Tuesday, May 5, 2015

நினைவுச் சுழல் - 5

முதல் பகுதியை படிக்க

மேற்கில் சூரியன் இறங்கி கொண்டிருந்தான்... மூன்றரை மணி அளவில் முன் வாசல் வழியாக முகத்தில் சூடு வைத்து நிகழ்காலத்தில் நிலைக்க வைத்தான். கடை பேனர் ஒன்றை எடுத்து கடைக்கு முன் திரைச்சீலை போல் தொங்க விட்டு கடைக்குள் காற்று நுழைவை தடுத்து, இட்லி பானையாக்கி உள்ளே உட்கார்ந்து வேக ஆரம்பித்தோம்...

ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் தேநீர் கடையில் தேநீர் அருந்த பத்து நிமிட அனுமதி கிடைக்கும். தின்பண்டங்களும் சக்கை போடு போடும் கடை அது... அந்த கடைக்குள் இருக்கும் ஈக்களை விட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்... ஒரு பக்கம் ரீங்காரமிட்டபடி ஈக்களை கொல்லும் விளக்கு இயந்திரங்கள் ஓயாமல் உயிரழிப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும்.. மின்சார கம்பிகளில் சிக்கி பட படார் என்று வெடிக்கும் ஈக்களை காண சில சிறுவர்கள் அதன் அருகிலேயே இருப்பதும் உண்டு... 

ஒரு ஸ்ட்ராங் காப்பி என்று சொல்லி விட்டு மூலையில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்தேன்.

பலகாரங்களுக்கு கொடுக்கும் செய்தி தாளின் ஒரு பகுதி ஆங்காங்கே மேஜை மேல் இறைந்து கிடந்தது... காலியாக இருந்திருந்தால் படிக்க நேரம் கிடைத்து இருக்கும்... கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியில் என் கண்கள் வெளிச்சங்களை பிரதி எடுத்துக் கொண்டிருந்தது...

அந்த நேரத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் நான்கு மருந்து விற்பனை பிரதிநிதிகள் வந்து இறங்கினர்... கண்களின் வேலையே மூளை மறந்து, வழக்கமாய் ஆகி விட்ட  நினைவலைகளில் சிக்கி சுழன்றது..

சிவசுப்பிரமணியன்,
கோபிநாத்,
அருண்,
மற்றும்
செந்தில்.

வேலூரில் இவர்கள் நால்வரையும் தனி தனியாக காண்பது  அபூர்வம். 

மச்சான், அந்த பொண்ணு ரொம்ப பந்தா பண்றாடா? 

இது கோபி.

ஆமா மச்சான் அந்த ஆனந்த் பய கூட ஓவரா வழிஞ்சிகிட்டு, நம்ம கிட்ட சண்டைக்கு வரான்...

இது செந்தில்.

டேய், விடுங்கடா... அவங்கள போய் பெரிய ஆளா ஆக்கி கிட்டு... நாம நம்ம வேலைய பாப்போம்..

இது அருண்.

மச்சி, ஒரு பெரிசு போகுது. அவர் சங்கத்தில் சந்தா கட்டிட்டாரான்னு கேட்டு கலாய்ப்போம். வாங்கடா.

இது சிவசு.

காம்ரேட்...

நான்கு பெரும் ஒரே நேரத்தில் கூப்பிட்டதால் சோளிங்கர் செல்லும் பேருந்தை தேடிக் கொண்டு இருந்த என்னை பேருந்து நிலையமே திரும்பி பார்த்தது...

சொல்லுங்க தோழர் என்றேன் நான்.

wochardt , FDC மருந்துகளை தடை செய்ய சொல்லி போராட்டம் நடக்குதே அதப் பத்தி தெரியுமா, தோழர். -அருண்.

டேய், தடை செய்ய சொல்லி இல்லடா, புறக்கணிக்க சொல்லி, boycott ... -கோபி 

அன்று தொடங்கிய எங்கள் நட்பு நான் மேலாளர் ஆகும் வரை தொடர்ந்தது. கால சூழ்நிலை பிரதிநிதி வேலையை தொலைக்க வைத்த பொழுது பல்வேறு நல்ல நட்புகளும் கண்ணுக்குள் மட்டுமே நின்றது..

சார், காப்பி... என்று டங் என்று வைத்தான் கடை பையன்.. 

தொடரும் 
ஆறாவது பகுதியை படிக்க தொடரும் என்ற வார்த்தையை சுட்டவும் 

No comments:

Post a Comment