Tuesday, May 5, 2015

நினைவுச் சுழல் - 1


"சார், சளி புடிச்சிருக்கு, லேசா காய்ச்சல், பயங்கர தலைவலி வேற.. மாத்திர கொடுங்க சார்..."

எதிரில் நின்றவனை உற்றுப் பார்த்தேன். கண்கள் வெண்மையாக இருந்தது. உதடு காய்ந்திருந்தது.

"வாந்தி வர மாதிரி இருக்கா?"

"வாய் கசப்பா இருக்கிறா மாதிரி இருந்தாலும், வாந்தி வர மாதிரி தோனல சார்.."

"என்ன சாப்பிட்டீங்க?"

"இன்னும் எதுவும் சாப்பிடல சார்.."

"மாத்திரை தரேன்.. ஆனா சாப்பிட்டுட்டு தான் சாப்பிடனும் சரியா?"

"என்ன சாப்பிடலாம் சார்?"

"உங்களுக்கு என்ன பிடிக்கும்?"

"பரோட்டா ..."

"அதையே சாப்பிடுங்க"

"என்னங்க சொல்றீங்க "

"வாய்க்கு ருசியா அளவா சாப்பிடுங்க. அதுவே உங்க பாதி நோயை துரத்திடும்.. பணம் எவ்வளவு வச்சிருக்கீங்க.."

"ஒரு அம்பது ரூபா இருக்குங்க.."

"சரி, முப்பது ரூபாய்க்கு மாத்திரை தரேன். மீதி காசில டிபன் சாப்பிட்டுட்டு மாத்திரையை போட்டுக்குங்க."

"சரிங்க."

"ரெண்டே நாள்ல சரியா போயிடும். அதுக்காக மாத்திரையை நிறுத்திடாதீங்க. அஞ்சு நாளைக்கு மாத்திரை கொடுத்திருக்கிறேன்.. மொத்தமும் சாப்பிட்டடனும்."

நியாயப்படி தவறு என்றாலும் மனசாட்சிபடி தவறு இல்லை என்று சமாதானப் படுத்தியபடி அடுத்த நோயாளியை பார்த்தேன். 

நாமக்கல் பேருந்து நிலையம். ராஜன் மெடிகல்ஸ். மருத்துவர் எழுதும் பரிந்துரைப் படி மருந்து எடுத்துக் கொடுக்கும் வேலை.. வயது நாற்பதை கடந்து விட்டதால் சொல்லுக்கு மரியாதை. 

"சார், வேலைக்கு ஆள் வேணுமா சார்?"


"என்ன படிச்சு இருக்கீங்க?"

"பி.பார்ம் சார்."

"அப்புறம் ஏன் இந்த வேலைக்கு வரீங்க? "

"வேற வேலையில் நிம்மதி இல்ல, அதான்.."

என் வயதும், தடை இல்லாத பதிலும் அவருக்கு பிடித்து போனதால் சம்பளம் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பதாகவும், நாள் படி ஐம்பது ரூபாய் கொடுப்பதாகவும் கூறி என்னை வேலையில் சேர்த்து கொண்டார். ஆறு மாத காலம், நொடி முள்ளுடன் பயணித்து வேகமாக கடந்திருந்தது...

இந்த கால கட்டங்களில் மனசுக்கு நிம்மதியாய் பொழுதுகள் கழிந்தாலும், பழைய நினைவுகள் சில சமயங்கள் கால சக்கரத்தில் சிக்க வைத்து தொலைத்து விடுகிறது.

"சார், பிரான்கோ இந்தியன் சார்..."

தொடரும்
இரண்டாவது பகுதியை படிக்க தொடரும் என்ற வார்த்தையை சுட்டவும்

[மருந்து விற்பனை பிரதிநிதிகள் தங்களை தங்கள் நிறுவனப் பெயரில் தான் அறிமுகப் படுத்திக் கொள்வார்கள். பல நபர்களின் சொந்த பெயர்கள் கூட கால ஓட்டத்தில், அவர்கள் வேலை செய்யும் மருந்து நிறுவனங்களின் பெயர்களாய் மாறி இருக்கும். இவர்களின் பணி கடினமானது என்றாலும், இவர்கள் இன்று என்ன வேலை செய்வது, எந்த ஊருக்கு செல்வது, எந்த மருத்துவரை பார்ப்பது என்ற அனைத்தும் இவர்களே தீர்மானிப்பதால், இவர்கள் என்றும் சோர்ந்து போவது இல்லை. என் வாழ்வின் அனுபவங்களை, எனக்கு அனுபவமே இல்லாத விற்பனை பிரதிநிதிகளின் மேலாளரின் பார்வையில் கோர்த்து வருவேன்... முடிந்த வரை ஒரு வாசகன் பார்வையில் இந்த கதையை புரிய வைக்க முயற்சிக்கிறேன்..]

நினைவுச் சுழல் - 2

முதல் பகுதியை படிக்க

[மருந்து கடைகளில் தங்கள் நிறுவனத்தின் மருந்துகள் இருப்பு குறித்து தெரிந்து கொள்ளவும், தங்கள் நிறுவன மருந்துகள் காலாவதி ஆகாமல் பார்த்துக் கொள்ளவும், போட்டி நிறுவனத்தின் மருந்துகள் விற்பனை அளவை தெரிந்து கொள்ளவும் ஒவ்வொரு மருந்து விற்பனை பிரதிநிதியும் மருந்து கடைகளுக்கு வருகை புரிவார்கள்.]

பிரான்கோ இந்தியன் என்ற பெயரை அந்த விற்பனை பிரதிநிதி கூறியதும் எனக்கு என் நண்பன் செந்தில் நாதனின் நினைவுகளில் சிக்கிக் கொண்டேன்.. செந்தில் நாதன் என் உடன் படித்தவன். விடியங்காடு என்ற கிராமத்தில் ஒரு சில ஆசிரியர்களே பணி புரிந்த பள்ளியில் படித்து கிட்டத்தட்ட ஆயிரம் மார்க்குகள் வாங்கி பி.பார்ம் இட ஒதுக்கீட்டில் கிடைத்து கல்லூரியில் சேர்ந்த முதல் நாளில் ஆங்கில வகுப்புகளை கண்டு மிரண்டவன். ஆனால் தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தால் முன்னுக்கு வந்த பலரில் இவனும் ஒருவன்..

படிக்கும் காலத்தில் திக்கு வாய். ஆனால் விற்பனை பிரதிநிதி வேலையை கொடுத்த அந்த நிறுவனத்தின் மேலாளர், உனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. உன்னால் இந்த துறையில் கொடி கட்டிப் பறக்க முடியும் என்று கூறியதை இன்று வரை நிரூபித்து வருபவன்... தன்னம்பிக்கை மட்டுமே திக்குவாய்க்கு வைத்தியம் என்பதற்கு வாழும் உதாரணம் அவன்...

நாங்கள் சென்னையில் இருந்த பொழுது, வேலைக்கு ஒன்றாக செல்லும் பழக்கத்தை வைத்திருந்தோம்.. இரு வேறு போட்டி நிறுவனங்களின் தொழிலாளிகள் ஒன்றாக வேலை செய்வதை இந்த துறையில் மட்டுமே காணலாம். பல சமயங்களில் ஒரே மருத்துவரை இருவருமே காண வேண்டி வரும்..

இதை என் மேலாளரும் கண்டித்துக் கொண்டே வந்தார்.

"தம்பி, அவன் competitor. அவனுடன் வேலைக்கு செல்வதால் நம் நிறுவன மருந்துகள் விற்கும் வாய்ப்பு மிகவும் குறைவு."

"எப்படி சார், சொல்றீங்க?"

"ஏன்னா? நீ எந்த மருத்துவரிடம், எந்த மருந்து கடையில், எந்த மருந்து பொருளை விக்கிறேன்னு அவனுக்கு தெரிஞ்சுடும் இல்லையா?"

"competitor எங்க எதை எவ்வளவு விக்கிரான்னு கண்டு பிடிச்சு அதை நம் நிறுவனத்துக்கு சாதகமா மாத்திறது தானே ஒரு நல்ல ரெப் புடைய வேலை."

"ஆமா..."

"நான் எங்க எந்த மருந்தை விக்கிறேன்னு என் கூட வந்தா தான் கண்டுபிடிக்க முடியுமா?"

"அது வந்து..."

"சார், விடுங்க சார். என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. எனக்காக எழுதும் டாக்டர் வேற யாருக்கும் எழுத மாட்டார்.."

"இந்த திமிரால தான் நீ அழியப் போற..."

"பாக்கலாம் சார்..."

"தம்பி எவ்வளவு நேரமா கூப்பிடறது?"

தொடரும்
மூன்றாவது பகுதியை படிக்க தொடரும் என்ற வார்த்தையை சுட்டவும் 

நினைவுச் சுழல் - 3முதல் பகுதியை படிக்க

வயதான நோயாளியாக இருந்தாலும் வெண்கல குரலில் அழைத்து என் நினைவுகளை சாயம் போகும் வானவில்லாய் ஆக்கினார். கூட்டம் கூட ஆரம்பித்தது. கட கட என்று நேரம் ஓட ஆரம்பித்தது. கண் மூடி திறப்பதற்குள் வயிற்று தீ சாப்பாட்டு நேரம் என்று பறை சாட்டியது... கூட்டம் ஓய்ந்தது. இனி ஐந்து மணி வரை நோயாளிகள் வருகை குறைவாகவே இருக்கும். பேருந்து நிலையம் அருகில் இருப்பதால், கடைக்குள் தூசு எளிதில் அண்டி விடும்.. தினமும் துடைத்து அடுக்கி வைத்தால், வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்காமல் திரும்பி வருவார்கள் என்பதால் மதிய நேரம் பெரும்பாலும் துடைப்பதில் சென்று விடும்.

"அண்ணே ..."

கடையில் உடன் வேலை செய்யும் பாலா அழைத்தான்.

"என்னப்பா என்று திரும்பி பார்த்தேன்..."

கவுண்டரில் ஒரு குடிகாரன் அலம்பல் செய்து கொண்டிருந்தான்.

நான் அவர்கள் அருகே சென்றேன்

"என்ன பிரச்சினை.?"

அண்ணே, நீங்களே நியாயத்தை சொல்லுங்க. டாக்டர் என் சம்சாரத்துக்கு இரும்பு சத்து மாத்திரை எழுதி கொடுத்ததா சொன்னார். ஆனா இவர் கொடுக்கிற மாத்திரை காந்தத்துல ஓட்ட மாட்டேங்குது. அப்புறம் எப்படி இரும்பு சத்து மாத்திரை என்று நான் நம்புறது...

குடிகாரன் கையில் காந்தத்துடன் அலம்பல் செய்து கொண்டிருந்தது சிரிப்பை வரவழைத்தாலும். இவனை விட்டால் இவன் கடை பெயரை கெடுத்து விடுவான் என்ற எண்ணமும் ஓடியது. காஞ்சிபுரம் பாபு அண்ணன் நினைவுகள் சுழல ஆரம்பித்தது.. சிரமப்பட்டு நிகழ் காலத்தில் இருந்தேன்...

எனக்குன்னு எங்கிருந்து தான் வருவானுங்கலோன்னு தெரியலைண்ணே என்றான் பாலா.

சார், இப்ப உங்களுக்கு காந்தத்துல ஓட்டுற மாத்திரை வேணுமா இல்லை டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை வேணுமா?

காந்தத்துல ஓட்டுற மாத்திரை தாம்பா ஒரிஜினல் மாத்திரை.. அது தான் வேணும்..

பாலா, அண்ணனுக்கு அனோபர் மாத்திரை கொடுப்பா...

என்னை யாரும் ஏமாத்த முடியாது என்று கூறியபடி சென்றான் குடிகாரன், சந்தோஷத்துடன்..

அண்ணே மாத்திரை எப்படின்னே காந்தத்துல ஓட்டும்..

அந்த மாத்திரை கார்போனில் அயன் கொண்டது. அது மட்டும் காந்தத்துல ஓட்டும்.

இது எப்படின்னே உங்களுக்கு தெரியும்...

பாபு அண்ணன்னு ஒருத்தர் இருந்தார்...

நினைவலைகள் தாலாட்ட ஆரம்பித்தது...

தொடரும் 
நான்காவது பகுதியை படிக்க தொடரும் என்ற வார்த்தையை சுட்டவும் 

நினைவுச் சுழல் - 4

முதல் பகுதியை படிக்க

என்னை விட ஆறு வயது பெரியவர். காஞ்சிபுரத்தில் வேலை செய்த அனைவருமே அவரை மரியாதையுடன் தான் பார்ப்போம். ஒரு காலத்தில் காஞ்சிபுர மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்திற்கு ஒருங்கினைப்பாளறாய் இருந்தார். அவர் நிறுவனத்தில் விற்பனை துறையில் அவர் தான் எப்பொழுதும் நம்பர் ஒன். பெரியார் மீது பெரிய ஈடுபாடு கொண்டவர். சமூக சீர்திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்துபவர். ஆனால் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள விநாயகரை வணங்கி விட்டு தான் காலையில் வேலைக்கு செல்வார்.

அண்ணே பெரியார் கொள்கை பிடிக்கும் அப்படின்னு சொல்றீங்க. புள்ளயாரையும் கும்பிடுறீங்க... புரியல...

ஹ ஹா... சுரேசா, பெரியார் கடவுள் விரோத கொள்கை மட்டும் தான் கொண்டிருந்தார்னு நினைப்பா உனக்கு...

இல்லை..

அப்புறம் ஏன் குழப்பிக்கிற..

அப்படின்னா கடவுளை நம்பலாமா?

பெரியாரை நான் படிக்க ஆரம்பிச்சது இருபதாவது வயசுல.. ஆனா புள்ளையார என் மனசில சின்ன வயசுலேயே உக்கார வச்சுட்டாங்க... ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தையே மாத்தி வைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்... புரிஞ்சுதா?

நான் மண்டையை சொரிந்தேன்...

டீ கடைக்கு போலாமா?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்பு தேநீர் கடையில் சென்று உட்கார்ந்தோம்.. எங்களை பார்த்தவுடன் மாஸ்டர் இரண்டு கண்ணாடி குவளைகளை கழுவி ஒரு கரண்டி சர்க்கரையை போட்டார்...  கடை பையன், டிஷ்யூ காகிதமாய் மாறியிருந்த நேற்றைய செய்திதாளில் இரண்டு மசால் வடைகளை கொண்டு வந்து கொடுத்தான்...

சுரேசா, கும்பிட்டா தான் நம்பர் ஒண்ணா இருப்பேன் அப்படின்னு இத்தனை கால நம்பிக்கை மூடநம்பிக்கை அப்படின்னு தெரிஞ்சாலும், மாத்திக்க முடியல... உள்ளுக்குள்ள ஓரத்தில அந்த நம்பிக்கை ஆழமா வேர் விட்டு இருக்கு.. என்னிக்கு என் நம்பர் ஒன் பதவி பறி போகுதோ அன்னிக்கு தான் நான் புள்ளையாரை மறப்பேன் அப்படின்னு நினைக்கிறேன்...

பாபு அண்ணனின் வித்தியாசமான சிந்தனைகளில் இதுவும் ஒன்று என்பதோடு வாதம் செய்ய முயற்ச்சிக்கவில்லை...

தொடரும்
ஐந்தாவது பகுதியை படிக்க தொடரும் என்ற வார்த்தையை சுட்டவும் 

நினைவுச் சுழல் - 5

முதல் பகுதியை படிக்க

மேற்கில் சூரியன் இறங்கி கொண்டிருந்தான்... மூன்றரை மணி அளவில் முன் வாசல் வழியாக முகத்தில் சூடு வைத்து நிகழ்காலத்தில் நிலைக்க வைத்தான். கடை பேனர் ஒன்றை எடுத்து கடைக்கு முன் திரைச்சீலை போல் தொங்க விட்டு கடைக்குள் காற்று நுழைவை தடுத்து, இட்லி பானையாக்கி உள்ளே உட்கார்ந்து வேக ஆரம்பித்தோம்...

ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் தேநீர் கடையில் தேநீர் அருந்த பத்து நிமிட அனுமதி கிடைக்கும். தின்பண்டங்களும் சக்கை போடு போடும் கடை அது... அந்த கடைக்குள் இருக்கும் ஈக்களை விட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்... ஒரு பக்கம் ரீங்காரமிட்டபடி ஈக்களை கொல்லும் விளக்கு இயந்திரங்கள் ஓயாமல் உயிரழிப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும்.. மின்சார கம்பிகளில் சிக்கி பட படார் என்று வெடிக்கும் ஈக்களை காண சில சிறுவர்கள் அதன் அருகிலேயே இருப்பதும் உண்டு... 

ஒரு ஸ்ட்ராங் காப்பி என்று சொல்லி விட்டு மூலையில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்தேன்.

பலகாரங்களுக்கு கொடுக்கும் செய்தி தாளின் ஒரு பகுதி ஆங்காங்கே மேஜை மேல் இறைந்து கிடந்தது... காலியாக இருந்திருந்தால் படிக்க நேரம் கிடைத்து இருக்கும்... கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியில் என் கண்கள் வெளிச்சங்களை பிரதி எடுத்துக் கொண்டிருந்தது...

அந்த நேரத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் நான்கு மருந்து விற்பனை பிரதிநிதிகள் வந்து இறங்கினர்... கண்களின் வேலையே மூளை மறந்து, வழக்கமாய் ஆகி விட்ட  நினைவலைகளில் சிக்கி சுழன்றது..

சிவசுப்பிரமணியன்,
கோபிநாத்,
அருண்,
மற்றும்
செந்தில்.

வேலூரில் இவர்கள் நால்வரையும் தனி தனியாக காண்பது  அபூர்வம். 

மச்சான், அந்த பொண்ணு ரொம்ப பந்தா பண்றாடா? 

இது கோபி.

ஆமா மச்சான் அந்த ஆனந்த் பய கூட ஓவரா வழிஞ்சிகிட்டு, நம்ம கிட்ட சண்டைக்கு வரான்...

இது செந்தில்.

டேய், விடுங்கடா... அவங்கள போய் பெரிய ஆளா ஆக்கி கிட்டு... நாம நம்ம வேலைய பாப்போம்..

இது அருண்.

மச்சி, ஒரு பெரிசு போகுது. அவர் சங்கத்தில் சந்தா கட்டிட்டாரான்னு கேட்டு கலாய்ப்போம். வாங்கடா.

இது சிவசு.

காம்ரேட்...

நான்கு பெரும் ஒரே நேரத்தில் கூப்பிட்டதால் சோளிங்கர் செல்லும் பேருந்தை தேடிக் கொண்டு இருந்த என்னை பேருந்து நிலையமே திரும்பி பார்த்தது...

சொல்லுங்க தோழர் என்றேன் நான்.

wochardt , FDC மருந்துகளை தடை செய்ய சொல்லி போராட்டம் நடக்குதே அதப் பத்தி தெரியுமா, தோழர். -அருண்.

டேய், தடை செய்ய சொல்லி இல்லடா, புறக்கணிக்க சொல்லி, boycott ... -கோபி 

அன்று தொடங்கிய எங்கள் நட்பு நான் மேலாளர் ஆகும் வரை தொடர்ந்தது. கால சூழ்நிலை பிரதிநிதி வேலையை தொலைக்க வைத்த பொழுது பல்வேறு நல்ல நட்புகளும் கண்ணுக்குள் மட்டுமே நின்றது..

சார், காப்பி... என்று டங் என்று வைத்தான் கடை பையன்.. 

தொடரும் 
ஆறாவது பகுதியை படிக்க தொடரும் என்ற வார்த்தையை சுட்டவும் 

நினைவுச் சுழல் - 6முதல் பகுதியை படிக்க

சீக்கிரம் கிளம்புடா என்பதின் அர்த்தம் டங் என்பதை என்றோ தெரிந்து கொண்டதால், நான்கு ஆத்து ஆத்தி ஒரே மடக்கில் குடித்து காசை கொடுத்து விட்டு கடைக்கு வந்தேன்...

அங்கு ஒரு மருந்து சீட்டை வைத்துக் கொண்டு கடை பையன்கள் இருவரும் முதலாளியும் தலையை சொரிந்து கொண்டு இருந்தனர்... என்னடா? என்றேன் நான் சரவணனிடம்...

அண்ணா, என்ன எழுதி இருக்கார்னு தெரியல... புது டாக்டர் போல் இருக்கு... அதான் புரியல...

மருந்து சீட்டை எடுத்தேன்..

மைகொஸ் போர் ஆயின்ட் மென்ட்...

அந்த மருந்து, கடையில் இல்லை...

நினைவுகள் சுழல்வதை தடுத்து நிறுத்தி, டேர்பினபினே என்ற மருந்தை எடுத்தேன்...

நீங்க எங்க கேட்டாலும் இந்த ட்யூப் மருந்து கிடைக்காது. நீங்க டாக்டர் கிட்ட போய் சொல்லுங்க. டாக்டர் இந்த மருந்து வேணாம்னு சொல்லிட்டார்னா திருப்பி கொடுத்து காசை வாங்கிக்குங்க...

சார், இந்த மருந்துக்கு இப்போதைக்கு பில் போடாதீங்க, டி.சி யில் போட்டுக்கோங்க...

மருந்து பொருள்கள் விற்பனை என்பது முள் மேல் நடக்கும் வித்தை. அணைத்து மருந்துகளின் வரவும் உரிய ஆவணங்களுடன் இருக்க வேண்டும் இல்லை என்றால் போலி மருந்துகள் விற்பனை செய்யும் கடை என்று கடையை இழுத்து மூடி விடுவார்கள். ஒரு முறை விற்பனை செய்யப் பட்ட மருந்துகளை திரும்ப வாங்குவதில் இது போன்ற சிக்கல்கள் உண்டு. ஆகையால் தான் டெலிவரி சலான் என்னும் dc போட சொன்னேன். ஒரு வேலை அந்த மருந்து திரும்பி வரவில்லை என்றால் அதை பில்லில் ஏற்றி விடுவோம். 

தம்பி அந்த மருந்து வாங்கி வச்சிடுவோமா. என்றார் கடைகாரர்.

வேணாம்னே, இன்னும் ரெண்டு மூணு சீட்டு வரட்டும் என்றேன் நான்.

அபெக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்த விஜயகுமார் நினைவுகளில் நீந்த தொடங்கினார்.

தொடரும் 
ஏழாவது பகுதியை படிக்க தொடரும் என்ற வார்த்தையை சுட்டவும் 

நினைவுச் சுழல் - 7


முதல் பகுதியை படிக்க

வந்தவாசி முருகன் மெடிகலில் விஜயகுமார் நாங்கள் சென்ற நேரம் காரசாரமாக விவாதம் செய்து கொண்டு இருந்தார்.

"என்னண்ணே பிரச்சினை."

"நீங்களே சொல்லுங்க சார், இவர் புதுசா ஒரு கம்பெனியில் செர்ந்திருக்காராம். டாக்டர் கிட்ட சொல்லிட்டாராம். டாக்டரும் எழுதுறேன்னு சொல்லிட்டாராம். ஆனா என் கடையில் ஸ்டாக் வச்சிட்டு வந்து சொல்ல சொல்றாராம். இப்படியே வரவங்க போறவங்க சொல்ற மருந்து எல்லாத்தையும் வாங்கி வசிகிட்டே போனா என் பொழப்பு என்னாகுறது?"

"சுரேஷ், இவர் வாங்கி வைக்கலேன்னா அவர் எழுத மாட்டேன்னு சொல்றார்." 

"தெரியும் சார். எல்லா டாக்டரும் விளையாடும் விளையாட்டு தானே இது."

ஒவ்வொரு டாக்டரிடமும் அணைத்து மருந்து நிறுவனங்களும் தங்கள் மருந்துகளை எழுத சொல்லி வற்புறுத்தும். சிறு சிறு பரிசுகள் கொடுத்து நச்சரிக்கும். பரிசுக்கு ஆசைப்படாத மருத்துவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் சிலர் பக்கத்து மருந்து கடையில் ஸ்டாக் வைத்து விடுங்கள் என்று சொல்லுவார்கள். சீட்டு வராமல் மருந்து கடையினர் மருந்தை வாங்கி வைக்க மாட்டார்கள். ஆகா இந்த விளையாட்டு ஒரு முடிவில்லாத சக்கர வியூகத்தில் சிக்கிக் கொள்ளும்.

விஜயகுமார் சார். நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா.

சொல்லுங்க சுரேஷ்.

உங்ககிட்ட அந்த மருந்து சாம்பிள் இருக்கா?

இருக்கு ஏன்?

அதை அந்த மருந்து கடைக்காரன் கிட்ட ஒரு  பத்து மாத்திரை கொடுத்து விடுங்க. சீட்டு வந்ததும் ஆர்டர் போட சொல்லுங்க. டாக்டர் கிட்ட போய் மருந்து கடையில் பத்து மாத்திரை ஸ்டாக் வச்சிட்டேன்னு சொல்லுங்க. 

சுரேஷ் இது தப்பில்லையா?

தப்பு தான். ஆனா உங்க வேலை மருந்தை விக்கிறது தானே. சாம்பிள் மருந்தை நீங்கள் விக்கலையே. கடைகாரர் தானே விக்கிறார். 

நான் கடைக்காரரை பார்த்தேன். 

என்ன சார். சாம்பிள் மருந்து ஒரு பத்து மாத்திரை கொடுக்கிறோம். சீட்டு வந்தா கொடுத்து விட்டுடுங்க. டீல் ஒகே வா.

முருகன் மெடிகல்ஸ் நியாயமானவராக இருந்திருந்தால் இந்த வியூகமும் ஜெயித்து இருக்காது. ஆனால் முருகன் மெடிகல்ஸ் அப்படிப்பட்டவர் இல்லையே...

எந்தெந்த மருத்துவர்கள் என்ன வகை? எந்தெந்த மருந்து கடைகள் எந்த வகை? யாரை எதால் அடிக்கலாம் என்று கணக்கு போட தெரிந்தவனே நம்பர் 1 மருந்து விற்பனை பிரதிநிதி.

அண்ணே..

சரவணன் அழைத்ததும் நிகழ்காலத்தில் நுழைந்தேன். 

என்னடா?

ஒன்னும் இல்லை. மைகொச்போர் என்பது புது மருந்து மாதிரி தெரியுது. அதை எப்படி கண்டுபிடிச்சீங்க. 

டேய் நம்ம கடைக்கு மருந்து கடை முதலாளிகள் சங்கத்தில் இருந்து மாசா மாசம் ஒரு புக் வருதே அதெல்லாம் படிக்கனும்டா.

அதுல புது மருந்து விவரம் எல்லாம் வருதாண்ணே 

ஆமாடா.

அதுவும் இல்லாமல் அந்த மருந்து பேயர் கம்பனி மருந்து. எனக்கு தெரிஞ்சு அந்த கம்பெனி ரெப் யாரும் இந்த பக்கம் வந்த மாதிரி தெரியலே. அதான் வாங்கி வைக்க வேணாம்னு சொல்லிட்டேன்.

இதுல இவ்வளவு நெளிவு சுளிவு இருக்காண்ணே 

சரவணன் இப்படி கேட்டதும். இவன் பிழைப்பு தேடி வேலைக்கு வந்தவன் அல்ல என்று தெரிந்து கொண்டேன். சீக்கிரம் ஒரு புது மருந்து கடை திறக்க அஸ்திவாரம் போட வந்தவன் என்றும் உணர்ந்து கொண்டேன்.

தொடரும் 
எட்டாவது பகுதியை படிக்க தொடரும் என்ற வார்த்தையை சுட்டவும்

நினைவுச் சுழல் - 8


எட்டு மணி இருக்கும்..

இன்னும் கடை மூட ஒரு மணி நேரமே இருந்தது.

கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டது. பேருந்து ஒன்று சடார் என்று ப்ரேக் அடித்து நிறுத்தியதில் கிரீச் என்ற சதம் காதை கிழித்தது. சரியாக அதே நேரத்தில் சார் ரொம்ப அர்ஜெண்ட் சார் என்றபடி கடைக்குள் ஒருவர் நுழைந்தார்.

நான் சீட்டை கவனித்தேன்.

க்ளிவாரின்.

மாரடைப்பு நோயாளிகளுக்கு உடனே கொடுக்க வேண்டிய மருந்து. 

பக்கத்துக்கு கடைகளின் ஷட்டர்கள் மூடும் சத்தம் கிளம்பியது. 

வண்டியில் போன எதோ பையன் மேல் பஸ் ஏறி டெத் ஆயிடுச்சாம். கலாட்டா பண்ணிக்கிட்டு திரியிறாங்க சார். நீங்க மருந்து கொடுங்க சார். 

நான் க்ளிவாரின் மருந்தை எடுத்து கொடுப்பதற்குள் அவர் காசை கடைக்காரரிடம் கொடுத்து விட்டார், நான் மருந்தை கொடுக்கவும் அவர் நண்பர் வண்டியை கிளப்பவும். நாங்கள் ஷட்டரை மூடவும் சரியாக இருந்தது.


மூடிய ஷட்டருக்குள் நான் மூடிய இமைகளுடன். மூடிய இமைகளுக்குள் ராஜன்.

தொடரும் 
ஒன்பதாவது பகுதியை படிக்க தொடரும் என்ற வார்த்தையை சுட்டவும் 

நினைவுச் சுழல் - 9


பரிமள ராஜன்.

என்னுடன் பள்ளி காலத்தில் இருந்து ஒன்றாக படித்தவன். நான் மேலாளர் ஆனவுடன் வேலை இல்லாமல் திரிந்து கொண்டு இருந்த அவனுக்கு புதுச்சேரியில் வேலை போட்டு கொடுத்தேன்.

மச்சி, எங்க இருக்க? 

காரைக்கால் போயிகிட்டு இருக்கேம்பா. இன்னியில் இருந்து மூணு நாளைக்கு அவுட் ஸ்டேஷன் வேலை. மறந்துட்டியா?

ஒவ்வொரு நாளும் எந்த நாளில் எங்கு வேலை செய்ய வேண்டும் என்று அந்த மாத தொடக்கத்திலேயே ரிபோர்ட் கொடுத்து விட வேண்டும். அந்த ரிப்போர்ட் படி தான் வேலை செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் என்றால் அதை மேலாளர் அனுமதியுடன் திருத்திக் கொள்ளலாமே தவிர. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முருந்து விற்பனை பிரதிநிதிகளால் வேலை செய்ய முடியாது. வேலை முடிந்த வுடன் அன்றைய நாளில் எத்தனை மருத்துவர்கள் பார்க்கப் பட்டது என்றும் எத்தனை மருந்து கடைகள் பார்க்கப் பட்டது என்றும் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.

பல நேரங்களில் இதை 100 சதவிகிதம் ஒருவரால் செயல் படுத்த முடியாததால் பால்ஸ் ரிப்போர்டிங் என்று அழைக்கப் படும் பொய்யான தகவல்கள் கொடுக்க மருந்து விற்பனை பிரதிநிதிகள் பழகிக் கொள்வது உண்டு. ராஜன் இது வரைக்கும் அந்த செயல்களில் சிக்கிக் கொண்டதில்லை. இருந்தாலும் பழக்க தோஷம் கேட்டு விட்டேன்.

ஒன்னும் இல்லை மச்சி. இப்ப தான் வேலன் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் போன பண்ணார். அவருக்கு வந்திருக்கும் ஸ்டாக்கில் பல மருந்துகள் குறையுதாம்.. என்ன ஏதுன்னு பாத்துட்டு போன் பண்றியா.

மச்சி அவர் பொய் சொல்ல மாட்டார்டா. குறையுதுன்னு அவர் சொன்னா குறையுதுன்னு தான் அர்த்தம். இதுக்கு எதுக்கு நான் போய் செக் பண்ணனும். நம்ம c&f தான் சொதப்பியிருப்பானுங்க.. 

அப்படி எல்லாம் சொன்னா கம்பெனியில நம்ப மாட்டானுங்க.. உன்மேல ஒரு கரும் புள்ளி விழுந்துடும். அதனால உடனே போய் பாரு. ஆமா சொல்லிட்டேன்.

டேய் நான் பாதி தூரம் போயிட்டேன். இப்ப திரும்பினா நான் வேகமா போனா கூட ஒரு மணி நேரம் ஆகும். திரும்பி காரைக்கால் போனேன்னா இன்னிக்கு வேலை செய்ய முடியாது தெரியுமில்ல.

அதெல்லாம் எனக்கு தெரியும். இன்னிக்கு லோக்கல்ல வேலை பாத்துக்க. நாளைக்கு காரைக்கால் போயிக்க இப்ப உடனே திரும்புற வழிய பாரு.

என்று சொல்லி விட்டு போனை அணைத்தேன்.

ஒரு அரை மணி நேரம் கழித்து அலைபேசி அழைத்தது.

அதுக்குள்ளே புதுச்சேரி வந்திட்டியா மச்சி 

சார். நான் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் பேசுறேன். உங்க நம்பருக்கு தான் கடைசியா பேசியிருக்கார். அதான் கால் பண்ணினேன்.

என்ன சொல்றீங்க சார். ஏதாவது பிரச்சினையா?

உங்க கிட்ட பேசிட்டு வண்டியை சடார்னு திருப்பியிருக்கார். பின்னாடி வந்த லாரியை கவனிக்கலை.. ஹெல்மெட்டும் போடல.. ஸ்பாட்லேயே...

அதற்கு மேல் பேசியது எதுவும் என் மூளையில் பதியவே இல்லை...

சுவரில் சாய்ந்தபடி தரையில் அமர்ந்தேன்... எப்படி என் ராஜினாமா கடிதத்தை எழுதுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன்...