Sunday, May 14, 2017

நல்லதே விதைப்போம்பாரத ஸ்டேட் வங்கி அருகில் உள்ள சாலை பந்தய சாலைக்கே உரிய  ஏற்றத்துடன் வளைந்து செல்லும். அங்கிருந்த அரச மரம் கோடை காலம் தொடங்கி விட்டது என்று அறிகுறியாக இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது. என் வருகையை வரவேற்பது போல சாலைகளில் சிதறிக் கிடந்தன அரச மரத்தின் காய்ந்த இலைகள். என் வண்டியின் வேகத்தால் எழுந்த காற்று விசையில் அவை பறக்க ஆரம்பித்தது. இதே வேறொரு தருணம் என்றிருந்தால் நானும் பறக்க ஆரம்பித்து இருப்பேன். 

அந்த அழகை ரசிக்கவே நான் பலமுறை அந்த சாலையில் பயணம் செய்தது உண்டு. அந்த நேரத்தில் பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பான விண்ட் பைக்கின் விளம்பர இசை என் காதுகளில் ஒலிப்பது போல் தோன்றும். 

ஹூ வா ஹூ வா 
ஹூ வா ஹூ வா 

என்று காற்றின் ஓலத்துடன் செல்லும் அந்த விளம்பர இசை என் நெஞ்சை விட்டு என்றும் அகன்றதில்லை. 

ஆனால் இன்றோ என் மனம் இதை எதையும் பதிவு செய்யவில்லை. மன ஈடுபாடு இல்லாமல், இயந்திர கதியில் வண்டிகளை ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"அண்ணே! வண்டி ரெடியாயிடுச்சுண்ணே எடுத்துக்குங்க..." என்றேன் நான்.

"வழக்கமா டெஸ்ட் ரைட் போயிட்டு தானே வேண்டிய கொடுப்ப! இன்னிக்கி என்ன புதுசா? போய் ஓட்டி பார்த்துட்டு வண்டிய கொடு," என்று உரிமையுடன் சொன்னார் என் ரெகுலர் கஸ்டமர், முனியன்...

எப்பவும் சரி செய்த வண்டியை ஓட்டிப் பார்த்து வண்டியின் சத்தத்தை உள்வாங்கி எங்கேனும் பிரச்சினையை சரி செய்யாமல் விட்டு விட்டேனா என்று சரி பார்த்து விட்டு வண்டியை கொடுப்பது தான் என் வழக்கம். ஆனால் இன்றோ அந்த மனநிலையில் நான் இல்லை என்பது அவருக்கு தெரியாதே! அவர் மனம் நோகக் கூடாது என்று வண்டியை எடுத்து கொண்டு வந்து விட்டேன். தூரத்தில் போக்குவரத்து சமிக்கை , பச்சை விளக்கில் இருந்து சிகப்பு விளக்குக்கு மாற போகிறேன் என்று நொடிக்கணக்கை துவங்கி இருந்தது.

5
4
3
2
1

மஞ்சள் நிறம்..

நான்  போக்குவரத்து சமிக்கை அருகே வரவும் சிகப்பு விளக்கு மாறவும் சரியாக இருந்தது. தன்னிச்சையாய் பிரேக் அடித்து நிறுத்தினேன். பின்னால் வந்தவனுக்கு,  வெயில் மண்டையை பிளந்ததால் சூடானான். 

"அதான் டிராபிக் போலீஸ் யாரும் இல்லையே, போக வேண்டியது தானே," என்று எரிந்து விழுந்தான்.

சண்டை போடும் எண்ணம் தோன்றா அளவுக்கு பிரச்சினைகளில் மூழ்கி இருந்ததால் கண்டும் காணாமல் வெயிலில் வாடினேன். வேறு வழியில்லாமல் அவனும் என் அருகில் நின்று பச்சை விளக்கு மாற காத்திருந்தான். அவன் வண்டியில் இருந்து எழுந்த வித்தியாசமான சத்தம் அப்பொழுது தான் என் காதுகளில் விழுந்தது. தலைக்கு மேல வெள்ளம் போனாலும் உள்ளுக்குள் உறங்கி கொண்டிருக்கும் கடமை உணர்வு எழுந்து வந்து விடுகிறது. எவனோ ஒருவனின் பிரச்சினை என்று கடந்து போக முடியாமல் திணறினேன். ஏற்கனவே உரசிய தீப்பொறியை அணையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சூரியன். ஆனது ஆகட்டும் என்று ஒரு கனைப்புடன் ஆரம்பித்தேன்.

"சார் உங்க வண்டியில எஞ்சின் ஆயில் இல்லாம ஒட்டிக்கிட்டு இருக்கீங்க. தயவு செய்து சீக்கிரம் மாத்திடுங்க. இப்பவே கிளச் அடி வாங்கி இருக்கு. கண்டுக்காம விட்டீங்கன்னா கியர் ஷிப்ட்டிங் அடி  வாங்கும்... கியர் ஷிப்ட்டிங் போனா கிளச் பிளேட் அடி வாங்கும்.. அப்புறம் கனெக்டிங் ராட் போகும் அப்புறம் ஹெட் அவுட் ஆகும் அப்புறம் ஹெட் ரேக் காலியாயிடும். சின்ன செலவு.. யோசிச்சீங்கன்னா பெரிய செலவா வச்சிடும், " என்றேன் நான்.

எரிக்கும் வெயில் பத்தாது என்பது போல், அவன் பார்வையும் என்னை சுட்டெரிக்க ஆரம்பித்தது. அதற்குள் பச்சை விளக்கு விழுந்து பெரிய சண்டையில் இருந்து என்னை காப்பாற்றியது போக்குவரத்து சமிக்கை. நேராக என் கடைக்கு சென்று வண்டியை முனியன் அண்ணனிடம் ஒப்படைத்து விட்டு சாப்பிட அமர்ந்தோம் நானும் என் உதவியாளர் பழனியும்.

சாப்பிட பிடிக்காமல் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை பிசைந்த்து கொண்டே உக்கார்ந்து இருந்தேன் நான்.

"என்னண்ணே? இன்னிக்கி எதோ மாதிரி இருக்கீங்க. ஆஸ்பத்திரியில நல்ல நியூஸா சொல்லலியா."

"ஆமாம்பா! இன்னும் பத்தாயிரம் செலவு ஆகும்னு சொல்றானுங்க."

"வாய் பேச முடியாத, ஒரு வண்டியோட, சத்தத்தை வச்சே என்ன பிரச்சினைன்னு நீங்க கண்டுபுடிக்கிறீங்க. பேசுற மனுஷனோட உடம்புல என்ன பிரச்சினைன்னு எந்த டாக்டராலேயும் கண்டுபுடிக்க முடியாத நோய்ன்னு கேக்கும் போது கடுப்பாகுதுண்ணே! என்னா படிச்சானுங்கன்னு தெரியலியே!"

"அப்படி இல்லடா பழனி, நமக்கு தெரிஞ்சது வெறும் 15% தானாம்.. தெரியாதது இன்னும் எவ்வளவோ இருக்காம். அதுல மிகப் பெரிய அதிசயம் மனிதன் தானாம். நம்ம வண்டிகளில் கொஞ்சம் ஸ்பேர் பார்ட்ஸ் தான் இருக்கு.. ஆனா மனுஷ உடம்புல எத்தனை பார்ட்ஸ் இருக்கு தெரியுமா?"

"கொஞ்சோண்டு ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கிறதால தான் நாம் ரிப்பேர் பண்றதுக்கு வெறும் 20, 30 ன்னு வாங்கி கிட்டு இருக்கோம். அதிகமா இருக்கிறதால தான் அவங்க 250 ரூபாய் வரைக்கும் வாங்கிறாங்க. நாம ஒழுங்கா செய்யலேன்னா நம்மள சும்மா விட்டுடுவாங்களா.. ஆனா அவங்கள மட்டும் எதுவும் கேள்வி கேக்க முடியாது அப்படி தானே."

"நீ வேற ஏண்டா? விடுறா அவங்களும் மனுஷங்க தாண்டா.. அவங்களால முடிஞ்ச வரைக்கும் அவங்க முயற்சி பண்றாங்க."

"எல்லா மந்திரிகளும் போய் அட்மிட் ஆகிறாங்களே RC ஆஸ்ப்பிட்டல் அங்கே நம்ம பாப்பாவுக்கு வைத்தியம் செய்ய முடியாதா?"

"ஒரு தபா போய் அங்கேயும் பார்த்தேன்.. ஆரம்ப செலவே 1.5 லட்சம்னு சொன்னாங்களா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு ஓடியாந்துட்டேன்... உள்ள போயிருந்தா டவுசரை உருவிட்டு தான் விட்டிருப்பானுங்க."

"அதான் இலவச காப்பீடு எல்லாம் இருக்கேண்ணே.. அதுல சேர்ந்து பார்த்துக்கிறது."

"ம்க்கும்... எந்த நோயின்னு தெரிஞ்சா தான் காப்பீடுன்ற பேச்சே வருமாம்.. எந்த நோயின்னு தெரியாதவரை காப்பீடு எல்லாம் பேச்சுக்கே இடமில்லேன்னு சொல்லிட்டாங்க. வேணும்னா செலவு பண்ணி சேருங்க. நோய் என்னன்னு கண்டுபிடிச்சுட்டா திரும்பி பணத்தை வாங்கிக்கலாம்னு சொல்லிட்டாங்க."

"அப்படியாண்ணே?"

"கிட்ட தட்ட 10,15 டாக்டர் பார்த்துட்டோம். ஒருத்தரால கூட கண்டுபிடிக்க முடியல.. கண்டுபிடிக்க முடியலேன்னா RC ஆஸ்ப்பிட்டல் போறது தான் ஒரே வழி."

"என்னன்னே இப்ப தான் 1.5 லட்சம் ஆகும்னு சொன்னீங்க."

"வேற வழி இல்லை. இந்த கடைக்கு இப்ப 2 லட்சம் வரைக்கும் பகடி கொடுக்க ஆளுங்க ரெடியா இருக்காங்க... கடையை கை மாத்தி விட்டுட்டு ஏதாவது ஆலமரம் அரச மரம் அடியிலே பொழப்பை பார்க்க வேண்டியது தான். என்ன வாழ்க்கையை அங்க ஆரம்பிச்சு தான் இந்த நிலைக்கு வந்தேன், வந்த இடத்துக்கே போறது தான் வழின்னா, அதையும் செஞ்சுட வேண்டியது தான்."

"உடுண்ணே.. உன் நல்ல மனசுக்கு அதெல்லாம் ஆகாது."

"விடுறா வேலையை பார்ப்போம்," என்று  கூறிவிட்டு  வண்டிகளை ரிப்பேர் செய்ய தொடங்கினோம் 

 மாலை நெருங்க நெருங்க வானம் கருக்கத் தொடங்கியது. மிதமாக வீசிக் கொண்டிருந்த வெக்கைக் காற்று புழுதியை வாரியெடுத்துக் கொண்டு குளிரை பரப்பத் தொடங்கியது. 

மழை தொடங்கியது.

ஆறு மணிக்கு தொடங்கிய மழை எட்டு மணிக்கு தான் விட்டது. அண்ணா சாலை வழக்கம் போல ஒரு பெரிய சாக்கடை கால்வாயாக மாறியது. முட்டிக் கால் அளவு தண்ணீர் கடைக்கு உள்ளேயும் வருவேன் என்று ஒவ்வொரு வண்டி செல்லும் போதும் பயமுறுத்தி பயமுறுத்தி சென்றது.

கடையை மூடி விட்டு செல்வோம் என்று கடையை கட்டத் தொடங்கினோம். மழை நின்று தூரல் போட்டுக் கொண்டு இருக்கிறது.

தூரத்தில் ஒரு ஆங்கிலேய மனிதர் தன வண்டியை உதைத்து கொண்டு இருக்கிறார். வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்கிறது. சோர்ந்து போய் அங்குமிங்கும் பார்த்தவருக்கு என் கடையின் போர்டு நம்பிக்கை அளித்தது. மெதுவாக வண்டியை தள்ளியபடி கடை அருகே வந்தார் அந்த ஆங்கிலேயர் 

"பாஸ் ஸ்டார்டிங் டிரபுல்  (Boss starting trouble )"

நான் எழுந்து வந்து வண்டியின் சாவியை அனைத்து மீண்டும் உயிர்ப்பித்தேன். கிக்கரை உதைத்தேன். வண்டி ஸ்டார்ட் ஆகும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பிளக் அடாப்டரை கழற்றினேன் பிளக் வயரை என்ஜின் அருகே வைத்து, 

"பழனி ஸ்டார்ட் பண்ணு"

பழனி ஸ்டார்ட் செய்ய நெருப்பு பொறி அந்த வயரில் இருந்து சிறு சத்தத்துடன் வெளி வருகிறது.

சாவியை ஆப் செய்தேன்.

"அண்ணே! லைன் எல்லாம் சரியா தான் இருக்கு. ஆனா இதை விட்டா நமக்கு வேற வழியில்லை.. நாளைக்கு பாப்பாவுக்கு ஆஸ்பத்திரியில் செலவு செய்ய பத்தாயிரம் சொன்னீங்களே. இது தான் சரியான சான்ஸ். கார்புரேட்டர் போயிடுச்சு அது போயிடுச்சு இது போயிடுச்சுன்னு சொல்லி ஒரு 10000 தீட்டிடலாம் ணே. நம்மள சுரண்டன வெள்ளைகாரன நாம சுரண்டுறது தப்பில்லைண்ணே!"

நான் நிமிர்ந்து வெள்ளைக்காரனை பார்த்தேன். ஆங்கிலேயர் சிறு புன்னகையுடன் எங்களை பார்த்து கொண்டிருந்தார்.

"அவருக்கு ஒன்னும் புரியாதுண்ணே. நீ மட்டும் ஊம்னு சொல்லுண்ணே நான் பேசிக்கிறேன்."

"எங்க எவனை நான் கஷ்டப் படுதினேன்னு தெரியல, அதனாலேயே என் குழந்தை கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்குதோன்னு  நினைச்சுகிட்டு இருக்கேன்.. அதனால இந்த தப்பை மட்டும் செய்ய வேணாம். நாம் நேர்மையா இருந்தா நடக்க வேண்டியது தானா நடக்கும், இதான் என் பாலிசி. அது உனக்கு தெரியுமில்ல."

பழனி சோர்ந்து போய் ஓரமாய் அமர்ந்து விட்டான். 

கடமையா பாசமா என்று போட்டி வரும் போது என்னிடம் மட்டும் தான் கடமை வெல்கிறதா என்று கேள்வி எழுந்தது. அதற்கு பதிலும் தொடர்ந்தே வந்தது, இல்லை என்று.

நான்  பிளக் அடாப்டருக்கு செல்லும் வயரை தண்ணீரின்றி துடைத்தேன். பிறகு பிளாக் அடாப்டரின் இரு பகுதியையும் ஊதினேன். பிறகு வயரில் பிளாக் அடாப்டரை சொருகி பிளக்கில் சொருகினேன். சாவியை ஆன் செய்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். வண்டி ஸ்டார்ட் ஆகி விட்டது. 

"ஓகே சார்.. 10 rupees சார்."

ஆங்கிலேயர் ஆச்சரியத்துடன் பார்த்தார். பர்ஸை திறந்து பத்து ரூபாயை எடுத்து கொடுத்தார். கூடவே ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டார்.

"தம்பி எனக்கு தமிழ் நல்லா தெரியும்," என்றார் ஆங்கிலேயர் 

எனக்கும் பழனிக்கு தூக்கி வாரிப் போட்டது.

"நீங்க பேசியதெல்லாம் கேட்டேன். ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. தேவைக்கும் கொள்கைக்கும் நடக்கும் போராட்டத்தில் எப்பவும் தேவை தான் ஜெயிக்கும். முதல் முறையா கொள்கை ஜெயிக்கிறதை பார்க்கிறேன்."

இவ்வளவு அற்புதமாக ஒரு ஆங்கிலேயரால் தமிழ் பேச முடியுமா என்று வியப்பில் வாய் பிளந்து நின்று கொண்டிருந்தேன்.

"நானும் ஒரு டாக்டர் தான். உங்க மகளுக்கு எதோ பிரச்சினை என்பது மட்டும் புரிஞ்சது. என்ன பிரச்சினையாய் இருந்தாலும் சரி, சரி பண்ணிடலாம். அதுக்கு நான் கியாரண்டி. நீ ஒரு பைசா கூட தர வேணாம் எல்லா செலவும் நான் பார்த்துக்கிறேன்."

ஆங்கிலேயர் கார்டை எடுத்து நீட்டுகிறார்.

"இந்தா என் கார்டு. நாளைக்கு உன் குழந்தையோடு வந்து என்னை பாரு."

நான் கார்டை பார்த்தேன் . 

அதில் உள்ள பெயரோ அலைபேசி எண்ணோ என் கவனத்தை ஈர்க்கவில்லை. CHIEF DOCTOR, RC RESEARCH HOSPITAL என்ற வாசகம் மெலிதாக என் சோகங்களை துடைத்து எரிந்து புது நம்பிக்கையை ஊட்டியது.

[முற்றும்]