Thursday, April 30, 2015

முகமூடிகள் சூழ் சமூகம்

"ஊர் கெட்டு போச்சுங்க. நீதி நேர்மை எல்லாம் காணாம போயிடுச்சுங்க. இதே நிலைமை போனா பூமி தாங்காது"

டீ கடை எதிர் சீட்டில் ஒருவர் தன்னுடன் வந்தவரிடம் இது போல் பேசிக் கொண்டிருந்தார். இந்த மாதிரி வசனங்கள் அடிக்கடி என் காதில் விழும். அப்பொழுதெல்லாம் மறக்காமல் என் நினைவில் வருபவர் ராமசாமியாக தான் இருப்பார். 

ராமசாமி சாரும் நானும் மேன்ஷனில் ஒரே அறையில் தங்கி இருந்தோம். இருவர் தங்கும் ரூம் அது. எங்கள் இருவர் அலைவரிசையும் ஒரே சீராக இருந்ததால் நாங்கள் இருவரும் பல்வேறு தளங்கள் குறித்த விவாதங்களில் பல சமயம் தொலைந்து பொய் விடுவோம். எனக்கு 35 வயது. அவருக்கு 50 வயது. இருந்தாலும் என் பல்வேறு கருத்துக்களை அவர் எதுவும் பேசாமல் உள்வாங்கி கொண்டு அசைப் போடுவார். அவர் அசைப் போடுவதை பார்பதற்காகவே பல்வேறு விஷயங்கள் குறித்து நானும் படிக்க ஆரம்பித்தேன். வேலை முடிந்தவுடன் இந்த டீ கடையில், ஒரு டீ குடித்து விட்டு ரூமுக்கு சென்று விடுவது என் வழக்கம். ஆனால் இந்த எதிர் பெஞ்சுக் காரர் என் பொறுமையை சோதித்து கொண்டிருந்தார்.

"நம்மூர்ல ஏன் மழை பெய்ய மாட்டேங்குது? இதாங்க காரணம், ஊர்ல இருக்கிற மொத்த பயலும் அயோக்கிய பயலாவே இருந்தா எப்படிங்க மழை பெய்யும்?"

கேட்டுக் கொண்டிருந்தவர் அமைதியாக தலை ஆட்டிக் கொண்டிருந்தார். எனக்கு தான் சுர்ரென்றது. எழுந்து அவர் அருகில் சென்றேன்.

"சார், ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே."

யார் இவர்? கோபித்துக் கொள்ளும் படி என்ன சொல்லப் போகிறார்? என்று பல்வேறு கேள்விக்குறிகளை தாங்கி அவர் முகம் என் கேள்விக்காக காத்திருந்தது.

"நான் யோக்கியன் சார். நீங்களும் யோக்கியராக தான் இருப்பீங்க என்று நினைக்கிறேன். அதனால ஊர் கெட்டு போச்சுன்னு நாம உசுரோட இருக்கிற வரைக்கும் சொல்லாதீங்க. சரியா சார்"

என்ன பேசுவது என்று தெரியாமல் மெதுவாக தலை அசைத்தார். 

எதையோ சாதித்தது விட்டது போன்ற உணர்வு. மெதுவாக என் அறைக்கு வந்தடைந்தேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் ராமசாமி வந்து விடுவார். அதுவரை முகநூலில் பொழுது போக்குவோம் என்று கணினியை உயிர்பித்தேன். முகநூல் முழுவதும் பெங்களூரு தீர்ப்பு பற்றியதாகவே இருந்தது. முதலமைச்சரின் அபிமானிகள் நீதி தோற்று விட்டது என்றும், எதிர்கட்சியினர் நீதி வென்று விட்டது என்றும் லைக்குகளை அள்ளிக் கொண்டிருந்தனர். 

ஏதாவது அசம்பாவிதம் நேருமோ என்று அச்சம் எட்டிப் பார்த்தது. இதுவரை எந்த அசம்பாவிதமும் நடந்ததாக செய்திகள் வெளியாகவில்லை. அனைத்து இடங்களும் மயான அமைதி நிலவுகிறது என்பது தான் பல்வேறு தரப்பினரின் கருத்தாக இருந்தது. இரவு எட்டு மணி வாக்கில் ராமசாமி வந்து சேர்ந்தார். 

"சார் வர வழியில் எந்த பிரச்சினையும் இல்லையே."

"இல்லை தம்பி. நாளைக்கு தான் கிளம்புவாங்க"

அமைதியாக சொல்லி விட்டு குளிக்க சென்று விட்டார். 

வேலை முடிந்து வந்தவுடன் ஒரு குளியல் போட்டால் தான் அவரால் தூங்க முடியும். குளியல் முடித்து வந்தவுடன் கடற்கரைக்கு சென்று அரை மணி நேரம் பொழுதை போக்கி விட்டு இரவு உணவை முடித்து கொண்டு திரும்பினோம். கடற்கரையில் டீ கடையில் நடந்த விஷயத்தை குறித்து சொன்னதும் மெதுவாக புன்னகைத்தார். 

ரூமுக்கு வந்ததும். கணினியை உயிர்பித்தார். முகநூலில் நுழைந்தார். ஆரம்பத்தில் முகநூலில் உயிர்ப்புடன் இருந்தவர் பின்பு அதில் வரும் பல்வேறு நண்பர்களின் கருத்தை படிப்பதில் காலம் செலுத்த ஆரம்பித்தார். பிடித்த ஸ்டேடஸ்க்கு லைக் போடுவார். அபத்தமான ஸ்டேடஸ்க்கு கமெண்ட் அடிப்பார். பல நேரங்கள் தன நண்பர்கள் சிலரின் புகைப்படங்களை பார்த்து கொண்டிருப்பார். 

"யார் சார் இவர்?"

"என் கூட படித்த நண்பன், பரன் ன்னு செல்லமா கூப்பிடுவோம்."

"என்ன சார் பண்றார்"

"செத்துட்டான்"

பாய்ன்ட் பிளான்க் ஷூட்டிங் என்று ஆங்கில திரைப்படங்களில் வரும் வசனம் நினைவுக்கு வந்தது. நெற்றிப் பொட்டில் அடித்தது போல் என்று தமிழில் சொல்வார்கள். வழ வழ கொழ கொழ என்று எல்லாம் இவர் பேச மாட்டார் என்பதற்கு இது ஒரு உதாரணம். 

"என்ன ஆச்சு சார்"

"பயபுள்ள செம அறிவாளி, பார்மசியில் கோல்ட் மெடல். அதனால் முக்கால்வாசி நேரம் ஸெல்ப் மேடிகேஷன் தான். டாக்டர் கிட்ட போனதில்லை. ஆனா என்ன பண்றது பார்மசி படிச்சவனுக்கு நோய் கண்டறிய முடியாது ன்ற விஷயம் ரொம்ப லேட்டா புரிஞ்சது. அதுக்குள்ளே காலம் கடந்துடுச்சு."

அவர், அவர் உலகத்துக்குள் செல்ல ஆரம்பித்தார். சிந்தனைகளின் உலகம். நினைவுகளின் உலகம். அதை கெடுக்க நான் விரும்பவில்லை. மெதுவாக வெளியே காற்று வாங்க எழுந்தேன்.

"தம்பி, நாளைக்கு வேலைக்கு போக வேண்டாம். ஏதாவது காரணம் சொல்லி லீவு போட்டுடுங்க. நாளைக்கு என்ன பண்ணுவாங்கன்னு தெரியாது. முடிஞ்சா பிரட் பக்கெட்டும் ஜாமும் வாங்கிகிட்டு வந்துடுங்க."

"சரிங்க சார்" என்று சொல்லி விட்டு வெளியேறினேன். மேலாளருக்கு போன் போட்டு லீவு சொன்னேன். பிறகு பக்கத்து பேக்கரியில் எங்கள் இருவருக்கும் பிடித்த அயிட்டங்களை வாங்கி கொண்டேன்.

மறுநாள் அமைதியாக விடிந்தது.

எந்த அசம்பாவிதமும் நேரவில்லை என்று புரிந்தது. 

"சார் எதுவும் நடக்கல லீவ் கேன்சல் பண்ணிட்டு வேலைக்கு போயிடலாமா?"

"வேணாம் தம்பி. மனசுக்கு என்னவோ சொல்லுது, வேணும்னா காலை டிபன் மட்டும் சாப்பிட்டுட்டு வந்துடலாம்."

சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்ததும். வெளியில் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். 

"டேய் ராமசாமி, எங்க வேலைக்கு கிளம்பிட்டியோன்னு நினைச்சேன். உனக்கு போன் பண்ணா ரூமுக்குள் இருந்து ரிங் கேட்டுச்சு. அதான் வந்துடுவேன்னு காத்துகிட்டு இருக்கேன்"

"வாடா செந்திலு. எப்படி இருக்க? எங்க இவ்வளவு தூரம்?"

என்றவர் என்னையும் அவர் நண்பரையும் அறிமுகப் படுத்தி வைத்தார். 

ராமசாமியின் நண்பர் அவர் மகனின் திருமணதிற்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தார். 

"நீ வரமாட்டேன்னு தெரியும். இருந்தாலும் கொடுக்க வேண்டியது என் கடமை. மனசு மாறியிருந்தா வந்துடு."

ராமசாமி தர்மசங்கடப் படுவது தெரிந்தது.

"அவர் வருவார் சார். அதுக்கு நான் கியாரண்டி." என்றேன் நான் இடைமறித்து.

ராமசாமியின் நண்பர் என்னை மேலும் கீழும் பார்த்தார்.

"தம்பி இவரை எத்தனை வருஷமா உனக்கு தெரியும்."

"ரெண்டு வருஷமா தெரியும் சார்."

"எனக்கு இவனை 32 வருஷமா தெரியும். சரியா? அவன் வரமாட்டான். அதுவும் எனக்கு தெரியும்" என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு கொஞ்ச நேரத்தில் விடை பெற்றுக் கொண்டார்.

மதியம் ஒன்றரை மணிக்கெல்லாம் விபரீதங்கள் ஆரம்பமாகியது. ஒரு பேருந்து எரிக்கப் பட்டது. கடைகள் மூடப் பட்டது. முன்னேற்பாடாக வாங்கி வைக்கப் பட்ட பேக்கரி உணவுகள் மதிய உணவாக மாறியது. கணினியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தோம். 

முகநூல் விவாதங்கள் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது. நீதிமன்ற தீர்ப்பை கூட கூறு போட்டு பார்க்கும் அளவுக்கு முகநூல் அறிவாளிகள் உள்ளனர் என்பது சமூகத்தின் உளுத்து போன பக்கங்களை எடுத்து உரைத்தது.

எனக்கு பிடித்தவர். அவர் கொலையே செய்திருந்தாலும் அது தப்பு இல்லை என்ற ரீதியிலும், முன்னாள் முதல்வரின் அமைதியையும் கிண்டல் அடித்து கொண்டு ஒரு வட்டமும் அபாரமாக பொழுதை போக்கி கொண்டிருந்தார்கள். இரவு நெருங்கியதும் ராமசாமி குளிக்க சென்றார். அவர் மொபைலில் அழைப்பு வந்தது. எடுத்து பார்த்தேன். பெயர் செந்தில் என்று இருந்தது. அழைப்பை ஏற்றேன்.

"டேய்"

"சார், அவர் குளிக்க போயிருக்கார். நான் அவரோட ரூம் மேட் பேசுறேன்."

"வணக்கம் தம்பி. ஒண்ணுமில்ல.. இன்னிக்கு எங்க நண்பர் ஒருத்தர் இறந்து போயிட்டார். அதை சொல்ல தான் கூப்பிட்டேன். நண்பர் பேரு ராஜன்னு சொல்லுங்க தம்பி. அவனுக்கு தெரியும்"

"சரிங்க சார். நானும் அவரும் வந்து சேர்ந்துடுறோம்"

"வந்து.... சேந்துடுரீங்கலா....? அவன் வர மாட்டான் தம்பி, நீங்க வரதாக இருந்தால் இந்த நம்பரில் என்னை கூப்பிடுங்க"

ராமசாமி புரியாத புதிரானார். சாவுக்கும் போக மாட்டார். திருமண நிகழ்ச்சிக்கும் போக மாட்டார். யார் பிறந்த நாளுக்கும் வாழ்த்து சொல்லியும் பார்த்ததில்லை. இந்த சமூகத்துடன் ஒட்டாமல் வாழ்வது போல் தோன்றியது.

குளித்து முடித்து தலை துவட்டியபடியே வந்த ராமசாமியை பார்த்தேன்.

"உங்க நண்பர் செந்தில் பொன் பண்ணியிருந்தார். உங்க நண்பர் ராஜன் இறந்துட்டாராம்."

ஒரு நிமிடம் அவர் கண்களில் ஒரு அதிர்ச்சி.

"ராஜனா, எப்படி ஆச்சாம்?"

"தெரியல சார். நான் கேக்கல!"

கணினியில் முகநூல் கணக்கை திறந்தார். ராஜனின் பக்கத்தை திறந்து வைத்து கொண்டு அவனின் புகைப் படத்தை பார்க்க ஆரம்பித்தார்.
No comments:

Post a Comment