Friday, November 4, 2016

தந்தை - வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதை போட்டிக்கு அனுப்பிய கதை

"எதிரிக்கு எதிரி நண்பன்டா... "

"இருந்துட்டு போங்க"

அப்பாவும் மகனும் இப்படியா பேசிக்கொள்வது என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தபடி நான்.

முதலில் பேசியது என் தாத்தா. நானும் என் தாத்தாவும் நண்பர்கள் என்ற தொனியில் எக்காளமிட்டபடி...

என் மகன் எனக்கு எதிரி இல்லை என்பது போல் உதட்டில் புன்முறுவலை தாங்கியபடி இரண்டாவதாக பேசியது என் தந்தை.

எதிரும் புதிருமான, இரு துருவங்களிக்கிடையே தத்தளித்தபடி நான்...

அப்பாவின் அப்பா, என் தாத்தா, முன்னோர்கள் சொல்லியது தான் வேதவாக்கு என்று நிற்பவர். முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்று பழங்கால கதைகளில் ஊறி திளைப்பவர். மழை எதனால் வருகிறது என்றால் வருண பகவானால் வருகிறது என்று இன்றும் நம்பிக் கொண்டிருப்பவர். அவரது நம்பிக்கையே அவரின் இருப்புக்கு ஆதாரமாகியதால், அஸ்திவாரத்தை ஆட்டினால் ஆடிப் போய் கோபத்தின் உச்சியில் சென்று அமர்ந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்.

அப்பாவோ எதையும் ஆய்வு செய்யாமல் அதை நம்ப மாட்டார். அனைத்தையும் படிப்பார். படித்ததை மறு ஆய்வு செய்து, புரிதலை மேம்படுத்தி கொள்வார். அதற்கு ஒரு வகையில் உதவி புரிவது அவரது அப்பாவுடன் அவர் நடத்தும் வாதங்கள்.

"பேராண்டி, மழை எங்கிருந்துடா வருது?"

"அது வந்து தாத்தா, தண்ணி எல்லாம் ஆவியாகி மேலே போய் குளிர்ந்து திரும்பவும் தண்ணியாகி கீழே வருது" என்றேன் நான்.

"நம்ம ஊரு ஏரிக்கரை தண்ணி தினமும் தான் ஆவியாகுது, ஏன் தினம் பெய்ய மாட்டேங்குது?"

"அது தெரியலியே தாத்தா?"

"அப்படி வாடா பேராண்டி வழிக்கு... இப்ப தெரியுதா வருண பகவான் மகிமை"

இரு தாத்தா அப்பா கிட்ட கேட்டுட்டு வரேன். 

தாத்தா சொன்னதை கேட்டதும் அப்பா சிரித்தார்.

"அது தினமும் தாண்டா பெய்யுது, ஆனா இங்க பெய்யல, அடிக்கிற காத்துல வேற எங்கேயோ பெய்யுது"

"அப்ப தினமும் மழை பெய்யுதாப்பா?"

"மழை தினமும் தாண்டா பெய்யுது. நிலத்துல பெய்யும் மழைய விட கடல்ல பெய்யும் மழை அளவு அதிகம்டா. அது நமக்கு தெரியறதில்ல. அதனால தாத்தா அப்படி சொல்றார்."

தாத்தாவிடம் சென்று தந்தை சொன்னதை சொன்னதும் சிறிது எரிச்சலடைந்தார் தாத்தா. 

"சரிடா பேராண்டி நீ சொல்றதே கரெக்டுன்னு வச்சுக்குவோம். இந்த மழை தண்ணி எல்லாம் காத்துல எப்படி மிதந்துகிட்டு இருக்குது. சில நேரங்களில் ஐஸ் கட்டி மழை கூட பெய்யுது. புவி ஈர்ப்பு விசை அப்படி இப்படின்னு அளப்பீங்களே, இந்த ஐஸ் கட்டிகள் எல்லாம் எப்படி அந்தரத்துல நிக்குது."

அதானே என்று ஆச்சரியப்பட்டேன் நான்.

தாத்தாவுக்கு ஒரே குஷி. மீண்டும் வருண பகவான் கதையை எடுத்து விட்டார்.

நேராக தந்தையிடம் வந்தேன். நடந்ததை சொன்னதும் மீண்டும் புன்னகைத்தார். தன்னுடைய லேப்டாப்பில் கூகிள் பக்கத்தை வரவழைத்தார். எப்படி மழை அந்தரத்தில் நிற்கிறது என்று விளக்கி சொன்னார். 

"ஏம்பா, தாத்தா புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்."

"ஒவ்வொருவர் சுயமும் எதோ ஒரு அடையாளத்தில் தொங்கியபடி இருக்குது டா. அந்த அடையாளம் தொலைஞ்சுடுச்சுன்னா வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுன்னு சிலர் நம்புறாங்க. அதனால அந்த அடையாளத்தை கெட்டியா புடிச்சுகிட்டு அதை விட முடியாம அவஸ்தை படுறாங்க. இது எல்லோருக்கும் பொருந்தும்."

"நீ சொல்றது எனக்கு புரியல பா"

"உனக்கு ஒரு காலம் வரும் அப்ப புரிஞ்சுக்குவ."

"சரி தாத்தாவை மடக்க ஏதாவது ஒரு கேள்வியை சொல்லேன். நான் போய் அவரை நோன்டுறேன்."

"பாவம்டா அவரு"

"பரவாயில்ல, நீ சொல்லு பா."

"நீ முடிவு எடுத்திட்ட, சரி சொல்றேன் கேட்டுக்க."

"நெருப்பு இல்லேன்னா சூரியன் இல்ல, அப்ப சூரிய பகவான் வேற அக்னி பகவான் வேற அப்படின்னு ஒன்னு கிடையாது. அப்புறம் ஏன் ரெண்டு பேரையும் தனி தனியா கும்புடுறீங்க? சூரிய பகவான் பெரியவரா அல்லது அக்னி பகவான் பெரியவரா?"

இதை கேட்டால் நானும் அவருக்கு எதிரி ஆகி விடுவேனா என்று யோசித்தபடி அப்பாவின் அப்பாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் நான்...

தந்தை - வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதை போட்டிக்கு அனுப்பிய கதை

" இனிமேல் எங்க கையில எதுவும் இல்ல... சாரி." என்று மருத்துவர் கூறிய பொழுது, எத்தனையோ சினிமா படங்களில் பார்த்த இந்த காட்சி, எனக்கும் ஏற்படும் என்று எப்பொழுதும் நினைத்து பார்த்ததே இல்லை.

அரசு ஆஸ்பத்திரி என்பதால் இப்படி கூறுகிறார்களோ? தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றால் பிழைக்க வைத்து விடலாமோ என்ற எண்ணம் ஒரு கணம் எழுந்தாலும், ஒரு வேளை தனியார் மருத்துவனையில் உயிர் பிழைத்தாலும், உயிர் பிரியும் வரை நடை பிணமாக தான் தந்தை வாழ்வார் என்ற நினைப்பு அயர்ச்சியை கொடுத்தது. அப்படியே ஒரு ஓரமாக வெற்றிலை குட்கா கரை படிந்த படிக்கட்டு அருகில் அமைதியாக அமர்ந்தேன். நிற்கும் சக்தியை தந்தையின் நினைவலைகள் களவாடிக் கொண்டதோ என்னவோ?

"ஏம்பா நம்ம கிட்ட பணமா இல்ல, ஏன் அரசு ஆஸ்பத்திரிக்கே போகணும்னு நினைக்கிறீங்க?"

"காசு இல்லாமல் எத்தனையோ பேர் அரசு ஆஸ்பத்திரி தான் கதின்னு கிடக்கும் பொழுது,காசு இருக்குதுன்னு நாம சிஸ்டத்தை பைபாஸ் செஞ்சு போனா அது நம் கூட வாழுற சக மனிதர்களுக்கு செய்ற துரோகம டா ஐயா" 

என்ன ஆனாலும் அரசு ஆஸ்பத்திரி தான், ரயில் பயணங்களில் ஜெனெரல் கம்பார்ட்மெண்ட் தான், என்று அவர் உலகமே இன்னும் 1947 ல் இருப்பதாக பல சமயம் உணர்ந்ததுண்டு.

ஒருமுறை ஜெனெரல் கம்பார்ட்மெண்டில் அவருடன் பயணித்த பயணம் என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது. கூட்ட நெரிசலில் உள்ளேயும் போக முடியாமல் டாய்லெட் அருகில் நின்று கொண்டு சென்றதும், ஒவ்வொரு முறை யாராவது ஒருவர் டாய்லெட் பயன்படுத்தி விட்டு கதவை கூட மூடாமல் சென்று விடும் பொழுதும் குமட்டிக் கொண்டு வந்தது. காற்று வாங்கலாம் என்று கதவருகே நின்று கொள்ளலாம் என்று நினைத்து தந்தையிடம் சொன்ன பொழுது வேண்டாம் என்று தடுத்து விட்டார். ரயிலை விட்டு இறங்கியதும் அதற்க்கான காரணத்தையும் சொன்னார். யாராவது மலம் கழிக்கும் பொழுது போகும் வேகத்தில் படிக்கட்டு அருகில் நிற்கும் நபர் மீது தெறிக்கும் என்று சொன்ன பொழுது,

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

ஒரு முறை இண்டர்வியூ செல்வதற்காக சென்ற முதல் ரயில் பயணத்தில் இது போல் நடந்தது என்று சொன்னார்.

ஏன்பா இப்படி கஷ்டப் படனும் என்று கேட்டால், நான் மட்டுமா கஷ்டப் பட்டேன் என்று பதில் கேள்வி கேட்பார். நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கேள்வி தன பதிலாக கிடைத்திருக்கிறது.

இது போன்ற நடைமுறைக்கு ஒத்து வராமல்,ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வந்ததால் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பலசமயம் வாக்குவாதம் நடக்கும். எல்லா சண்டையிலும் என் தந்தை கோபத்துடன் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு எங்காவது சுற்றி விட்டு நானும் தங்கையும் உறங்கிய பிறகு வீட்டுக்கு வருவதே வழக்கமாய் இருந்தது. அப்படி ஒரு நாள் வெளியில் போய் திரும்பி வந்தவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது... என் தாய் கோபித்துக் கொண்டு எங்கோ சென்று விட்டார். 

என் அம்மாவை தேடிய என் தந்தை அவர் வேறு யாரோ ஒருவருடன் குடும்பம் நடத்துவது தெரிந்ததும், தேடலை கை விட்டு விட்டார்.

அதன் பிறகு எங்கள் வீடு அமைதியாக இருந்தது. நாங்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தோம், இதோ இது வரை.


"சார் உங்களை அந்த பெரியவர் கூப்பிடுறார்," என்று நர்ஸ் கூறியதும் விழுந்து அடித்துக் கொண்டு உள்ளே சென்றேன்.

"என்னப்பா?"

"என்னய்யா.... சொன்னாங்க.... டாக்டருங்க..." குரல் மெலிதாக, மூச்சு திணறலுடன் ஈனஸ்வரத்தில் முனகினார்.

".........." 

என் கண்கள் கலங்குவதை பார்த்து விட்டார்.

"எத்தனை... நாள்?"

நாக்கில் வார்த்தைகள் எழவில்லை. பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் கம்மியாக எடுத்ததை கூற முடியாமல்,  வார்த்தை வராமல் நான் நின்ற பொழுது, என் நிலைமை அவர் எப்படி புரிந்து கொண்டாரோ அதே போன்று புரிந்து கொண்டார். பல சமயங்களில் தோற்று போய் நான் நிலை குலைந்து நின்ற பொழுதெல்லாம் என் மன ஓட்டங்களை அவர் புரிந்து கொண்டதுண்டு.

அன்று அவர் சொன்னது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. 

"ஐயா வாழ்க்கை ரேஸ் இல்லடா... ஜாலியா வாழனும்... காசு பணம் சேர்த்தா தான் ஜாலியா இருக்க முடியும்னு இந்த உலகம் நம்புது, அதனால் தான் எல்லோரும் ஓடு ஓடுன்னு ஓடுறாங்க... ஆனா எப்படியா பட்ட வாழ்க்கையையும் வாழ தெரிஞ்சுக்குறதுல தான் ஜாலி இருக்குது. நீ நேர்மையா இத்தனை மார்க் எடுத்ததே எனக்கு பெருமை தான்." 

இங்க வா என்று அருகில் கூப்பிட்டார். 

"அம்மாவுக்கு...."

"சொல்லிடறேன் பா."

" தங்கச்சிக்கு... "

"சொல்லிடறேன் பா."

"முதல்ல.... சொல்லு... "

"சரிப்பா"

என்று சொல்லி விட்டு போனை எடுத்து கொண்டு வெளியே வந்தேன், தங்கைக்கு தகவலை சொல்லி விட்டு, வரும் வழியில் அம்மாவுக்கும் தகவல் சொல்லி விட சொன்னேன். 

என்னை விட என் தங்கைக்கு அம்மா மீது பாசம் அதிகம். என்னை விட என் தங்கை மீது அப்பாவுக்கு பாசம் அதிகம். 

அப்பாவின் பிளட் க்ரூப் ஓ பாசிடிவ். அம்மாவின் பிளட் க்ரூப் ஏ பாசிடிவ். என் பிளட் க்ரூப்  ஏ பாசிடிவ். என் தங்கையின் பிளட் க்ரூப் பி பாசிடிவ். 

கல்லூரியில் இது சம்பந்தமாக படித்த பொழுது, ஒரு ஏ பிளட் க்ரூப் மற்றும் ஓ பிளட் க்ரூப் கொண்ட பெற்றோர்களுக்கு பி பிளட் க்ரூப் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்து என் தங்கையின் பிளட் க்ரூப்பில் எதோ தவறு இருக்கிறது என்று பல லேப் க்கு என் தங்கையை அழைத்து கொண்டு சென்று டெஸ்ட் செய்தேன். எல்லா இடத்திலும் வந்த ஒரே ரிசல்ட் பி பிளட் க்ரூப் தான். தவறு பிளட் க்ரூப் டெஸ்ட்டில் இல்லை என்று தெரிந்ததும், இதை எப்படி என் தந்தைக்கு சொல்வது என்று தினம் தினம் அவஸ்தையில் நெளிந்தது உண்டு. 

யாருக்கும் உபயோகம் இல்லாத இந்த உண்மை அப்படியே குழி தோண்டி புதைக்கப் பட வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், இதுவரை என் தந்தையிடம் இருந்து நான் எதையுமே மறைத்தது இல்லை என்ற அவர் எண்ணத்தை நான் ஏமாற்றுவது போலவே உணர்ந்தேன். 

உள்ளே சென்றேன்.

என் தந்தை நான் வருகிறேனா என்று பார்த்துக் கொண்டே இருந்தார்.

"அம்மாவுக்கு...."

"சொல்லிடறேன் பா."

" தங்கச்சிக்கு... "

"..................."

மெலிதாக புன்னகைத்தார்...

"எனக்கு.... எப்பவோ... தெரியும்... யா"