Saturday, December 3, 2011

வேலை...

வேலை தேடி
வேலை தேடி
கண்ணீராக
மழை பெய்தும்
மாறவில்லை
பாலைவன வாழ்க்கையல்லவா

வேலை என்னும்
வேர்களில்லை
பொருளாதார
விழுதுமில்லை
சாய்ந்து இங்கு
கிடக்குதெங்கள் வாழ்க்கையல்லவா

வேலை தேடியே
நாங்க ஓடுறோம்..
தினம் வேலை தேடியே
இங்க நாங்க தேயரோம்..

வேலை தேடும்
எங்க மனம் புண்ணாகுது..
என்றும் தண்டச்சோறு
எங்களோட பேராகுது...   

நன்றி: கூட்டுச் சாலை...

பர்சனல் மார்க்கெட்டிங் செய்ய தெரியாத இளைஞர் களின்  கண்ணீர் கதை இது...

Friday, November 18, 2011

புதுப் புரட்சி

நான் தமிழன்,
நீ தெலுங்கன்...

நான் இந்தியன்,
நீ பாகிஸ்தானி...

நான் பிராமணன்,
நீ சூத்திரன்...

நான் வலதுசாரி,
நீ இடது சாரி...

நான் ஆத்திகன்,
நீ நாத்திகன்...

நான் சீக்கியன்,
நீ கிருத்துவன்...

கடக்கும் திசை எங்கும்,
கண்ணுக்கு புலப்படாமல் சுவர்கள்..

நாம் கஷ்டப் படுபவர்கள்...
நாம் சுரண்டப் படுபவர்கள்...
என்ற ஒற்றுமை மட்டும் உறக்கத்தில்...

கண்கள் உறக்கத்தை கலைத்ததும்,
காற்றில் கரைந்து விடுகிறது சுவர்கள்...

யுகப் புரட்சி பார்த்தாயிற்று,
இந்த புதுப் புரட்சி?

Thursday, November 10, 2011

மழை

பறந்து சென்றவர்
திரும்பி வந்தனர்

எங்கு எடுக்கப் பட்டதோ
அங்கே திருப்பி வைக்கப் பட்டது..

நீரின் மீள் சுழற்சி,
கசடுகள் நீங்கி
சுத்தமாய் திரும்பி வந்தால்...

சாலையில்
கால்வாயில் தான்
சங்கமம்...


 தோழர் ஜெயராம் தினகரபாண்டியன் அவர்களின் வலைப்பூவில் மழை குறித்து கேட்ட கேள்விகளுக்கு என் பதில்...

Friday, November 4, 2011

2G ஊழல்

காத்தாடி
வால்
நூல் 

யார் காத்தாடி
யார் வால்
யார் நூல்
நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...

Thursday, November 3, 2011

மனசு

அடி மேல் அடி வைத்து
தடியை நிலத்தில் ஊன்றி,
ஒரு அடிக்கு 
ஒரு நிமிஷம் 
என்று நடந்து சென்றார்
ஒரு பெரியவர்...

மின்சார கட்டணம்
கட்ட கடைசி தேதி...

வேகமாய் நடந்து
அவரை கடந்தேன்...

கடந்த ஒரு நொடியில்
வேதனை பட்டிருப்பாரோ 
என்ற எண்ணம் 
மட்டும்... 

இன்னும் 
வரிசையில் நின்று 
கொண்டிருக்கிறது
என் மனசில்...

Friday, October 21, 2011

பொதுஉடமை vs CAPITALISM

வளைந்து நின்ற
கேள்விக்குறிகளை,
அடித்து நிமிர்த்தி
ஆச்சரியக் குறியாக்கி...

புரட்சி
விளைவித்த
மக்கள் ஜனநாயகம்...
தவறான கைகளில்
சிக்கி
சிதறுண்டு
மக்கள் வாழ்வை
மீண்டும் கேள்விக் குறியாக்கியது...

சோவியத் சிதறியதால்
பொது உடமை தோற்றது,
என்ற நையாண்டி
இன்று தலை குனிந்து
மௌனமாய் நிற்கிறது...

அமெரிக்கா பொருளாதாரம்
தரம் தாழ்ந்து
தனி உடமை தோற்று போய்...

அமெரிக்க மண்ணில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தை ஆதரித்து...

Thursday, October 20, 2011

ஐப்பசி அமாவாசை

மேசைக்கடியில் பதுங்கும்
நாய்களும்
பூனைகளும்..

உயிர் நடுக்கத்தில்
செல்லப் பிராணிகளும்..

ஊரெங்கும் வேட்டைக்காரர்களா?
மிரண்டு போய்
பறவை இனங்கள்..

அமைதியான தூக்கம்
கலைந்து அலறும்
பிஞ்சு உள்ளங்கள்...

காற்றில் கலக்கும்
கந்தக நெடி...

போர்களுக்கு மத்தியில்
வாழ்ந்தவர்களால்
அனுபவிக்க முடியுமா
பட்டாசுகளின் ஆரவாரத்தை?
எழுந்து அடங்கும் சந்தேகம்...

பலர் சந்தோஷங்களில்
தீப ஒளி என்றாலும்,
பலர் பயத்தினில்
இருண்டே தான் கிடக்கிறது
ஐப்பசி அமாவாசை...

அரசியல்

அர்த்தம் மாறிய வார்த்தை
அரசியல்...

உயிர் இழந்த வார்த்தையால்
இருளில் கிடக்கிறது பலர் வாழ்வு...

நச்சு நிரலாய்
மாறிய வார்த்தையை
மீட்டெடுப்போம்...

இது மொழிப்போர் அல்ல
நம் வாழ்வின் உயிர்ப் போர்...

கவிதைகள்

பேனா முட்கள்
கீறும் காயங்களால்
புடைத்து எழும்
எழுத்துக்கள்...

கண்ணீர் மை
வார்த்தைகளை நனைத்து
காகிதத்தை கனமாக்குகிறது...

சுய வலிகள்
சுமக்கும்
காதல் காகிதங்கள்
வரலாற்று பக்கங்களில்
அரசரின் வாழ்வாய்...

சமுதாய அழுக்கை
சாடி
பழுப்பேறி நிற்கும்
காகிதங்கள்
கலங்கரை விளக்காய...

Wednesday, October 19, 2011

முட்கள் இல்லாத வெள்ளை ரோஜாக்கள்...

சிகப்பு அணுக்களின் 
விரோதம் பெற்ற 
வெள்ளை அணுக்கள்...

சமுதாய இமைகளின் நடுவே
சிக்கி தவிக்கும்
விழி படலங்கள்...

அனைவரும் காலடி மட்டுமே 
பதிக்கத் துடிக்கும்
பௌர்ணமி நிலாக்கள்...

புயல் காற்று
துரத்திச் செல்லும்
வெண்மேகங்கள்...

பிற்போக்கு
பேச்சாளர்களின் வாய்க்கு 
அவல், பொரிகள்,
அவர்கள்...

இவர்கள்
சிறகுகள் வெட்டப் பட்ட
சமாதான புறாக்கள்...

என்றும்
தேனீக்களுக்கு அஞ்சி வாழும்
முட்கள் இல்லாத
வெள்ளை ரோஜாக்கள்...

பிற்சேர்க்கை: பல தோழர்கள்  புரியவில்லை என்று கூறி உள்ளார்கள்... சாமானிய மக்களுக்காக எழுத வேண்டும் என்பதே என் எண்ணம்.. படிப்பவர்களுக்கு புரிய வில்லை என்றால் படைப்பு இறந்து விட்டதாகவே எண்ணம்...
இந்த கவிதை இளம் விதவைகள் குறித்து எழுதியது...
இந்த தோல்வியை படிகட்டாய் மாற்றி இனி வரும் கவிதைகள் புரியும் படியாகவே இருக்கும் என்று கூறிக் கொள்கிறேன்

Wednesday, October 12, 2011

தோள் தருவோம் தோழனே

மண்ணுக்கு உரமாகாதே;
மக்களுக்கு உரமாகு...

வாழ்வதற்காக சாகும் நீ;
செத்த பிறகும் வாழப் பார்...

பசி வறுத்தி எடுக்கும்,
பொருட்படுத்தாதே...

அந்த வயிற்று தீயை 
நாவினில் கொண்டு வா...
வார்த்தைகளில் குழை,
காகிதத்தில் ஓட விடு...
தீமைகளை சாடி விடு...

தனிமனிதனாய் 
தேவையில்லை;
அனைவரும் உன்னோடு,
தோழா,
தோளோடு! தோளோடு!!



Tuesday, October 11, 2011

மெல்ல தமிழ் இனி...

பத்து ரூபாய்க்கு
பசியாற என்ன கிடைக்கும்?

கேள்விக்கு பதில்:
4 இட்லி அல்லது
3 போண்டா அல்லது
2 வடை அல்லது 
1 லிட்டர் தண்ணீர்...


கேள்வி கேட்டவன்
பஞ்சாலை தொழிலாளி;
பதிலளித்தவன்
உணவக முதலாளி!

விதைத்த வியர்வைக்கு
அறுவடை எப்பொழுது?

கேள்விக்கு பதில்
மௌனம்...

கேள்வி கேட்டவன்
விற்பனை பிரதிநிதி தொழிலாளி;
மௌனம் சாதித்தவன்
முதலாளி!


நீதியின் தராசு தட்டில்
எங்களுக்கு மட்டும் இடமில்லையா?

கேள்விக்கு பதில்
தேர்தல் வரட்டும்...

கேள்வி கேட்டவன்
சாலை துப்புரவு தொழிலாளி;
பதிலளித்தவன்
முதலாளி...

அய்யா,
நாங்கள்
வாழ என்ன வழி?


சூ
சத்தம் போடாதே;
நாங்கள்
தமிழ் வாழ
போராடி கொண்டிருக்கிறோம்...

கேள்வி கேட்டவன்
தமிழக தொழிலாளி;
பதில் அளித்தவன்
அரசியல் முதலாளி!

தமிழ் சாகரம்,
தமிழன் ஆறு....

ஆற்று நீர்
வற்றும் வரை
சாகரம் வற்றாது...
மெல்ல தமிழ் இனி
சாகாது...

குறிப்பு: இந்த கவிதை 2004  ஆம் வருடம் த.மு.எ.ச வின் கிளை மாநாட்டிற்காக எழுதப் பட்ட கவிதை... அப்பொழுது ஒரு பஞ்சாலை தொழிலாளியின் ஒரு நாள் சம்பளம் பத்து ரூபாய் என்று படித்து பின்பு வெறுப்பில் எழுதிய கவிதை...


Sunday, October 9, 2011

விடியும் தருணம்

மழையில் நனைந்த
கோழி போல் 
சுருங்கி விட்டது
உலகம்...

துடிக்க மறந்து
விட்ட நிலையில்
இரும்பு துண்டமாய் 
இதயம்...

புதிய பொருளாதார 
கொள்கையுடன் 
உலக வங்கியின்
பயணம்...

கண்ணீர் சிந்தும்
கூட்டத்திடம்
குருதி உறிஞ்சும் 
அவலம்...

நமக்கென்ன என்று
இருந்தால்,
வாழ்வதிங்கு
சிரமம்...

நம் அனைவர்
கைகளும்
இணைந்து விட்டால்
விடியல் என்பது
சுலபம்...