Monday, October 31, 2011

ஐ.டி [சவால் சிறுகதை -2011]

எவரும் எளிதில் ஊடுருவ முடியாத, வலைபின்னல் கொண்ட அமைப்பு இது.
ஒரு செய்தியை தலைமைக்கு தெரிவிக்க அநேகமாக இரண்டு அல்லது மூன்று நபர்களிடம் கொடுப்பது இவர்கள் வாடிக்கை.. தகவல் தொழில் நுட்ப துறையின் பொறியியல் படிப்பு படித்தவர்கள், பெரும்பான்மை அங்கம் வகிக்கும் அமைப்பு. 

வலை தளம் தான் இவர்கள் உலகம். தகவல் சேகரிப்பவர்கள் முக்கால் வாசி நபர்கள் ஹக்கர்ஸ். சிறு இனைய தள மையங்கள் இவர்களின் தகவல் மையங்கள். யூசெர் அக்கௌன்ட் இல்லாத கணினிகள் தான் இவர்களின் விருப்பம். அங்கு ஐ.பி. ப்ராக்சி தரும் வலை தளங்கள் மூலமாக, பதினோரு நிமிடங்களுக்கு ஒரு முறை விதம் விதமான ஐ.பி முகவரிகளில் வலம் வருவார்கள். 

மொபைல் க்ளோனிங் இவர்களுக்கு அத்துப்படி...
இவர்களிடம் இருக்கும் அனைத்து அலைபேசி எண்களும் முக்கியமான காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களாக இருக்கும். பெரும்பாலும் இந்த எண்கள் அனைத்தே வைக்கப் பட்டிருக்கும். முக்கியமான தொடர்புக்கு மட்டுமே இந்த எண்களை பயன் படுத்துவார்கள்.

அனைவரிடமும் வீடியோ அழைப்பை கொடுக்கும் வசதி உள்ள, அலைபெசிகளே வைத்திருப்பார். அழைக்கும் பொழுது இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள், மாறாக மாற்றுத் திறனாளிகளின் சைகை மொழிகள் மூலமாகவே தகவல்களை பரிமாறிக் கொள்வர்.

மேஜை மீது இரண்டு துண்டு சீட்டுகளும் பிரித்து வைக்கப் பட்டிருந்தது... தகவல் கிடைத்தவுடன் மடித்து கல் சட்டை வார் பட்டை கீழ் ஒளித்து எடுத்து வந்ததால் மடிப்பு கலைக்க முடியாமல் கிடந்தது.

Sir,
எஸ்.பி.கோகுலிடம் தவறான
குறியீட்டைத் தான் கொடுத்திருக்கிறேன்.
கவலை வேண்டாம்.
-விஷ்ணு

இப்படி ஒரு காகிதம் எட்டாக மடித்து இருந்தது.

Mr . கோகுல்_
S W H2 6F. இது தான் குறியீடு. கவனம்.
-விஷ்ணு

இப்படி ஒரு காகிதம் நான்காக மடித்து இருந்தது.

அந்த மேஜையை சுற்றி நான்கு நபர்கள் உட்கார்ந்து இருந்தனர்... ஒருவருக்கும் புரியவில்லை... தவறான குறியீடு என்றும் கொடுத்து விட்டதால் கையில் அலைபேசியுடன் காத்திருந்தனர்.. 

"விஷ்ணு அழைத்து சொனால் தான் நமக்கு புரியும். அது வரை காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை," என்றான் ஒருவன்.

சொல்லி முடிப்பதற்கும் அழைப்பு வருவதற்கும் சரியாக இருந்தது. ஒரு துளி சத்தம் கூட எழவில்லை என்று உறுதி படுத்தி கொண்டபின் அழைப்பை ஏற்றார் நால்வரில் ஒருவன்..

குறியீட்டுக்கான விளக்கத்தை சைகை மொழியில் மொழி பெயர்த்து அழைப்பு துண்டிக்கப் பட்டது..
Short Wave Hz 6000 Frequency என்று மற்றவர்களிடம் குறியீட்டை மொழி பெயர்த்து சொன்னான் அழைப்பை ஏற்றவன்.

அனைவரும் ரேடியோவை உயிர்ப்பித்தார்கள். விஷ்ணு கூறிய ப்ரீகுயன்சியில் ட்யூன் செய்தார்கள். விஷ்ணு தொடர்புக்கு வந்தான்.

"ஓவர், ஓவர்"

"என்ன விஷ்ணு, திடீர்னு இந்த லைன்ல, ஓவர்"

"மிகப் பெரிய சதி திட்டம் தோழர், அதான் நேரடியா கூறினா தான் தடுக்க முடியும், உங்கள் அலைபேசிகளையும் காவல் துறை கண் காணித்து வருகிறது என்ற சந்தேகம். அதான் வேறு வழி இல்லாமல் இந்த ஷார்ட் வேவ் ரேடியோ, இதை காவல் துறை மோப்பம் பிடிப்பது கடினம். ஓவர்"

"அதான் தெரியுமே. என்ன விஷயம் சொல்லுங்க? ஓவர்"

"ஆளும் கட்சி, எதிர் கட்சி தலைவரை கொல்ல திட்டம் போட்டு இருக்காங்க... கொன்று விட்டு நம் நாட்டில் உலவும் ஏதாவதொரு நக்சல் இயக்கம் மீது பழியை போட திட்டம் போட்டு இருக்காங்க. ஓவர்."

"எங்க, எப்படி என்ற தகவல் இருக்கா? ஓவர்."

"இருக்கு தோழர். மதுரையில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில திருமங்கலம் பக்கத்தில ஆலம்பட்டி கிராமத்து ரோட்டுல இருக்கிற பாலத்துக்கு கீழ பைப் வெடிகுண்டு வைக்க போறதாக தகவல், வெடி குண்டுக்கு போற மின்சார கம்பிகளை யார் கண்ணுக்கும் தெரியாமல் புதைத்து வைக்க சொல்லி ஏற்பாடு. ஓவர்."

"சரிங்க தோழர். இனிமேல் நாங்க பார்த்துக்கிறோம். நன்றி தோழர்"

அடுத்த நாள் செய்தியில், ஒரு கிராமத்து ஆள் அந்த பக்கமாய் சென்ற பொழுது மின்சார கம்பிகளை பாலத்துக்கு பக்கத்தில் பார்த்து உஷாராகி காவல் துறைக்கு தகவல் கொடுத்ததாக பேசிக் கொண்டிருந்தார்.. ஆளும் கட்சியோ புதைத்த மின்சார கம்பிகள் எப்படி பூமிக்கு வெளியே வந்தது என்று புலம்பி கொண்டிருந்தனர்.

Friday, October 28, 2011

கதை விடலாமா?[சவால் சிறுகதை -2011]

Sir,
எஸ்.பி.கோகுலிடம் தவறான
குறியீட்டைத் தான் கொடுத்திருக்கிறேன்.
கவலை வேண்டாம்.
-விஷ்ணு

இப்படி ஒரு காகிதம் எட்டாக மடித்து இருந்தது.

Mr . கோகுல்_
இது தான் குறியீடு. கவ
-விஷ்ணு

இப்படி ஒரு காகிதம் நான்காக மடித்து இருந்தது.
இந்த காகிதத்தை பிடித்து இருந்த விரல்கள் சரியாக அந்த கடைசி வார்த்தை மேல் இருந்தது, என் ஆர்வத்தை தூண்டியது.

கவ.. அப்படின்னு, என்ன வார்த்தைகள் தமிழ்ல தொடங்குது என்று யோசித்தேன்..
எடுரா அந்த தமிழ் லெக்சிகன என்று கூறியபடி அந்த பெரிய புக்க தூசி தட்டி எடுத்தேன். நமக்கு இருக்கிற சைனஸ் பிரச்சினை தூசுக்கு தெரியுமா? அடுக்கு தும்மல் வர ஆரம்பிச்சுடிச்சு.. ஒரு வழியா தும்மல் நின்னு கவ தேடினால்...

கவசம், கவட்டி, கவட்டை, கவிடம், கவடி, கவடு, கவண், கவண்டி, கவனம், கவனி, கவணை, கவந்தம், கவந்தன், கவந்தி, கவம், கவயம், கவயமா, கவல், கவர்தல், கவர்ச்சி, கவர்த்தடி, கவர்ப்பு, கவர்பு, கவர்வழி,. கவர்வு, கவரம், கவரி, கவரிமான், காவல், கவல்பு, கவலம், கவலை, கவவு, கவழம், கவளம், கவளி, கவற்சி, கவற்றி, கவறல், கவறு, கவறை, கவனம், கவனி...

ஸ்ஸ்ஸ்.. அப்பாடா, இத்தனை வார்த்தைகளா... என்னடா உனக்கு வந்த சோதனை என்று கூறி விட்டு 'கவனம்' மட்டும் பொருந்துவது போல் இருந்தது. 'கவலை வேண்டாம்' என்பது அந்த காகிதத்தின் அளவை விட பெரிதாக இருக்கும் என்பதால் அது சரியில்லை என்று தோன்றியது...

சரி, கவனம் என்றே இருக்கட்டும்... என்று அடுத்து S W H2 6F வந்தேன்.
என்ன கன்றாவிடா இது? என்று மட்டும் தோன்றியது.
S - SOUTH
W - WEST
H2 - 6F எல்லாம் மேப்களில் வரும் குறியீடு போல் தோன்றியது... பத்தாவது புவியியல் படிக்கும் பொழுது தொட்ட அட்லஸ் புக்கை மீண்டும் தொட வைச்சுட்டாங்களே, என்ற ஆதங்கத்துடன்... இன் 1996 அப்படின்னு ஆரம்பிச்சா நல்லா இருக்குமா? என்ற யோசனை தோன்றியது.. அடிச்சே கொன்னுடுவாங்க மக்க என்று அலறியது மனசு...

அட்லஸ் எடுத்து பிரித்த உடன் தான், டேய் நீ பெரிய ட்யூப் லைட் டா என்று கூறியது மனசு... எந்த பக்கத்தோட H2, எந்த பக்கத்தோட 6F என்று குழம்பி அப்புறம் SW ஆரம்பிக்கிற ஊர் பேரை எல்லாம் பார்த்து கொண்டே வந்ததில தூக்கம் தான் வந்துச்சு... லோக்கல் ஊர் பேர் இந்த S W ல வரவே வராதோ?

சரி விட்ரா, கூகிளில் தேடி பார்த்திடுவோம், என்று கணினியை நாடினேன்.
கூகிளில் S W H2 6F என்று தட்டியவுடன் சுமார் 3,32,000 பக்கத்துடன் தொடங்கி, இன்னும் எண்ணிக் கொண்டே இருக்கிறேன் என்று மிரட்டியது.. அதில் முதல் பக்கத்தில் என் கவனத்தை கவர்ந்தது...  AIRLINE CODE என்ற வலை தளம் தான்.. ஆஹா கிடைச்சுடுச்சு என்று சந்தோஷத்தில் உள்ளே நுழைந்தால் அது உலகத்தில் இருந்த இருக்கின்ற அனைத்து விமான நிறுவனங்களின் கோட் நம்பர்களை தாங்கி இருந்தது...
CTRL+F தட்டி மூலையில் திறந்த பெட்டிக்குள் SW என்று தட்டினேன்.
AIR NAMIBIA என்று காட்டியது
H2 என்று தட்டினேன்
CITY BIRD AIRLINES என்று காட்டியது
6F என்று தட்டினேன்
LAKER AIRWAYS என்று காட்டியது.

சரி சிட்டி பேர்ட் ஏர்லைன்ஸ் பற்றி பார்ப்போம் என்று கூகிளில் தேடினால் அது திவாலாகி விட்டது என்றும் இப்பொழுது சரக்கு விமான சேவை செய்து வருவதாகவும் கூறியது.
லேகர் ஏர்வேஸ் என்று கூகிளை தேடினால் அது திவாலாகி ஆண்டு கணக்காய் ஆகி விட்டது என்று கூறியது...

சரியா போச்சு.... என்று யோசித்து கொண்டே படுக்கையில் படுத்தேன்... இது மின்னஞ்சல் முகவரிக்கான குறியீட்டு  எண்ணும் கிடையாது என்பது ஒவ்வொரு எழுத்துக்கும் நடுவில் உள்ள காலி இடங்கள் தெரிவித்தது... அப்படியே யோசித்துக் கொண்டே இருந்ததில் எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை..

S W என்றால் சப் வே என்று அலறியபடி எழுந்து உட்கார்ந்தேன்...
நல்ல வேளை வீட்டில் அனைவரும் தீபாவளிக்கு ஊருக்கு போயிருந்ததால் தப்பித்தேன்... இல்லை என்றால் அக்கம் பக்கத்தில் எல்லாம் கூறி மானத்தை  எடுத்திருப்பாள்..
எந்த ஹைவேஸில் உள்ள சப் வே என்று தேடினால் ஓரளவுக்கு க்ளு கிடைச்சுடும் என்று மீண்டும் தூங்கி போனேன்.

கனவுகளில் யாரோ முனிசிபாலிட்டி தண்ணீரில்[h2] ப்ளுரினை[6f] கலந்து விடுவது போலவும் அதை தடுக்க என்னை அழைக்கவும், நான் ரஜினி படத்தில் வருவது போல கருப்பு ஜெர்கின் போட்டு, பாம்களை தொங்க விட்டு, கையில் மெஷின் கண் எடுத்து கொண்டு திரும்பவதற்கும், பின்னணி இசை கிளம்புவதற்கும், பால்காரன் மணி அடிக்கவும் சரியாக இருந்தது..

பாலில் தண்ணீர், தண்ணீரில் ப்ளுரின் என்று பினாத்திக் கொண்டே தூக்கத்தை முகம் கழுவி துரத்தி அடித்தேன்.

கணினியை உயிர்பித்தேன்... டெஸ்க் டாப்பில் அந்த படம் அருமையாக முறைத்தது. அலைபேசி திரையில் தெரியும் விஷ்ணு இன்போர்மேர் யாரு? விஷ்ணு கால் செய்வது போல் தான் உள்ளது... இங்கே அலைபேசியை கையில் வைத்திருப்பவர் முடிவெட்டை பார்த்தால் அவர் போலீஸ் இல்லை என்று தோன்றியது.. காகிதங்கள் மடிக்கப்  பட்டு பிரித்து இருந்ததால் மேஜை மீது இருக்கும் அளவு கோல், காகிதத்தை கிழிக்க பயன் படவில்லை என்று தோன்றியது... அதிலும் ஒரு காகிதம் சின்ன சைஸ், மற்றொன்று பெரிய சைஸ்...

அட போங்கப்பா..
சவாலாம்...
சிறுகதையாம்...

இந்த ஆட்டம் நல்லா இருக்கு, ஆனால் நான் இந்த ஆட்டத்துக்கு வரல...

பி.கு. என் நண்பர் ஒருவர், மச்சான் நீ இதையே ஒரு கதையா எழுதி  போடு... ப்ராக்சி ஐ.பி. சர்வர் தரும் வலை தளங்கள் பல இருக்கிறது... அது மூலமா உன் கதைக்கு நூறு ஓட்டு நான் போடுறேன் என்றான்... நீங்களே சொல்லுங்க இதெல்லாம் ஆவுற கதையா?

Wednesday, October 26, 2011

கனவுகளின் நிறம் காக்கி [சவால் சிறுகதை-2011]

காலை பனியின் குளிர், நடு முதுகை தாக்கியது...
தினமும் வந்தாலும் இன்று வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்தது..
பச்சை புற்கள், பனித்துளிகளின் பாரத்தால் தலை தொங்கி கொண்டிருந்தாலும்.. சூரியன் வரட்டும் என்று காத்து இருந்தது...
நெருஞ்சி செடி மஞ்சள் நிறப் பூ பூத்து, புல்லின் மீது கால் பதிக்க யோசிக்க வைத்தது... 
ஓட்ட பந்தயத்தின் ஓடு பாதையில் இறங்கி மூன்று சுற்று ஓடி வந்து மூச்சு வாங்கி அமர்ந்தான்...
அந்த குளிரிலும் வியர்வை பொங்கி எழுந்து அடங்கியது...
இந்த வியர்வை போதாது என்று மீண்டும் எழுந்து ஓட நினைத்தான்...
அவன் எண்ணத்தை சிதறடித்தது அவனின் அலைபேசி...

"குட் மோர்னிங் சார்"
"_ _ _ _ _ _ _ _ _ _"
"வார்ம் அப் செய்து கிட்டு இருக்கேன் சார்"
"_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _"
"எஸ் சார், இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன் சார்"

உடற்பயிற்சி செய்யும் எண்ணம் காணாமல் போனது...
கடமை அழைத்தது. வீட்டிற்கு சென்று குளித்து முடித்து காக்கி சீருடை அணிந்த பிறகு ஒரு இறுமாப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை, அவனால்... கண்ணாடி முன் நின்றான், உடற்பயிற்சி செய்யும் உடலுக்கு அந்த உடை கன கச்சிதமாய் பொருந்தி அவனை அழகாக காட்டியது. தொப்பியை சரியாக மாட்டினான்.. மீண்டும் கண்ணாடியில் சரி செய்து கொண்டான்.. வெளியே நின்றிருந்த வெள்ளை சுமோவின் மீது ஒட்டி இருந்த போலீஸ் என்ற வாசகத்தை தடவினான்... கதவை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து சீருந்தை கிளப்பினான்... காலை ஏழு மணி என்பதால் சாலையில் இல்லாத கூட்டம் அவன் வேகமாய் செல்ல பேருதுவியாய் இருந்தது....

க்ரீச்...
அடித்த ப்ரேக் காவலில் இருந்த காண்ஸ்டபிளை திரும்பி பார்க்க வைத்தது...

"சார், ரெடியாயிட்டாராப்பா?"
"தெரியலப்பா? காலையில் இருந்தே ஒரே பரபரப்பா இருக்கார், என்ன விஷயம்னு தெரியல?"

அவனின் அடுத்த கேள்விக் கணைகள் தேவை அற்றது ஆனது..
வீட்டின் கதவு திறந்தே இருந்தது...

"சார்"
" எஸ், கம் இன்" என்ற கம்பீர குரல் சுவர்களின் மூளை முடுக்கு எல்லாம் பட்டு தெரித்தது..
உள்ளே சென்றேன்.

அவரின் உணவு மேஜை மீது ஒரு காகிதம் பறக்காமல் இருக்க அளவு கோளை தூக்கி வைத்தார்..
மடிக்கப் பட்டிருந்த காகித துண்டுகளை பிரித்து நேராக்கினார்...

ஒன்றில் 
சார்,
எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன் 
கவலை வேண்டாம்.
-விஷ்ணு 

மற்றொன்றில் 
Mr . கோகுல் 
S W H2 6F - இது தான் குறியீடு. கவ....
-விஷ்ணு 

அந்த நேரத்தில் அவர் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது...
விஷ்ணு இன்போர்மேர் என்று திரையில் தெரிந்தது...

"எஸ்"
"_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _"
"ஓகே. நான் பார்த்துக் கொள்கிறேன்"
என்று கூறி விட்டு அலைபேசியை முடக்கினார்...

சார்....
"என்ன சார் இது"
"அது உனக்கு தேவை இல்லாத விஷயம், பசங்க இன்னிக்கு ஸ்கூலுக்கு சீக்கிரம் போகணுமாம்.. அதான் உன்னை சீக்கிரம் வரச்  சொன்னேன்.. போய் அவங்க ரெடி ஆகிட்டாங்கலான்னு பாரு"

எஸ்.பி சாரின் ஆறாம் வகுப்பு படிக்கும் பெரிய பையன் ஓடி வந்தான்,

"டிரைவர் அங்கிள், இன்னிக்கு நான் தான் முன்னாடி உக்காருவேன்"

Friday, October 21, 2011

பொதுஉடமை vs CAPITALISM

வளைந்து நின்ற
கேள்விக்குறிகளை,
அடித்து நிமிர்த்தி
ஆச்சரியக் குறியாக்கி...

புரட்சி
விளைவித்த
மக்கள் ஜனநாயகம்...
தவறான கைகளில்
சிக்கி
சிதறுண்டு
மக்கள் வாழ்வை
மீண்டும் கேள்விக் குறியாக்கியது...

சோவியத் சிதறியதால்
பொது உடமை தோற்றது,
என்ற நையாண்டி
இன்று தலை குனிந்து
மௌனமாய் நிற்கிறது...

அமெரிக்கா பொருளாதாரம்
தரம் தாழ்ந்து
தனி உடமை தோற்று போய்...

அமெரிக்க மண்ணில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தை ஆதரித்து...

Thursday, October 20, 2011

ஐப்பசி அமாவாசை

மேசைக்கடியில் பதுங்கும்
நாய்களும்
பூனைகளும்..

உயிர் நடுக்கத்தில்
செல்லப் பிராணிகளும்..

ஊரெங்கும் வேட்டைக்காரர்களா?
மிரண்டு போய்
பறவை இனங்கள்..

அமைதியான தூக்கம்
கலைந்து அலறும்
பிஞ்சு உள்ளங்கள்...

காற்றில் கலக்கும்
கந்தக நெடி...

போர்களுக்கு மத்தியில்
வாழ்ந்தவர்களால்
அனுபவிக்க முடியுமா
பட்டாசுகளின் ஆரவாரத்தை?
எழுந்து அடங்கும் சந்தேகம்...

பலர் சந்தோஷங்களில்
தீப ஒளி என்றாலும்,
பலர் பயத்தினில்
இருண்டே தான் கிடக்கிறது
ஐப்பசி அமாவாசை...

அரசியல்

அர்த்தம் மாறிய வார்த்தை
அரசியல்...

உயிர் இழந்த வார்த்தையால்
இருளில் கிடக்கிறது பலர் வாழ்வு...

நச்சு நிரலாய்
மாறிய வார்த்தையை
மீட்டெடுப்போம்...

இது மொழிப்போர் அல்ல
நம் வாழ்வின் உயிர்ப் போர்...

கவிதைகள்

பேனா முட்கள்
கீறும் காயங்களால்
புடைத்து எழும்
எழுத்துக்கள்...

கண்ணீர் மை
வார்த்தைகளை நனைத்து
காகிதத்தை கனமாக்குகிறது...

சுய வலிகள்
சுமக்கும்
காதல் காகிதங்கள்
வரலாற்று பக்கங்களில்
அரசரின் வாழ்வாய்...

சமுதாய அழுக்கை
சாடி
பழுப்பேறி நிற்கும்
காகிதங்கள்
கலங்கரை விளக்காய...

Wednesday, October 19, 2011

முட்கள் இல்லாத வெள்ளை ரோஜாக்கள்...

சிகப்பு அணுக்களின் 
விரோதம் பெற்ற 
வெள்ளை அணுக்கள்...

சமுதாய இமைகளின் நடுவே
சிக்கி தவிக்கும்
விழி படலங்கள்...

அனைவரும் காலடி மட்டுமே 
பதிக்கத் துடிக்கும்
பௌர்ணமி நிலாக்கள்...

புயல் காற்று
துரத்திச் செல்லும்
வெண்மேகங்கள்...

பிற்போக்கு
பேச்சாளர்களின் வாய்க்கு 
அவல், பொரிகள்,
அவர்கள்...

இவர்கள்
சிறகுகள் வெட்டப் பட்ட
சமாதான புறாக்கள்...

என்றும்
தேனீக்களுக்கு அஞ்சி வாழும்
முட்கள் இல்லாத
வெள்ளை ரோஜாக்கள்...

பிற்சேர்க்கை: பல தோழர்கள்  புரியவில்லை என்று கூறி உள்ளார்கள்... சாமானிய மக்களுக்காக எழுத வேண்டும் என்பதே என் எண்ணம்.. படிப்பவர்களுக்கு புரிய வில்லை என்றால் படைப்பு இறந்து விட்டதாகவே எண்ணம்...
இந்த கவிதை இளம் விதவைகள் குறித்து எழுதியது...
இந்த தோல்வியை படிகட்டாய் மாற்றி இனி வரும் கவிதைகள் புரியும் படியாகவே இருக்கும் என்று கூறிக் கொள்கிறேன்

மிச்சம்...

22:09:2011
05:31
நான் கண்விழித்து பார்ப்பதற்கும், என் அலைபேசி என்னை எழுப்ப குரல் எழுப்புவதற்கும் சரியாக இருந்தது. நிசப்த அமைதியை கிழிக்க இருந்த சத்தத்தை கொலை செய்து அமைதியை காப்பாற்றினேன். வழக்கமாய் ஆறரை மணிக்கு வேலைக்கு செல்ல முயல்பவன் இன்று ஆறு மணிக்குள் கிளம்ப தயாராகி விட்டேன். விடியலின் மெல்ல நீல நிற ஒளியில் உறங்கிக் கொண்டிருந்த மகனை பார்த்தபடி சத்தம் போடாமல் கிளம்பி கொண்டிருந்தேன். என் கால்சட்டையை போட்டுக் கொண்டு, இடுப்பு பட்டை அணியும் பொழுது மிகவும் மெல்லிய பட் என்ற சத்தம் எழுந்தது.

என்னையும் அறியாமல் ச்சே என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லி விட்டேன்..

"அப்பா", என்றான் என் மகன்.

"என்னப்பா?" என்றேன் அவனருகில் குனிந்து.

"நாளைக்கு என் பிறந்த நாள்பா. இது வரைக்கும் என் பிரண்ட்சுக்கு எந்த சாக்லேட்டும் கொடுத்ததில்லப்பா. நாளைக்காவது நான் தரமுடியுமாப்பா?"

"பார்க்கலாம் பா"

"அப்படின்னா முடியாதுன்னு தானே அர்த்தம்."

நான் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்தேன். வழக்கமாய் காலாண்டு தேர்வு விடுமுறையில் வரும் அவன் பிறந்த நாள் சமச்சீர் கல்வி பிரச்சினையால் பள்ளி கூட நாளாகி போனதால் இந்த வருடம் இது எனக்கு புதிய தலைவலி.

காஞ்சிபுரத்தில் பரணி மருந்து கடை எதிரே உள்ள பிரபல உணவகத்தில் பரிமாறுபவர் வேலை. கிடைக்கும் சம்பளம் வாழ்க்கைக்கே சரியாக இருந்தது. டிப்ஸ் கொடுப்பது அந்த உணவகத்தில் தடை செய்யப் பட்டிருந்ததால் சில எதிர்பாரா செலவுகள் சேமிப்பில் தான் கை வைக்கும். இந்த மாதம் விடுமுறை நாளாக இருக்கும் என்று கணக்கு போட்டு செலவு செய்து விட்டதால் சங்கடத்தில் சிக்கி கொண்டேன் நான்.

மஞ்சள் நீர் கால்வாயை தாண்டி செல்கையில் அதன் நாற்றம் என் மூக்கை துளைக்காத அளவு என் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. புட்டு விற்கும் கடைக்காரன் வியாபாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தது. கோவிலுக்கும் ஓட்டலுக்கும் நடுவே உள்ள மூத்திர சந்தில் மிதிவண்டியை நிறுத்தினேன். ஈக்களுடனும்  நாய்களுடனும் போட்டி போட்டுக் கொண்டு குப்பை தொட்டியை ஆராய்ந்து கொண்டிருந்தான் மணி.

"என்ன மணி? எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேம்பா! நீ எப்படி கீற?"

"ம், வழக்கம் போல மூணு மணிக்கு வந்து சாப்பாட்டு போட்டலம் வாங்கிட்டு போயிடு. நேத்து மாதிரி மறந்துடாத"

வேலைக்கு சேர்ந்த புதிதில் நானும் மணியை அவ்வளவா கண்டு கொண்டதில்லை. ஒரு நாள் எதேச்சையா பேச்சுக் கொடுத்த பொழுது தான் தெரிந்தது, அவன் கதை.

"ஏம்பா, இதெல்லாம் ஒரு புழப்பா? ஒழுங்க ஒழைச்சு சாப்பிடலாமில்ல"

"நானா சார் வேணான்றேன். திருட்டு பயல்னு யாரும் வேலைக்கு சேக்க மாட்டேங்கிறாங்க"

"திருட வேற செஞ்சியா?"

"வழக்கமா எல்லா திருடனும் ஆரம்பிக்கிற மாதிரி தான். என் பொஞ்சாதிக்கு காச நோய் வந்து, ஜி எச்சுல மருந்து கிடைக்காம மருந்து கடையில மருந்து வாங்க கல்லாவில் கை வைக்கிற மாதிரி ஆயிடுச்சு.. அதுக்கப்புறம் எங்கயும் கை வைக்கல இருந்தாலும் திருடன்னு பேர் வந்துடுச்சு. புள்ள குட்டிங்கள காப்பாத்தணும் இல்லையா,"

மனம் கனத்தது.

"உன் பேர் என்னப்பா?"

"மணிகண்டன் சார், மணின்னு கூப்பிடுவாங்க"

அன்றிலிருந்து இன்று வரை உணவகத்தில் எனக்கு தரும் மதிய உணவை பொட்டலமாக கட்டி அவனிடம் கொடுத்து விடுவேன். காலையில் இருந்து சாப்பாட்டை பார்த்து பார்த்து சாப்பிடும் ஆசையே போய் விட்டதும் ஒரு காரணம். வித்தியாசமா காலையில் எதிர் கடையில் கிடைக்கும் புட்டு மாதிரி சாப்பிடலாம்னா மேல் சட்டை பை அனுமதிப்பதில்லை.

உணவகத்தில் நுழையும் பொழுது காலை 6:30 மணி. முதலாளி கல்லா அருகே அமர்ந்து கொண்டு தரையை கழுவி விடுபவர்களை விரட்டிக் கொண்டிருந்தார்.  

"என்னடா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட?"

"சீக்கிரம் எழுந்துட்டேன் முதலாளி. வீட்டுல இருக்க பிடிக்கல அதான் முன்னாடியே வந்துட்டன்"

"சரி சரி போய் வேலைய பாரு"

"முதலாளி" என்று இழுத்தேன்.

என்ன என்பது போல் பார்வையிலேயே கேட்டார்..

"ஒரு நூறு ரூபா அட்வான்ஸ் கொடுத்தா நல்லா இருக்கும் முதலாளி. நாளைக்கு என் பையன் பிறந்த நாள். ஸ்கூல்ல மிட்டாய் கொடுக்கணுமாம்"

"நீ ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியிருக்க. ராத்திரி பாக்கலாம்."

அவர் சொல்லிய பதில் என்னை குழப்பத்தில் தான் தள்ளியது. இருந்தாலும் சுதாரித்து கடமை என்ற சீருடை அணிந்து பம்பரமாகி போனேன்.

யார் யாரோ செய்த தவறுக்கெல்லாம் திட்டுக்களை வாங்கிக் கொண்டு, சுரணையற்ற ஜடமாய் மாறிப் போனேன்.

நடு நடுவே நண்பர்களிடம் கேட்ட பணம் மாதக் கடைசி என்று ஒவ்வொரு முறையும் கன்னத்தில் அறைந்தது.

இரவு நெருங்க நெருங்க ஆட்கள் குறைய குறைய என் மனம் முழுவதும் என் மகன் தான் ஆக்கிரமித்திருந்தான். அவன் நண்பர்களுக்கு கொடுக்கும் இனிப்பு இருக்கட்டும். இன்று செய்த ஏதேனும் இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்று மிச்சம் இருந்தால் அதை கொண்டு போய் கொடுத்தால் கொஞ்சம் சமாதானம் ஆகுவானே என்ற எண்ணம் தலை தூக்கியது.

அடுக்களைக்குள் புகுந்தேன்.

"மாஸ்டர், இன்னிக்கி போட்ட ஸ்வீட் ஏதாச்சும் மிச்சம் இருக்கா?"

"ரெண்டு குளோப் ஜாமுன் இருக்குப்பா"

"ரைட் அதை அப்படியே எடுத்து தனியா வச்சிடு. முதலாளி கிட்ட கேட்டுகிட்டு எடுத்துகிட்டு போறேன்."

" பையனுக்கா. ரைட் ரைட்..."

"தேங்க்ஸ் மாஸ்டர்"
என்று கூறிவிட்டு அப்பாடா என்று உணவகத்துள் வந்தேன். எனக்கு ஒதுக்கப் பட்ட மேஜையில் ஒரு இளம் தம்பதியர் வந்து அமர்ந்தனர்.

குடிக்க நீர் வைத்து விட்டு உணவு பட்டியலட்டையை கொடுத்தேன். 
அட்டையை படித்து விட்டு,

"எனக்கு ஒரு காப்பி"

"அவங்களுக்கு ஒரு செட் குளோப் ஜாமுன்"

எதுவும் பேசாமல் அமைதியாக வந்தேன். மாஸ்டரிடம் ஒரு காபி போட சொல்லி விட்டு யோசித்தேன். பாசமா கடமையா என்ற பட்டிமன்றத்தில் வென்றது என்னவோ கடமை தான். மெதுவாக எனக்கு ஒதுக்கிய குலோப் ஜாமுனை தட்டில் வைத்து குளம்பி குவளையை எடுத்து கொள்ளும் பொழுது  மாஸ்டரின் பரிதாப பார்வையை தவிர்த்தேன். தம்பதியரிடம் கொடுத்தேன். அறை மணி நேரம் அந்த குலோப் ஜாமுனை மெதுவாக சின்ன சின்ன அளவாக கரண்டியில் வெட்டிய படி இருந்த அந்த பெண்மணி கடைசியில் சாப்பிட்டது ரெண்டே வாய் தான். பிடிக்கல என்று சொல்லியது மட்டும் காதில் விழுந்தது. இருவரும் எழுந்து பணம் கொடுத்து விட்டு சென்றனர்.

மேஜை மேல் அனாதையாக காலி கோப்பையும் வெட்டப்பட்ட குளோப் ஜாமுனும் கிடந்தது. 

ஒரு கணம் மகனின் ஏக்கப் பார்வை நினைவுக்கு வந்தாலும், அதன் பிறகு என் நினைவில் இருந்தவன் மணிகண்டன் தான்.

Wednesday, October 12, 2011

தோள் தருவோம் தோழனே

மண்ணுக்கு உரமாகாதே;
மக்களுக்கு உரமாகு...

வாழ்வதற்காக சாகும் நீ;
செத்த பிறகும் வாழப் பார்...

பசி வறுத்தி எடுக்கும்,
பொருட்படுத்தாதே...

அந்த வயிற்று தீயை 
நாவினில் கொண்டு வா...
வார்த்தைகளில் குழை,
காகிதத்தில் ஓட விடு...
தீமைகளை சாடி விடு...

தனிமனிதனாய் 
தேவையில்லை;
அனைவரும் உன்னோடு,
தோழா,
தோளோடு! தோளோடு!!Tuesday, October 11, 2011

மெல்ல தமிழ் இனி...

பத்து ரூபாய்க்கு
பசியாற என்ன கிடைக்கும்?

கேள்விக்கு பதில்:
4 இட்லி அல்லது
3 போண்டா அல்லது
2 வடை அல்லது 
1 லிட்டர் தண்ணீர்...


கேள்வி கேட்டவன்
பஞ்சாலை தொழிலாளி;
பதிலளித்தவன்
உணவக முதலாளி!

விதைத்த வியர்வைக்கு
அறுவடை எப்பொழுது?

கேள்விக்கு பதில்
மௌனம்...

கேள்வி கேட்டவன்
விற்பனை பிரதிநிதி தொழிலாளி;
மௌனம் சாதித்தவன்
முதலாளி!


நீதியின் தராசு தட்டில்
எங்களுக்கு மட்டும் இடமில்லையா?

கேள்விக்கு பதில்
தேர்தல் வரட்டும்...

கேள்வி கேட்டவன்
சாலை துப்புரவு தொழிலாளி;
பதிலளித்தவன்
முதலாளி...

அய்யா,
நாங்கள்
வாழ என்ன வழி?


சூ
சத்தம் போடாதே;
நாங்கள்
தமிழ் வாழ
போராடி கொண்டிருக்கிறோம்...

கேள்வி கேட்டவன்
தமிழக தொழிலாளி;
பதில் அளித்தவன்
அரசியல் முதலாளி!

தமிழ் சாகரம்,
தமிழன் ஆறு....

ஆற்று நீர்
வற்றும் வரை
சாகரம் வற்றாது...
மெல்ல தமிழ் இனி
சாகாது...

குறிப்பு: இந்த கவிதை 2004  ஆம் வருடம் த.மு.எ.ச வின் கிளை மாநாட்டிற்காக எழுதப் பட்ட கவிதை... அப்பொழுது ஒரு பஞ்சாலை தொழிலாளியின் ஒரு நாள் சம்பளம் பத்து ரூபாய் என்று படித்து பின்பு வெறுப்பில் எழுதிய கவிதை...


Monday, October 10, 2011

தண்டனை

பனிப் புகையில், அடர்ந்த மரங்களுக்கிடையில் சூரியன் ஒளி வீசி விளையாடிக் கொண்டிருந்தான். சாலையில் இருபுறம் உள்ள மரங்கள் ஒன்றோடு ஒன்றாய் கை கோர்த்து அலங்கார வளைவாய் வரவேற்பு கொடுத்துக் கொண்டிருந்தன. புதிதாய் போடப் பட்ட சாலை, வியர்வை வழியும் கருத்த உழைப்பாளியின் தேகம் போல் பறந்து கிடந்தது. 1996 க்கு பிறகு இந்த சாலையில் 15 வருடங்கள் கழித்து வந்து கொண்டிருந்தாலும், சுற்றுப் புரத்தை நோட்டம் விடவோ, இரசித்து பார்க்கும் மன நிலையில் நான் இல்லை. என் மனம் முழுவதும் பால்வார்த்து வென்றான் என்னும் ஊர் ஆக்கிரமித்திருந்தது.

திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு அடிக்கடி சென்று வந்த காலங்கள் என் கல்லூரி வாழ்வை சார்ந்தவை. கல்லூரிக் காலம் கழிந்து வேளை நிமித்தமாக காஞ்சிபுரத்தில் சேர்ந்து காலம் neutrino வேகத்தில் கடந்து விட்டது. இந்த கால வெள்ளத்தில் என்ன என்ன மாறியிருக்கும்? எது மாறியிருந்தாலும் பால்வார்த்து வேன்றானில் ஏதாவது மாறியிருக்குமா? இல்லை அப்படியே தான் இருக்கும் என்று என் மனம் என்னை நம்பச் சொல்லியது.

என் தொழிற்சங்க நடவடிக்கைகளை கண்டு என்னைப் பழி வாங்க காஷ்மீருக்கு பணி மாற்றம் செய்தனர். எங்கள் சங்கத்தின் தலையீட்டால் அது வேலூருக்கு என்று இடம் மாறியது. என் சங்கத்திற்கு வெற்றி; என் நிறுவனத்திற்கும் வெற்றி. எனக்கோ ஆர்வம். அந்த ஆர்வத்தில் சேர்ந்த முதல் வாரத்திலேயே வேலூரில் இருந்து எனது இரு சக்கர வாகனத்தில் திருவண்ணாமலைக்கு கிளம்பி விட்டேன்.

பால்வார்த்து வென்றான்.
சந்தவாசளுக்கும் போளுருக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
இந்த கிராமத்தை தாண்டி அரை கிலோ மீட்டர் சென்றவுடன் ஒரு பார்வைக் குறைவான வளைவு, மலையின் அடிவாரத்தில் இருக்கும். இந்த இடத்தில் தொடர்வண்டியின் இருப்பு பாதை சாலையை கடந்து செல்லும். மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் ரயில்வே கேட் போடப்பட்டு இருக்கும். இதை கண்காணிக்கும் காப்பாளரின் அறை தான் என் மனதில் சொக்கப் பணை போல் கனன்றுக் கொண்டிருந்தது. காட்டில் தனியாக கருங்கல்லால் கட்டப்பட்டு, எதோ இனம்புரியாத சந்தோஷத்தை அளித்திருந்தது. அப்பொழுதெல்லாம் ஏனோ என் மனதில் அங்கு அமர்ந்திருந்த காப்பாளரை என்றுமே நினைத்ததில்லை.

கால வெள்ளம் கந்தர்வன், வைரமுத்து, மேலாண்மை பொன்னுச்சாமி, சின்னப்ப பாரதி, தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் எழுத்துக்கள் என்னை கூழாங்கல்லாய் செதுக்கியிருந்தது. அழகியல் தவிர்த்து மனிதம் பார்க்க கற்பித்து இருந்தது.

பச்சை வண்ண வரப்புகள் கட்டம் கட்டிய மஞ்சள் நிற நெல்மணி பயிர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் மண்ணை நேசிக்கும் விவசாயியின் செந்நீரை அம்பலப் படுத்தியது.

தீபாவளி பட்டாசுகள் வானத்தில் கவிதை எழுதி முடிக்கும் பொழுது, அதனுள் சிந்திக் கிடந்த குழந்தைகளின் வியர்வை முத்துக்கள் தூறலாய் விழுவது மனதில் சம்மட்டியாய் இறங்குகிறது..

நடு இரவில் தூரத்து சோடியம் விளக்கு வெளிச்சத்தில் தனியாக நடந்து செல்லும் அமைதியில் சொந்தக் காசில் பெட்ரோல் போட்டு ரோந்துக்கு செல்லும் காவலர் லஞ்சம் வாங்குவது தவறில்லை என்று மனம் தீர்ப்பு எழுதுகிறது...

இன்னும் எவ்வளவோ
யோசிக்க யோசிக்க கவிதையாய் வார்த்தைகள்...

என் இருசக்கர வாகனம் 45 க்கும் 50 க்கும் என்னை போலவே குழப்பத்துடன் நிதானமாய் பயணித்துக் கொண்டிருந்தது. பேசலாமா? வேண்டாமா? தவறாக ஏதும் நினைத்துக் கொள்வாரா? நட்புடன் பழகுவாரா? போடா என்று சொல்லி விடுவாரா? என்று எழுந்து நின்ற கேள்விகளை சமாதானம் செய்து உட்கார வைத்தேன்.

நிறைய மாற்றங்கள். கருங்கல் அறை இடிக்கப் பட்டு நவீனமாய் அறையை கட்டியிருந்தார்கள், சில குரங்குகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தன. மிதிவண்டியில் இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். குரங்குகள் காலி இளநீர் மட்டையை ஆராய்ச்சி செய்துக் கொண்டும், இன்னும் சில மட்டைகளை எதிர்பார்த்து இயங்கிக் கொண்டிருந்தன. ஒரு மகிழுந்தில் வந்த குடும்பம் இளநீரை சுவைத்துக் கொண்டிருந்தார்கள். இளநீர் வியாபாரியின் சுறுசுறுப்பு, இளநீரை சீவும் பொழுது தெறிக்கும் நீரில் தெரிந்தது.

காப்பாளர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். தொலைபேசி அந்த ரம்மியமான சூழலை இரக்கமே இல்லாமல் கத்திக் கெடுத்தது. அவர் எழுந்து சென்று பேசிவிட்டு கேட்டை இறக்கி விட்டார்.

நான் மெதுவாக அவர் அருகே சென்றேன். அவர் என்னை பார்த்தார். அந்த கண்களில் ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

"என்ன சார்?"

அவர் கண்களில் வியப்பில் முங்கிய கேள்வி.

"ஒண்ணுமில்லை சார், உங்க கிட்ட கொஞ்சம் பேசலாம்னு..." என்று இழுத்தேன்..

"சொல்லுங்க சார்"

"எப்படிங்க உங்களால இப்படித் தனியா உக்காந்து கிட்டு இருக்க முடியுது?"

"பொழப்பே அதான சார்," என்று கூறிவிட்டு என்னை பார்ப்பதை தவிர்த்தார். இளநீர் அருந்தும் குழந்தைகளை பார்த்து விட்டு மீண்டும் என்னை நோக்கினார். ஏக்கம் கலந்த அந்த பார்வையில் பழைய கேலித் தொனி வந்து உட்கார்ந்துக் கொண்டது. அவரே தொடர்ந்தார்.

"என் சம்சாரம் கூட என்ன இப்படி கேட்டதில்ல சார்? கஷ்டமாத் தான் இருந்தது. சேர்ந்த புதுசுல ரேடியோ கொண்டாந்துடுவேன். இயந்திரம் மாதிரி இப்படியே வாழ்ந்தது போவ போவ கஷ்டமாயிடுச்சு. அப்புறமா இயற்கையை கவனிக்க ஆரம்பிச்சதிலிருந்து மனுஷனா வாழ முடியுது சார்."

"இயற்கை எப்படிங்க உதவி பண்ணுது."

"சார்... நேத்து பாத்தா சூரியனை அதே மாதிரி இன்னைக்கும் பாக்க முடியுமா? அதோ உக்காந்திருக்கே ஒரு குருவி அது நாள் பூரா அங்கேயே உக்காந்திருக்குமா? நாளைக்கும் இதே நேரத்தில வருமா? தெரியாதே! இளநீர்காரன் தினம் ஒரே மாதிரியா இருக்கான். நல்ல வியாபாரம்னா நக்கலா பேசுவான். வியாபாரம் ஆகலேன்னா எரிஞ்சு விழுவான். இயற்கையை அங்குலம் அங்குலமா ரசிச்சு பாருங்க சார். இயந்திரத்தனமான வாழ்க்கை தொலைஞ்சு போயிடும் சார்."

"சரியா சொன்னீங்க. ஆனா உங்கள மாதிரி இல்லாம வாழ்க்கையை இயந்திரமா மாத்திகிட்ட எத்தனையோ பேர் சிடுசிடுன்னு எரிஞ்சு விழறதை பல தடவை பார்த்திருக்கேன்."

"இன்னும் கொஞ்ச நேரத்தில ஒரு பஸ் வரும். அந்த டிரைவரோட நடவடிக்கையை பாருங்க. எனக்கு இவனுங்களை பாத்தா கோபம் வரதில்ல சார். பரிதாபம் தான் வரும். வாழத்தெரியலடா  உங்களுக்கு அப்படின்னு நினைச்சுக்குவேன்."

எனக்கு சிரிப்பு வந்தது. அவரும் சிரித்தபடியே தொடர்ந்தார்...

"என்னை விடுங்க சார். நிறைய இடத்தில ரயில் போக்குவரத்து அதிகம் இல்லாத தடத்தில எல்லாம் கேட் போட்டு வேலையே இல்லாம இருக்கிறவங்க நிறைய பேர் சார். வேளை செய்றது கஷ்டம் இல்ல சார். வேலையே செய்யாம வேளை செய்றது ரொம்ப கஷ்டம் சார்."

இந்த தடவை சத்தமாகவே சிரித்து விட்டேன்.

"ரொம்ப படிப்பீங்களோ. கலக்குறீங்க"

"அதெல்லாம் ஒரு காலம் சார். இப்ப எல்லாம் இந்த வாலிபர் சங்க பசங்க வருவாங்க. அதோ பாருங்க மலை மேல பாறையில சுண்ணாம்புல எழுதி இருக்குல்ல அது அவனுங்க வேளை தான். அவங்க ஏதாவது புக்க வித்துட்டு போவானுங்க. இப்ப எல்லாம் அவங்க புக்குங்களை தான் படிக்கிறேன். சமயத்தில நினைச்சுக்குவேன். நம்மள விட பனியில நிக்கிற மிலிடரி ஆளுங்க, பயங்கரமான கட்டுல கொசு பூச்சி தொல்லைக்கு நடுவில வாழுற பாரஸ்ட் ஆபீசருங்க, செல் போன் டவர் அமைக்கப் போற தொழிலாளிங்க இப்படி நிறைய பேர் கஷ்டப் பட்டு கிட்டு தான் இருக்காங்க. அவங்களை விட நாம மேல்னு நினைச்சுக்குவேன்."

"அவங்களுக்காவது பேச்சுத் துணைக்கு ஆள் இருக்கு. உங்களை மாதிரி உள்ளவங்களுக்கு?"

"ஏன் சார் நீங்க வேற? நிம்மதியா இருக்கலாமேன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டு இருந்தா, கேடுத்துடுவீங்க போலிருக்கே!"

அவர் கேலியாக குறிப்பிட்டாலும் உண்மை தானே என்று மனசு என்னை திட்டியது. அவரே தொடர்ந்தார்.

"சார், தற்கொலை செஞ்சுகிட்டா என்ன கிடைக்கும்?"

"உயிர் பிழைச்சா தற்கொலை முயர்ச்சின்னு தண்டனை. செத்து போயிட்டா ஒரு நிமிஷம் வலி."

"போங்க சார், நான் சொல்லட்டுமா! தற்கொலை செஞ்சுகிட்டா உங்க குடும்பத்துக்கு லட்சம் லட்சமா பணம் வரும். புகழ் வரும். வருஷா வருஷம் கண்ணீர் அஞ்சலி. வாரிசுக்கு அரசாங்க வேளை. என்னை மாதிரி ஒரு தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையை விட கொடுமையான தண்டனை."

"புரியலீங்க"

"சார், காஞ்சிபுரம் அரக்கோணம் ரோட்டுல போயிருக்கீங்களா?"

"அடிக்கடி போயிருக்கேன்."

"அகரம்னு ஒரு கிராமம் இருக்கு, தெரியுங்களா?"

"தெரியுமே. அங்க ஒரு கோயில் கூட இருக்கே. அதானே?"

"கரெக்ட் சார். ஏழு  வருஷம் முன்னாடி ஒரு பதினாறு பேர் வேன்ல போய் ரெயில்ல மாட்டி செத்தாங்களே, நினைவு இருக்கா?"

"ஞாபகம் இருக்காவா? அன்னிக்கு நான் அங்க தானே இருந்தேன். அது மட்டுமா அந்த சம்பவம் நடந்த ஒரு மாசம் முன்னாடி தான் ஷேர் ஆட்டோ ல போய் பதினாலு பேர் செத்து போயிருந்தாங்க."

"சரியா சொன்னீங்க சார். இப்ப சொல்லுங்க, தற்கொலைக்கு நான் சொன்னது எல்லாம் கிடைச்சுதா?"

"சத்தியமா புரியலீங்க"

"விவரமாவே சொல்றேன் சார். அங்க ட்ராக் எப்படி போகும்?"

"ரோட்டை ஒட்டியே போகும்"

"கரெக்ட் சார். நீங்க ரோட்டில போனீங்கன்னா, உங்க கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முன்னாடியும் பின்னாடியும் ட்ரெயின் வந்தா தெரியும். அப்படி இருக்கும் போது கொழுப்பு எடுத்து போய் ட்ரைன பாத்துகிட்டே போய் ட் ரெயினுக்கு நடுவில விட்டுட்டு செத்து போய் கொன்னுட்டாங்க கொன்னுட்டாங்கன்னு சொன்னா என்ன சார் நியாயம். தெரிஞ்சே செத்து போனதுக்கு அரசாங்கத்துல என்ன கொடுத்தாங்கன்னு தெரியும் இல்ல சார்"

குழப்பத்தில் இருந்த நான், திகைப்பில் ஆழ்ந்தேன். எவ்வளவு பெரிய உண்மை, சாவோம் என்று தெரிந்தே தலையை கொடுத்தால் அதை தற்கொலை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.

கேட் அருகில் இருந்து கடினமான குரல் ஒலித்தது. "புறம்போக்கு, அதுக்குள்ளே கேட் போட்டுட்டியா?"

"நான் சொல்லல சார். இயந்திர வாழ்க்கை வாழ்றவன்னு, வந்துட்டான். இனிமே சுப்ரபாதம் தான்."

தூரத்தில் தொடர்வண்டியின் சத்தம் கேட்டது. வேகமாய் போனாலும் விவேகம் இல்லாமல் செல்லும் தொடர்வண்டி சரக்குகளை ஏற்றி கொண்டு எக்காளத்துடன் கடந்து சென்றது. காவலர் கடமையில் மூழ்கினார்.

"கஸ்மாலம். அதான் பூடுச்சில்ல. கேட்டை தூக்கறது."

ஓட்டுனரின் குரல், அதே போல் எரிச்சலுடன் இருந்த பயணிகளையும் தூண்டி விட்டு சல சலப்பை ஏற்படுத்தியது.

காவலர் தொலைபேசியில் பேசிவிட்டு கதவைத் திறந்தார். பொறுமை மறந்த வாகனங்கள் கத்தி காதை கிழித்து முன்னேறி கண்காணாமல் சென்று மறைந்தது.

காவலர் மெதுவாய் நெருங்கி வந்தார்.

"என்ன சார். இன்னும் என்ன யோசனை?"

"இல்ல. தற்கொலைக்கு.. தண்டனை... யாரோ... ஒரு தொழிலாளிக்குன்னு..."

எப்படி சொல்வது என்று தெரியாமல் மொழி விழி பிதுங்க, உதவிக்கு அவரே வந்தார்...

"அதுவா சார். செத்தவன் ஒரு நொடி தான் சார் வேதனை பட்டிருப்பான். அங்க ஆளில்லா ரயில்வே கேட் இருந்ததினால தான் இந்த மாதிரி விபத்து ஆச்சுன்னு சொல்லி, என்னை மாதிரி ஒரு தொழிலாளியை பேச்சுத்துணைக்கு ஆளில்லாத போட்டால் காட்டில் இந்த மாதிரி ஒரு ரூம் கட்டி சிறை வச்சிருக்காங்க."

பிற்சேர்க்கை: இது நடந்த சம்பவங்களை வைத்து எழுதப் பட்ட கற்பனை கதை.

Sunday, October 9, 2011

அனைவரும் மனிதர்களே...

"சார், 122 போயிடுச்சுங்களா?"

மண்டையை பிளக்கும் சென்னை வெயில். பகல் ௨ மணியில் இருந்து ஒரு மணி நேரமாக காத்திருந்ததால் கவனக் குறைவாக விட்டு விட்டேனோ என்ற சந்தேகம் கேள்வியை பிறந்தது.

"வந்தா சொல்றேன் சார், நானும் அந்த பஸ்சுக்கு தான் வெயிட் பண்றேன்."

"ரொம்ப நன்றி சார்... நீங்களும் திருவண்ணாமலைக்கா?"

எங்க போறீங்கன்னு கேட்டா கோவிச்சுக்குவாரோ என்று பதட்டம் வேறு...

"இல்ல சார், கீழ்பெண்ணாத்தூர்." 

கோவிச்சுக்காததால் நிம்மதி அடைந்து இதற்கு மேலும் பேச்சு கொடுக்க வேண்டாம் என்று சாலையை எட்டி பார்த்தேன். ஒரே ஆறுதல், வேறு ஊருக்கும் பேருந்துகள் கண்ணில் படவில்லை என்பது தான். ஏன்டா பல்லாவரம் வந்தோம் என்று ஆனது. நேரம் மிச்சமாகும் என்று வந்தது வெயிலில் வறு படத்தானோ என்று என் மேல் எனக்கே கோபம் வந்தது.

கந்தலாகிய ஒரு பாட்டி, ஒட்டிய விழிகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தார்கள். மாதக் கடைசியில் தர்மம் செய்யும் எண்ணம் மேல்பையில் எட்டி பார்த்து இல்லையே என்று ஆதங்கப் பட்டது. இல்லை என்று சொல்ல வாய் எழாததால் சற்று நகர்ந்து முன்னேறி சென்றேன். மீண்டும் சாலையை எட்டி பார்த்தேன். ஒரு வேளை, கடிகாரம் ஓடவில்லையோ? காத்திருத்தலின் வழிக்கு சந்தேகக் கேள்விகள் ஆறுதல் தர முயற்சித்தன. பதிலுக்கு சுற்றும் முற்றும் பார்த்தேன். அருகில் இருந்தவரிடம்,

"சார், டைம் என்ன சார்?"

"மூனே கால் சார்", காத்திருத்தலின் வலி அவருக்கும் இருப்பது அவர் பதிலில் தெரிந்தது.

"ரொம்ப நன்றிங்க."

கிடைத்த பதில் மேலும் வலியை ஏற்படுத்தியது. எப்படியோ 4 .30 மணிக்கு பேருந்து ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தது. நான் முன் படிக்கட்டில் ஏறினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். இருக்கைகள் நிரம்பி இருந்தன.

நடத்துனர் அருகில் வந்தார்.

"எங்க சார் போகனும்?"

"திருவண்ணாமலை டிப்போ ஒன்னு கொடுங்க சார்."

காசை வாங்கி, சீட்டை கிழித்து கொடுத்து, பின்பு சில்லறை கொடுத்தார்.

"என்ன சார் லேட்?"

"அதை ஏன் சார் கேக்கறீங்க. பிரதமர் வாஜ்பாய் வராராம். அதுக்கு பந்தோ பஸ்துன்னு சொல்லி அவர் வர்ற பாதையெல்லாம் அடைச்சுட்டு ஒரே அமர்க்களம். அப்புறம் flight லேட்டா வருதுன்னு தெரிஞ்சு இப்ப தான் விட்டானுங்க. திரிசூலம் தாண்டற வரைக்கும் டென்ஷனா தான் இருந்துச்சு. அதான் லேட் சார். சீட்டு எல்லாம் புல் சார். நீங்க வேண்ணா என்ஜின் மேல உக்காந்துக்குங்க."

"ரொம்ப நன்றி சார்"

ஓட்டுனர் ஏனோ பரபரப்பை இருந்தார். நேரத்துக்கு வண்டி போய் சேரலேன்னா மெமோ கொடுப்பாங்களோ? எத்தனையோ கேள்விகள் எழுந்தாலும் அதை மனதின் சுவரில் ஆணி அடித்து மாட்டி விட்டு, பதிலை அறிந்துக் கொள்ளாமலே அநாதையாக்கி விடுகிறேன். அப்படி பட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று.

பேருந்து தாம்பரம் தாண்டியதும், ஓட்டுனர் தன் திறமை அனைத்தும் காட்டி படு வேகமாய் ஓட்ட ஆரம்பித்தார். வேட்டைக்கு கிளம்பும் சிறுத்தை போல சீறி பரந்த பேருந்து லாவகமாக சாலைகளில் சென்று கொண்டிருந்த அனைத்து வாகனங்களையும் முந்தி கொண்டு விரைந்தது. பேருந்தில் இனி ஓட்டுனர் அருகே அமரவே கூடாது என்று சபதம் ஏற்கும் அளவிற்கு சூறாவளியாய் பறந்தது பேருந்து. வேகமாணியை உற்று பார்த்தேன், முள் பூஜ்யத்திலேயே படுத்துக் கொண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தது.

மதுராந்தகத்தில் வேண்டா வெறுப்பாய் நிறுத்தினார் ஓட்டுனர்.

"வழி சீட்டெல்லாம் ஏத்தாதேன்னு சொன்னா கேக்குறானா?"

ஓட்டுனர் வசை பாடிவிட்டு, கடிகாரத்தை பார்த்தார். பரபரப்பாய், ஒலிப்பான் மீது விரல்களை நடனமாட வைத்தார்.

"இவன் எவன்டா? இன்னிக்கு இப்படி பறக்கிறான்", என்று முனுமுனுத்து விட்டு " இருப்பா, டிக்கெட் ஏறுதில்ல" என்று உரத்து குரல் கொடுத்தார்.

நான் காலியான இருவர் இருக்கையில் அமர்ந்தேன். என் பின் இருக்கையில் ஒருவர் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். தம்பதியினர் ஏறி இடம் இருக்கா என்று நோட்டம் விட்டு விட்டு என்னிடம் வந்தார்...

" சார், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி பின்னாடி உக்காந்துக்குறீங்களா?"

என் உள்ளே ஒளிந்து கொண்டிருந்த குழந்தை மனசு ஜன்னலோர இருக்கையை விடாதாடா என்று அடம் பிடித்தது. நான் பின்னால் உட்கார்ந்து இருந்தவரை பார்த்தேன். நன்றாக அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார். வேண்டா வெறுப்பாய் எழுந்து பின்னால் அமர்ந்தேன்.

திண்டிவனத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் முன்பு ஒரு கனரக சரக்கு ஊர்தியை பேருந்து இடது பக்கம் முன்னேற, சரக்கு ஊர்தியின் ஓட்டுனர் சற்று பேருந்து பக்கமாய் வண்டியை ஒதுக்க, பேருந்துக்குள்  மயான அமைதி ஆனது. பேருந்து ஓட்டுனர் பலமாய் முயற்சித்து சாலையை விட்டு இறங்கி, சாலை ஓர மரத்தில் இடிப்பது போல் சென்று, சற்றே மயிரிழையில் பத்திரமாய் மீண்டும் வாகனத்தை கொண்டு வந்தார். மயான அமைதி கலைந்தது...

"பார்த்து ஓட்டுப்பா"
"என்ன அவசரம்?"
"நாங்க எல்லாம் குழந்தை குட்டிக் காரங்கப்பா"
"வேகமாய் போய் என்னத்த கிழிக்கப் போற"
"சாவு கிராக்கி. ஒரு நிமிஷத்துல எல்லாரையும் கொண்ணிருப்பியே!

ஆளாளுக்கு சத்தத்தால் உறுமி அடித்தனர். ஓட்டுனர் முகம் வெளிறி போய் இருந்தது. மரணத்தை மிக அருகில் பார்த்தது எங்களை விட அவர் தான் என்பது அவர் முகத்தில் தெரிந்தது. வண்டியை ஓரம் கட்டி, தண்ணீர் குடித்தார். பின் பயணத்தை தொடங்கினோம்.

சிறுத்தை வேகம் இப்பொழுது எங்கே போனது என்று தெரியவில்லை. இதுவரை பேருந்து ஓட்டியவரா இவர் என்று சந்தேகப் படும் அளவுக்கு மெதுவாய் ஓட்டினார். செஞ்சி தாண்டுவதர்க்கும் பயணிகளின் பொறுமை காணாமல் போவதற்கும் சரியாய் இருந்தது. காணாமல் போன பொறுமை கீழ்பெண்ணாத்தூர் வந்ததும் தொலைந்தே போனது.

"ஏம்பா, பஸ் ஓட்டுறியா? கட்ட வண்டி ஓட்டுறியா?"

"அதானே இப்படி ஓட்டுனா எப்ப போய் சேர்றது?" 

"சீக்கிரம் போப்பா"

முன்னுக்கு பின் முரணாய் எழுந்த கூக்குரல்கள் ஓட்டுனர் சற்று நிமிர்ந்தார். அவருக்கும் நேரமாகி விட்டது என்பதை அவர் முகம் காட்டியது. மிதமான வேகத்தில் வண்டியை எடுத்தார். திருவண்ணாமலை பணிமனைக்கு வந்து சேரும் பொழுது மணி எட்டு ஆனது. பயணிகளை கேட் அருகே இறக்கி விட்டனர். அனாதையாய் விட்ட கேள்விக்கு பதில் கேட்போம் என்று எண்ணம் எழுந்தது. சற்றே காத்திருப்போமே என்று வாசலில் காத்திருந்தேன். எனக்கு எதிரே ஒரு சிறுவனும் ஒரு பெண்மணியும் காத்திருந்தனர். அந்த சிறுவனின் கையில் ஒரு கோப்பை இருந்தது. அவன் முகத்தில் ஏக்கம், துக்கம், மகிழ்ச்சி என்று அனைத்து உணர்ச்சிகளின் கலவையாய் நின்றான். மீண்டும் ஒரு கேள்வி எழுந்து அநாதையானது.

உள்ளே இருந்து பேருந்து ஓட்டுனர் மெதுவாய் நடந்து வந்தார். நான் அவரை நோக்கி செல்லும் முன் அந்த சிறுவன் பாய்ந்து ஓடினான்.

"அப்பா"

"சொல்லுடா"

"என்னப்பா, இன்னிக்கு ஸ்கூல் ல ஆன்னுவல் டே பங்க்ஷன், நீங்க வரணும்னு சொல்லியிருந்தேனே. கண்டிப்பாய் வரேன்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே.."

"மன்னிச்சுடுப்பா. லேட்டாயிடுச்சு."

அந்த குடும்பம் தன் பையனின் வெற்றி குறித்து பேசிக் கொண்டு சந்தோஷமாய் கிளம்பினர். பதில் கிடைத்த சந்தோஷத்தில் நானும்...

விடியும் தருணம்

மழையில் நனைந்த
கோழி போல் 
சுருங்கி விட்டது
உலகம்...

துடிக்க மறந்து
விட்ட நிலையில்
இரும்பு துண்டமாய் 
இதயம்...

புதிய பொருளாதார 
கொள்கையுடன் 
உலக வங்கியின்
பயணம்...

கண்ணீர் சிந்தும்
கூட்டத்திடம்
குருதி உறிஞ்சும் 
அவலம்...

நமக்கென்ன என்று
இருந்தால்,
வாழ்வதிங்கு
சிரமம்...

நம் அனைவர்
கைகளும்
இணைந்து விட்டால்
விடியல் என்பது
சுலபம்...

கொடுக்க நினைப்பவன்

கடனா கொடுத்த பணத்தை ஆறு மாதமாகியும் திருப்பி கேக்கவே இல்லையே... மனம் உறுத்த நான் சுப்பிரமணி சார் வீடு நோக்கி நடந்தேன். வாசலை அடையும் பொழுது என் பெயர் அடிபட்டது..

"ஏங்க, சம்பளம் வரலேன்னு, பாபுவுக்கு பணம் கொடுத்தீங்களே, எப்ப திருப்பி தருவாராம்?"

"கொடுப்பான்மா! அவன் கிட்ட பணம் வந்தா உடனே கொடுத்திடுவான்."

"நீங்க கேட்டீங்களா?"

"எதுக்கு கேக்கணும்?"

"அப்ப தானே கொடுப்பார்."

"ஒன்னு புரிஞ்சுக்கம்மா. கொடுக்க கூடாதுன்னு நினைக்கிறவன், எவ்வளவு கேட்டாலும் கொடுக்க மாட்டான். கொடுக்கணும்னு நினைக்கிறவன், தினம் அதையே நினைச்சு தவியா தவிப்பான்... இரண்டு பேர் கிட்டயும் கேக்கிறது அனாவசியம். ஆனா பாபு இருக்கானே அவன் இரண்டாவது ரகம்."

என் மனம் அவர் காலை தேடியது....