித்து விட்டதால் முழு கவனமும் தேர்வில் சென்று விட்டது. ஆனால் மிலிடரி தாத்தா மட்டும் கண்ணில் சிக்கவே இல்லை.

முழு ஆண்டு தேர்வின் கடைசி நாளன்று தான் எதிர்வீடும் மிலிடரி தாத்தாவும் பூதாகரமாய் மனதில் எழுந்து நின்றார்கள். தேர்வின் கடைசி நாளென்பதால் சட்டையில் இங்க தெளிப்பதை தவிர்க்க சீக்கிரமாகவே பள்ளியில் இருந்து கிளம்பி விட்டேன். சரியாக நான் வீடு வருவதற்கும் மிலிடரி தாத்தா வெளியே கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. 

அவரை பார்த்ததும் ஏனோ பயமே வரவில்லை. தலை முழுக்க அஜீத் போல் நரைத்து இருந்தது. அப்பா சொல்லியது போல் அவர் தாத்தாவும் இல்லை. ஒரு 50 வயதை நெருங்கும் முதியவர். அவ்வளவு தான். மீசை முறுக்கி விடப் பட்டிருந்தது கொஞ்சம் மிரட்சியை தந்தாலும் மீசைக்கு கீழே ஒரு சின்ன புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருந்ததை நான் கவனிக்க மறந்து விடவில்லை. ஆகையால் தைரியமாக அவர் முன்பு சென்றேன்.

"ஐயா. நீங்க மிலிடரியாமே, துப்பாக்கி எல்லாம் வச்சிருப்பதாக அப்பா சொன்னார். என்ன துப்பாக்கி வச்சு இருக்கீங்க?"

அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார்.

"ஐயா நான் எதிர்வீட்டுல குடி இருக்கிறேன்"

அவர் மெலிதாக சிரித்தார்.

"துப்பாக்கி எல்லாம் நான் வச்சு இல்ல தம்பி", என்று சொல்லி விட்டு தோளை தட்டி கொடுத்து விட்டு சென்று விட்டார்.

விடுமுறையை எப்படி கழிப்பது என்று தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்த எண்ணங்கள் தொலைந்து போனது...

"யம்மா எதிர்வீட்டுல குடி வந்திருப்பது யாரு தெரியுமா?" என்று கத்திக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்.


2 comments:

G.M Balasubramaniam said...

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவு. எதிர்வீட்டுக்குக் குடி வருபவர் பற்றி அறியத் துடிக்கும் சிறுவனின் ஆர்வம் கதையாக. வாழ்த்துக்கள்.

suryajeeva said...

நன்றி ஐய்யா.. வேறு ஒரு கதைக்கு முயற்சிக்க இது போல் ஒரு கதை வந்து விட்டது... ஆனால் இது போல் ஒரு கதையை நான் எங்கோ படித்தது போலவே உணர்கிறேன்... சரியாக நினைவில்லை.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Post a Comment