Friday, November 18, 2011

புதுப் புரட்சி

நான் தமிழன்,
நீ தெலுங்கன்...

நான் இந்தியன்,
நீ பாகிஸ்தானி...

நான் பிராமணன்,
நீ சூத்திரன்...

நான் வலதுசாரி,
நீ இடது சாரி...

நான் ஆத்திகன்,
நீ நாத்திகன்...

நான் சீக்கியன்,
நீ கிருத்துவன்...

கடக்கும் திசை எங்கும்,
கண்ணுக்கு புலப்படாமல் சுவர்கள்..

நாம் கஷ்டப் படுபவர்கள்...
நாம் சுரண்டப் படுபவர்கள்...
என்ற ஒற்றுமை மட்டும் உறக்கத்தில்...

கண்கள் உறக்கத்தை கலைத்ததும்,
காற்றில் கரைந்து விடுகிறது சுவர்கள்...

யுகப் புரட்சி பார்த்தாயிற்று,
இந்த புதுப் புரட்சி?

Thursday, November 10, 2011

மழை

பறந்து சென்றவர்
திரும்பி வந்தனர்

எங்கு எடுக்கப் பட்டதோ
அங்கே திருப்பி வைக்கப் பட்டது..

நீரின் மீள் சுழற்சி,
கசடுகள் நீங்கி
சுத்தமாய் திரும்பி வந்தால்...

சாலையில்
கால்வாயில் தான்
சங்கமம்...


 தோழர் ஜெயராம் தினகரபாண்டியன் அவர்களின் வலைப்பூவில் மழை குறித்து கேட்ட கேள்விகளுக்கு என் பதில்...

Friday, November 4, 2011

2G ஊழல்

காத்தாடி
வால்
நூல் 

யார் காத்தாடி
யார் வால்
யார் நூல்
நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...

Thursday, November 3, 2011

மனசு

அடி மேல் அடி வைத்து
தடியை நிலத்தில் ஊன்றி,
ஒரு அடிக்கு 
ஒரு நிமிஷம் 
என்று நடந்து சென்றார்
ஒரு பெரியவர்...

மின்சார கட்டணம்
கட்ட கடைசி தேதி...

வேகமாய் நடந்து
அவரை கடந்தேன்...

கடந்த ஒரு நொடியில்
வேதனை பட்டிருப்பாரோ 
என்ற எண்ணம் 
மட்டும்... 

இன்னும் 
வரிசையில் நின்று 
கொண்டிருக்கிறது
என் மனசில்...

Friday, October 21, 2011

பொதுஉடமை vs CAPITALISM

வளைந்து நின்ற
கேள்விக்குறிகளை,
அடித்து நிமிர்த்தி
ஆச்சரியக் குறியாக்கி...

புரட்சி
விளைவித்த
மக்கள் ஜனநாயகம்...
தவறான கைகளில்
சிக்கி
சிதறுண்டு
மக்கள் வாழ்வை
மீண்டும் கேள்விக் குறியாக்கியது...

சோவியத் சிதறியதால்
பொது உடமை தோற்றது,
என்ற நையாண்டி
இன்று தலை குனிந்து
மௌனமாய் நிற்கிறது...

அமெரிக்கா பொருளாதாரம்
தரம் தாழ்ந்து
தனி உடமை தோற்று போய்...

அமெரிக்க மண்ணில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தை ஆதரித்து...

Thursday, October 20, 2011

ஐப்பசி அமாவாசை

மேசைக்கடியில் பதுங்கும்
நாய்களும்
பூனைகளும்..

உயிர் நடுக்கத்தில்
செல்லப் பிராணிகளும்..

ஊரெங்கும் வேட்டைக்காரர்களா?
மிரண்டு போய்
பறவை இனங்கள்..

அமைதியான தூக்கம்
கலைந்து அலறும்
பிஞ்சு உள்ளங்கள்...

காற்றில் கலக்கும்
கந்தக நெடி...

போர்களுக்கு மத்தியில்
வாழ்ந்தவர்களால்
அனுபவிக்க முடியுமா
பட்டாசுகளின் ஆரவாரத்தை?
எழுந்து அடங்கும் சந்தேகம்...

பலர் சந்தோஷங்களில்
தீப ஒளி என்றாலும்,
பலர் பயத்தினில்
இருண்டே தான் கிடக்கிறது
ஐப்பசி அமாவாசை...

அரசியல்

அர்த்தம் மாறிய வார்த்தை
அரசியல்...

உயிர் இழந்த வார்த்தையால்
இருளில் கிடக்கிறது பலர் வாழ்வு...

நச்சு நிரலாய்
மாறிய வார்த்தையை
மீட்டெடுப்போம்...

இது மொழிப்போர் அல்ல
நம் வாழ்வின் உயிர்ப் போர்...