Wednesday, February 8, 2012

மின்வெட்டு

கருத்த வானத்தில்
கண் சிமிட்டும் விண்மீன்கள்..
சுய வெளிச்சத்தில்
சுற்றி திரியும் மின் மினிகள்....

புத்தகத்தில் 
கவனம் செல்லாமல்...

காத்திருக்கிறேன்..

எட்டு மணிக்கு வரும்
மின்வெட்டுக்கு...

Saturday, December 3, 2011

வேலை...

வேலை தேடி
வேலை தேடி
கண்ணீராக
மழை பெய்தும்
மாறவில்லை
பாலைவன வாழ்க்கையல்லவா

வேலை என்னும்
வேர்களில்லை
பொருளாதார
விழுதுமில்லை
சாய்ந்து இங்கு
கிடக்குதெங்கள் வாழ்க்கையல்லவா

வேலை தேடியே
நாங்க ஓடுறோம்..
தினம் வேலை தேடியே
இங்க நாங்க தேயரோம்..

வேலை தேடும்
எங்க மனம் புண்ணாகுது..
என்றும் தண்டச்சோறு
எங்களோட பேராகுது...   

நன்றி: கூட்டுச் சாலை...

பர்சனல் மார்க்கெட்டிங் செய்ய தெரியாத இளைஞர் களின்  கண்ணீர் கதை இது...

Friday, November 18, 2011

புதுப் புரட்சி

நான் தமிழன்,
நீ தெலுங்கன்...

நான் இந்தியன்,
நீ பாகிஸ்தானி...

நான் பிராமணன்,
நீ சூத்திரன்...

நான் வலதுசாரி,
நீ இடது சாரி...

நான் ஆத்திகன்,
நீ நாத்திகன்...

நான் சீக்கியன்,
நீ கிருத்துவன்...

கடக்கும் திசை எங்கும்,
கண்ணுக்கு புலப்படாமல் சுவர்கள்..

நாம் கஷ்டப் படுபவர்கள்...
நாம் சுரண்டப் படுபவர்கள்...
என்ற ஒற்றுமை மட்டும் உறக்கத்தில்...

கண்கள் உறக்கத்தை கலைத்ததும்,
காற்றில் கரைந்து விடுகிறது சுவர்கள்...

யுகப் புரட்சி பார்த்தாயிற்று,
இந்த புதுப் புரட்சி?

Thursday, November 10, 2011

மழை

பறந்து சென்றவர்
திரும்பி வந்தனர்

எங்கு எடுக்கப் பட்டதோ
அங்கே திருப்பி வைக்கப் பட்டது..

நீரின் மீள் சுழற்சி,
கசடுகள் நீங்கி
சுத்தமாய் திரும்பி வந்தால்...

சாலையில்
கால்வாயில் தான்
சங்கமம்...


 தோழர் ஜெயராம் தினகரபாண்டியன் அவர்களின் வலைப்பூவில் மழை குறித்து கேட்ட கேள்விகளுக்கு என் பதில்...

Friday, November 4, 2011

2G ஊழல்

காத்தாடி
வால்
நூல் 

யார் காத்தாடி
யார் வால்
யார் நூல்
நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...

Thursday, November 3, 2011

மனசு

அடி மேல் அடி வைத்து
தடியை நிலத்தில் ஊன்றி,
ஒரு அடிக்கு 
ஒரு நிமிஷம் 
என்று நடந்து சென்றார்
ஒரு பெரியவர்...

மின்சார கட்டணம்
கட்ட கடைசி தேதி...

வேகமாய் நடந்து
அவரை கடந்தேன்...

கடந்த ஒரு நொடியில்
வேதனை பட்டிருப்பாரோ 
என்ற எண்ணம் 
மட்டும்... 

இன்னும் 
வரிசையில் நின்று 
கொண்டிருக்கிறது
என் மனசில்...

Friday, October 21, 2011

பொதுஉடமை vs CAPITALISM

வளைந்து நின்ற
கேள்விக்குறிகளை,
அடித்து நிமிர்த்தி
ஆச்சரியக் குறியாக்கி...

புரட்சி
விளைவித்த
மக்கள் ஜனநாயகம்...
தவறான கைகளில்
சிக்கி
சிதறுண்டு
மக்கள் வாழ்வை
மீண்டும் கேள்விக் குறியாக்கியது...

சோவியத் சிதறியதால்
பொது உடமை தோற்றது,
என்ற நையாண்டி
இன்று தலை குனிந்து
மௌனமாய் நிற்கிறது...

அமெரிக்கா பொருளாதாரம்
தரம் தாழ்ந்து
தனி உடமை தோற்று போய்...

அமெரிக்க மண்ணில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தை ஆதரித்து...